சினிமாவில் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படுகிறார், ‘சுந்தரா டிராவல்ஸ்’ ராதா. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவியை பிரியும் கணவர், லக்னோவில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து, சிக்கன் கடை நடத்துகிறார். உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ராதா, தனது மகன் ராகின் ராஜிடம், ‘உன் அப்பாவை நேரில் சந்தித்து, நீதான் அவரது மகன் என்று சொல்லி, அவரிடம் நான் மன்னிப்பு கேட்டதாக சொல்’ என்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.டான்ஸ் மாஸ்டர் அம்மா ராஜசேகர் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவரது மகன் ராகின் ராஜுக்கு முதல் படம் மாதிரி தெரியவில்லை. ஆக்ஷன், சென்டிமெண்ட், லவ் ஏரியாக்களில் புகுந்து விளையாடி இருக்கிறார்.
சேலம் வேங்கை அய்யனார் வில்லத்தனம் செய்திருக்கிறார். மகனை கொன்றவனை பழிவாங்க துடிக்கும் தாய் விஜி சந்திரசேகரின் வில்லித்தனமும், மகன் மீது பாசம் பொழியும் ராதாவும், ராகின் ராஜுவின் காதலில் மயங்கும் அங்கிதாவும், ஹீரோவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இந்திரஜாவும் மற்றும் பிரேம்நாத், ரோஹித் எஸ்தர், அவினாஷும் கேரக்டருக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர். ஷியாம் கே.நாயுடுவின் ஒளிப்பதிவில் குறையில்லை. தமன் பின்னணி இசை விறுவிறுப்பு. வன்முறை காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அம்மா சென்டிமெண்ட் அவற்றை மறக்கடிக்க செய்கிறது. ரத்தத்தையும், சத்தத்தையும் சற்று குறைத்திருக்கலாம்.