சென்னை: இ5 எண்டர்டெயின்மெண்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிக்க, தங்கர் பச்சான் மகன் விஜித் பச்சான் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘பேரன்பும் பெருங்கோபமும்’. பாலுமகேந்திரா பட்டறை மாணவரும், இயக்குனர் கரு.பழனியப்பன் உதவியாளருமான சிவப்பிரகாஷ் இயக்குனராக அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் ஷாலி, மைம் கோபி, அருள்தாஸ் நடிக்கின்றனர். இளையராஜா இசை அமைக்கிறார். ஜே.பி.தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, முருகேஷ் பாபு வசனம் எழுதுகிறார். இப்படம் சம்பந்தமான நிகழ்ச்சியில் சீமான், எஸ்.ஏ.சந்திரசேகரன், தங்கர் பச்சான், கரு.பழனியப்பன், வசந்தபாலன், திருமலை, சித்ரா லட்சுமணன், தேவயானி, லட்சுமி ராமகிருஷ்ணன், சினேகன் பங்கேற்றனர்.
அப்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது: ஒரு படம் நன்றாக ஓட வேண்டும் என்று, போராடி செலவு செய்த தயாரிப்பாளர்கள் இருந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களை பெற்ற இயக்குனர்கள் மிகப்பெரிய பாக்கியசாலிகள். இன்று ஒரே படத்தை போல 10 படங்கள் வருகின்றன. இன்றைய படங்களில் அழகியல் என்பது இருப்பதில்லை. ஒருகாலத்தில் தரமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கிய ஹீரோக்கள், இன்று கமர்ஷியல் என்ற வட்டத்துக்குள் சிக்கிவிட்டனர். இப்படத்தின் கதையை கேட்கும்போது தங்கர் பச்சான் தலையிடவில்லை என்று விஜித் சொன்னார். அப்படி என்றால் நீ ஜெயித்துவிட்டாய் என்று அர்த்தம்.