ஊட்டியில் மின்சாரமும், தண்ணீர் வசதியும் இல்லாத பிரமாண்டமான வீட்டில் வசிக்கும் அப்துல் ரஃபே, அங்கு ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வருகிறார். அவரது 3 மகன்கள் மிதுன்.வி, ரித்திக் மோகன், நிதின் தினேஷ். இவர்களின் ஒரே செல்ல நாய், கேத்தி. தனது மாறுபட்ட குணத்தால் மனைவி பிரார்த்தனா காந்தை விட்டு பிரிந்த அப்துல் ரஃபே, பாசம் என்ற பெயரில் மகன்களை அதிக கண்டிப்புடன் வளர்க்கிறார். தந்தையின் மிரட்டலுக்கு பயந்து 3 மகன்களும் நடுங்குகின்றனர். இதையடுத்து அம்மாவிடம் சென்ற அவர்கள், வேறு பள்ளியில் படிக்க பண உதவி கேட்கின்றனர். ஆனால், அவர்களுக்கு பண உதவி செய்ய முடியாத நிலையில் அம்மா தவிக்க, மீண்டும் அப்பாவிடம் வரும் 3 மகன்களும் மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர். இந்நிலையில், மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ வருகிறார், பிரார்த்தனா காந்த்.
ஆனால், தனது மகன்களின் எதிர்கால வாழ்க்கைக்காக அப்துல் ரஃபே எடுக்கும் முடிவு எதிர்பாராதது. அது என்ன என்பது மீதி கதை. தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி அவினாஷ் பிரகாஷ் எழுதி இயக்கி, ஒளிப்பதிவு செய்து, படத்தொகுப்பு பணியையும் மேற்கொண்டுள்ளார். தந்தையின் கோணத்தில் கதை நகர்ந்தாலும், அதில் 3 மகன்களின் பார்வையை மையப்படுத்தி இருப்பது தனிச்சிறப்பு. தந்தைக்கும், மகன்களுக்குமான பாசம் பயப்படுவதற்கு மட்டுமே முக்கியத்துவம் பெறும்போது, இப்படியொரு தந்தை தேவையா என்று பார்வையாளர்கள் எரிச்சலடைவதே படத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.
தந்தையாக நடித்த அப்துல் ரஃபே, கத்தி மேல் நடக்கும் கேரக்டரை 100 சதவீதம் நேர்த்தியாக கையாண்டுள்ளார். அவரது மனைவியாக பிரார்த்தனா காந்த் நல்ல தேர்வு. 3 மகன்களாக வரும் மிதுன்.வி, ரித்திக் மோகன், நிதின் தினேஷ் ஆகியோர், அந்தந்த கேரக்டராகவே மாறி சிறப்பாக நடித்துள்ளனர். சைக்கோ கதையாக தெரிந்தாலும், ஆழமாக யோசிக்கும்போது, இன்றைய வாழ்வியல் தன்மையை அப்படியே பிரதிபலித்து இருக்கிறது. பின்னணி இசையின் மூலம் வேத் சங்கர் சுகவனம் படத்துக்கு மேலும் உயிரூட்டியுள்ளார். சோக காட்சிகளை கருப்பு, வெள்ளையில் பதிவு செய்துள்ளனர். ஊட்டியின் இயல்புத்தன்மை மாறாமல் பதிவாகி இருக்கிறது.