மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, ஜாக்கி ஷ்ரப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி‘. உலக கேங்ஸ்டர்களுக்கெல்லாம் கேங்ஸ்டர் ஆக ஏகே என்கிற ரெட் டிராகன் (அஜித் குமார்). குடும்பத்தின் மீதான அக்கறை காரணமாக கேங்ஸ்டர் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு போலீஸில் சரணடைந்து 14 வருடங்களாக ஜெயிலில் இருக்கிறார். ஏகேவின் மகன் விஹான் ஏகேவுக்கு (கார்த்திகேயா தேவ்) ஏகே வின் முன்னாள் விரோதிகளால் ஆபத்து வருகிறது.
பொய் வழக்குகளால் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார் விகான். தன் மகனைக் காப்பாற்ற மீண்டும் தனது பழைய வன்முறைகளை கையில் எடுக்கிறார் ஏகே. முடிவு என்ன என்பது மீதிக் கதை. அஜித் குமார் (எ) ஏகே… என்னும் ஒற்றை மனிதருக்காகவே முழு படமும் எழுதப்பட்ட உருவாக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க அஜித் மந்திரம். மாஸ் காட்டுகிறார், பல கெட்டப்களில் அப்ளாஷ் அள்ளுகிறார். இதுவரை அவர் கடைபிடித்த மொத்த கொள்கைகளையும் விட்டுவிட்டு அவரது ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறார். சரவெடி பட்டாசாக அவரது பழைய படங்களின் ரிபரசன்கள் நிரம்பிக் கிடக்கின்றன.
அடுத்து படத்தில் கவனம் ஈர்ப்பவர் அர்ஜுன் தாஸ். அவரது குரலும், உடல் மொழியும் இந்தப் படத்துக்கு இன்னொரு சிறப்பு. ஆதிக்கின் சிறப்பான வில்லனாக இது வரை இல்லாத புது கெட்டப், உடல் மொழியாக அடடே ரகம். குறிப்பாக அஜித் மற்றும் அர்ஜுன் தாஸ் இடையே நிகழும் இடைவேளைக்கு முன்பான உரையாடல் காட்சி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பொதுவான பார்வயாளர்களையும் நிச்சயம் கவரும். த்ரிஷா, பிரசன்னா, பிரபு, ஷைன் டாம் சாக்கோ, ஜாக்கி ஷ்ரப் , பிரியா வாரியர், உள்ளிட்ட நடிகர்கள் அத்தனை பேரும் அவர்களுக்கு கொடுத்த வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள். எனினும் அத்தனை பேருமே அஜித்தின் மாஸ் குறித்து பேசவும் அவர் வரலாறு குறித்து புகழ்ந்து பாடவும் தான் அதிகம் பயன்பட்டிருக்கிறார்கள்.
படத்தின் அடுத்த பலம் பின்னணி இசையும் ரிஃப்ரல் பாடல்களும் தான். ஜிவி பிரகாஷின் அதிரடி பின்னணி இசை ஒரு பக்கம் இன்னொரு புறம் என்பது மற்றும் தொண்ணூறுகளின் பாடல்களின் தொகுப்பு என படத்தில் மாஸ் காட்சிகளுக்கு நூறு சதவீதம் கேரண்டி ஜிவி தான். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் கலர்ஃபுல் காட்சிகளுடன் விஷுவல் விருந்து. படத்தின் எடிட்டிங்கில் தன்னையும் ஒரு அஜித் ரசிகராக நிறுத்தியே படத்தொகுப்பு செய்திருக்கிறார். காட்சிகள் பாடல் டெம்போவில் நடனம் ஆடுகின்றன.
எல்லாம் சரி கதை எங்கே என்றால் ஆளாலுக்கு வராத போனை கையில் எடுத்துக்கொண்டு வெளியே சென்று விடுவார்கள் போல . திரைக்கதையும் அஜித் மேனியாவாக அமைக்கப்பட்டுள்ளது. எனினும் படத்தின் டிரெய்லர் , புரமோஷன் , பேட்டி என எங்கேயும் கதை குறித்து படக்குழு எவ்வித நம்பிக்கையும் கொடுக்கவில்லை. மேலும் இது ரசிகர்களுக்கான படம் என்பதை முன்கூட்டியே தெளிவுபடுத்தி விட்டார்கள் என்பதால் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செல்வது நல்லது. ‘ குட் பேட் அக்லி’ அஜித் ரசிகர்களுக்கு வெரி குட் மற்றவர்களுக்கு இதுவும் ஒரு விடுமுறை கால பெரிய படமாக கடந்து போகும்.