இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளாவில் வெளியிடப்பட்டது. இப்படம் தெலுங்கைத் தாண்டி தமிழ், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் தமிழ் பதிப்பு டிரெய்லரில் கங்கைக்கு தெற்கு பகுதியில் ஓடேலா எனும் ஊரில் பிரேத ஆத்மா உருவெடுத்துள்ளதாக பின்னணி குரலில் சொல்லப்படுகிறது. ஆவியான தனது ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும் பழிவாங்க காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. பின்பு அதை விரட்ட சாமியராக தமன்னா வருகிறார். பின்பு இருவருக்கும் இடையில் நடக்கும் மோதல்கள் குறித்தான காட்சிகள் இடம் பெறுகிறது.
டிரெய்லரில் இடம் பெறும் சில வசனம் தற்போது வைரலாகி வருகிறது. ‘நிக்கிறதுக்கு தேவை பூமாதா… நாம வாழுறதுக்கு தேவை கோமாதா’, ‘நீங்க வாழ மாட்டை கொல்ல வேண்டிய அவசியம் இல்ல. அதோட கோமியத்தை வித்து கூட பொழச்சுக்க முடியும்’ என தமன்னா பேசும் இடம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோமியத்தை குடிக்க வேண்டும் என கூறும் கோஷ்டியை ஆதரிப்பதுபோல் முட்டாள்தனமாக வசனம் இடம்பெற்றுள்ளது. இயக்குனர் இந்த வசனத்தை சொன்னால் அதை பகுத்தறிவு இல்லாமல் தமன்னா பேசலாமா என கேட்டு நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.