கூட்டுத் தொழிலில் ராஜயோகம் யாருக்கு?

ஜாதகம் என்று எடுத்துக் கொண்டால் அதில் யோக அவயோகம் இரண்டும் கலந்தே இருக்கும். எல்லாமே நிறைவாக உள்ள ஜாதகம் எதுவும் கிடையாது. நிறை, குறைகள் இணைந்து இருப்பதுதான் ஜாதக அமைப்பு. நிறை அதிகமாக உள்ள ஜாதகம் வெற்றி அடைகிறது. ஒருவர் எந்த வகையிலாவது முன்னேற்றத்திற்கு வருகிறார் என்றால் அவருக்கு பல கிரக அமைப்புகள் சாதகமாக இருக்கும். குறிப்பாக ராசிக்கட்டம், நவாம்சகட்டம் இந்த இரண்டிலும் கிரகம் பலமாக இருப்பது அவசியம். இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ராசிக் கட்டத்தில் பலம் குறைவாக இருந்தாலும் நவாம்ச கட்டத்தில் உச்ச வீட்டிலோ, சொந்த வீட்டிலோ இருந்தால் அம்ச பலம் காரணமாக அக்கிரகம் யோகத்தை செய்யும். இதைக் கருத்தில் கொண்டுதான் அவன் நல்ல அம்சம் உள்ள ஆள் என்று குறிப்பிடுவார்கள். ஜாதகத்தில் மிகவும் முக்கியமானது லக்னம், இந்த இடத்தில் இருந்துதான் ஒரு ஜாதகம் இயக்கப்படுகிறது. இதை இயக்குபவர்தான் லக்னாதிபதி.

* லக்னம், லக்னாதிபதி இரண்டும் பலமாக இருக்க வேண்டும். லக்னத்தை யோக கிரகங்கள் பார்ப்பது மிகவும் அவசியம். லக்னாதிபதி நீசம் அடையாமல் 6,8,12ல் மறையாமல் இருப்பது மிக மிக முக்கியம். லக்னாதிபதி 5-ஆம் வீட்டிலோ, 9-ஆம் வீட்டிலோ, 10-ஆம் வீட்டிலோ இருப்பது மிகச் சிறப்பாகும்.

* லக்னாதிபதியுடன் 2,4,5,9,10 ஆகிய ஸ்தானங்களுக்கு உரிய கிரகங்கள் சேர்ந்தோ, பார்வை பெற்றோ சாரம் பெற்றோ, பரிவர்த்தனை அடைந்தோ, ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் பெறுவது புகழ், கீர்த்தி யோகமாகும்.

* லக்னம், லக்னாதிபதி வர்க்கோத்தமம் அடைவது மிகவும் சிறப்பு, அஷ்டவர்க்கப்பரல் என்ற முக்கியமான ஜோதிட கணக்கு ஒன்று உள்ளது. இந்த பரல் கணக்கின்படி லக்னம் 30 பரல்களுக்கு குறையாமல் இருப்பது மிகவும் அவசியம்.

* லக்னாதிபதி என்ற கிரகத்துடன் தனம், வாக்கு, குடும்பம் போன்றவற்றிற்கு காரணமான இரண்டாம் அதிபதி, பூர்வ புண்ணிய யோகத்தை ஏற்படுத்தும் ஐந்தாம் அதிபதி அனுபவிக்கின்ற பாக்கியத்தை அருளும் பாக்கியஸ்தானாதிபதி, வேலை, தொழில், வியாபாரம் ஆகியவற்றைத் தரும். பத்தாம் அதிபதி ஆகிய கிரகங்கள் ஏதாவது ஒரு வழியில் லக்னாதிபதியுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

* 2,5,9,10-க்குடையவர்கள் ராசி மற்றும் நவாம்ச கட்டத்தில் பலமாக இருப்பது மிக மிக அவசியம்.

* நவகிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் பலவகையான அம்சங்கள், ஆதிக்கங்கள் இருந்தாலும் குறிப்பாக சந்திரன், புதன், செவ்வாய், சுக்கிரன் இந்த நான்கு கிரகங்களும் ஒருவர் ஜாதகத்தில் நல்ல யோக பலத்துடன் இருப்பது அவசியம்.

* லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, தர்ம கர்மாதிபதிகளின் யோக தசைகள் நமக்கு உரிய காலத்தில் அனுபவிப்பதற்கு ஏற்றாற்போல் அமைய வேண்டும்.

* யோக அமைப்புகள், கிரக சேர்க்கை பலம் கொண்ட ஜாதகம் நமக்கு பல வகைகளில் சாதகமாக இருக்கும். எந்த நிலையிலும் மிகப்பெரிய சரிவு, நஷ்டங்கள், கஷ்டங்கள் வராது. அதே நேரத்தில் பிரபல யோக தசைகள் வரும் போதுதான் கிரக பலமும் நடைபெறுகின்ற ராஜயோக தசையும் நமக்கு பல மடங்கு வளமான, அதிர்ஷ்ட கரமான வாழ்க்கையை அமைத்துத் தரும்.

