புதுடெல்லி: பிரிட்டிஷ்-இந்திய திரைப்பட இயக்குநர் சந்தியா சூரி இயக்கிய திரைப்படம் ‘சந்தோஷ்’ . கடந்த ஆண்டு இந்த படம் வெளிநாடுகளில் வெளியானது. ‘சந்தோஷ்’ படம் இங்கிலாந்து சார்பாக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்ட்டது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தணிக்கை வாரியம் (சென்சார் போர்டு) தடை விதித்துள்ளது. வட இந்தியாவில் நடக்கும் கதையான இந்தப் படம். கணவன் இறந்த பிறகு அவருக்குப் பதிலாக காவல் பணியில் சேரும் ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. பின்னர் அந்தப் பெண் போலீசிடம் ஒரு தலித் பெண்ணின் கொலை வழக்கு ஒப்படைக்கப்படுகிறது.
வட இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு, இஸ்லாமிய வெறுப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றை பற்றி இப்படம் பேசுகிறது. இந்நிலையில் படத்தில் உள்ள கருத்துக்கள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறி பல பகுதிகளை வெட்ட தணிக்கை வாரியம் கோரியுள்ளது. ஆனால் அதற்கு படக்குழு மறுத்துள்ளதால் படத்தை வெளியிட தடை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய படத்தின் ஹீரோயின் ஷஹானா கோஸ்வாமி. \”படத்தை வெளியிடுவதற்குத் தேவையான சில மாற்றங்களின் பட்டியலை சென்சார் வழங்கியுள்ளது. எங்கள் முழு குழுவும் அதனுடன் உடன்படவில்லை. ஏனென்றால் அவர்கள் படத்தில் நிறைய மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்கள், எனவே, இந்திய திரையரங்குகளில் வெளியிட முடியவில்லை\” என்றார்.