* சுப ஆதிபத்தியம் பெற்ற கிரகங்களின் தசைகளில் வரும் வளர்ச்சி, புகழ், செல்வம் போன்றவை நிலைத்து, நீடித்து அடுத்த தலைமுறைக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும்.

* விபரீத ராஜயோகம், நீச்ச பங்க ராஜயோகம் 3,6,8,12-ஆம் அதிபதிகளின் சேர்க்கை தொடர்பு மூலம் உண்டாகும் பணபரஸ்தான யோக போன்றவை அந்தந்த தசா காலங்களில் நல்ல வளமான வாழ்க்கையைத் தந்து. அதன்பின்பு பல வகைகளில் ஜாதகரின் தசா மாற்றத்தின் படியும், ஜாதகரின் குடும்பத்தில் உள்ளவர்களின் தசா மாற்றங்களின் படியும். சில, பல பிரச்சினைகளால் வாழ்க்கை திசை மாறிச் செல்லும். மாறாக ஒரு சிலருக்கு தொடர்ந்து யோக தசைகள் வரும்போது சிறு சறுக்கல்கள், பிரச்னைகள் என்று சந்தித்தாலும் அடித்தள யோகம், வாழ்க்கைத்தரம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

* சிறப்பான அமைப்பாக சாஸ்திரத்தில் கேந்திரம் கட்டிய ஜாதகம் என்று சொல்வார்கள். அதாவது லக்னம் முதல் கேந்திரம், அதற்கடுத்து 4,7,10 இந்த நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் மிகச்சிறப்பான அம்சமாகும். இந்த இடங்கள் சம சப்தம பார்வை உள்ள இடங்கள். ஆகையால் கிரக பார்வை தொடர்பு உண்டாவதன் மூலம் அதிர்ஷ்ட தேவதை அள்ளித் தருகிறாள். அதேபோல் லக்னம், ஐந்து, ஒன்பது என்ற ஸ்தானங்களில் யோக கிரகங்கள் இருக்கும் போது பிறந்தவர்கள் சுபமங்கள யோகத்தை அனுபவிப்பார்கள்.

* வளமான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் சிறப்பான கிரக சேர்க்கைகள் தர்ம கர்மாதிபதி யோகம் எனும் லக்னத்திற்கு 9, 10 க்குடையவர்கள் சேர்க்கை.

ஒன்பதாம் இடத்திற்கு 9, 10-க்குடையவர்கள் சேர்க்கை.

பத்தாம் இடத்திற்கு 9, 10, 5 - க்குடையவர்கள் சேர்க்கை.

லக்னத்திற்கு 9, 10, 2 - க்குடையவர்கள் சேர்க்கை.

லக்னாதிபதியுடன் 2,5,9,10- க்குடையவர்கள் சேர்க்கை

லக்னத்திற்கு 10, 2- க்குடையவர்கள் சேர்க்கை தசம தனலட்சுமி யோகம்.

லக்னத்திற்கு 10, 4- க்குடையவர்கள் சேர்க்கை விசேஷ பூமி புதையல் யோகம்.

லக்னத்திற்கு கேந்திராதிபதி, கோணத்திலும், கோணாதிபதி, கேந்திரத்திலும் இருப்பது அதாவது நான்காம் இடம் என்ற கேந்திரத்திற்கு உரிய கிரகம் ஒன்பதாம் இடம் என்ற கோணத்தில் இருப்பது ஒன்பதாம் இடம் என்ற கோணத்திற்குரிய கிரகம் நான்காம் இடம் என்ற கேந்திரத்தில் இருப்பது. இன்னும் இதைப் போன்ற சில அபூர்வ கிரக சேர்க்கை பார்வை, பரிவர்த்தனை, சார பரிவர்த்தனை போன்றவைகள் நம் ஜாதகத்தில் இருந்து, அந்த பலன்களை அனுபவிக்கக்கூடிய நேரம் காலம் எனும் தசா புக்திகள் நமக்கு அமையும் போது எல்லாம் கூடிவரும். மண்ணைத் தொட்டாலும் பொன்னாகும்.

முயற்சி இல்லாமலே காரியங்கள் நடக்கும். பட்டம், பதவி விருதுகள் தேடி வரும். அதிக உழைப்பு இல்லாமலே அளப்பரிய செல்வம் சேரும். தர்ம காரியங்கள், அறக்கட்டளை தொடங்குதல், ஆன்மிக அறப்பணிகளில் ஈடுபடுதல். சமூகத்தில் மதிப்பு. சமூகத்தொண்டு, உயர்ந்த பதவிகள், உச்ச பதவிகளில் இருப்பவர்களின் நட்பு. தொடர்பு என எல்லாவற்றையும் அந்த இறையருள் கூட்டுவிக்கும். இந்த சாஸ்திர சாராம்சங்கள் எல்லாம் சப்த ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழங்கிய மிகப் பழம்பெரும் சுவடியான தெய்வ கியாதி காமதேனு என்ற நூலில் உள்ள வாக்கியத்தின் அடிப்படையில் வாசகர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளோம்.

Related Stories: