வல்லாள உழவர்!

அடுத்தவர்க்குக் கொடுப்பது, ஓர் அபூர்வமான கலை. அது எல்லோர்க்கும் வாய்த்து விடாது. கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கோடியில் ஒருவருக்குத்தான் வாய்க்கும் என்பது ஔவையார் வாக்கு. அப்படிப்பட்ட ஒருவர்...வல்லாளன் எனும் உழவர்! “ஆண்டவன் என்னைப் படைத்ததே, உழுது அடுத்தவர்க்கு உணவு இடுவதற்காகத் தான் “என்ற எண்ணம் கொண்டவர் அவர்; அதைச் செயலிலும் காட்டினார். அவர் இருந்த ஊரில், யாரும் ஒருவர் கூடப்பசியோடு இருந்ததில்லை. தமிழ்ப்புலவர்களிடம் தனிப் பிரியம் கொண்ட வல்லாளன், அவர்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுப்பார்.வல்லாளனின் பெருமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவோ என்னவோ; ‘‘வல்லாளன் இருக்கும்போது நான் எதற்கு?” என்பதைப்போல, மழை மேகங்கள் மறைந்தன. மழையில்லை. பஞ்சம் தலைநீட்டிப் படர்ந்து பரவியது.

வல்லாளன் தன்னிடம் இருந்த அரிசியைத் தந்து, ஏழைகளைக் காத்தார்; அது தீர்ந்ததும் நெல்லைத் தந்து காப்பாற்றினார். அது தீர்ந்ததும் தன் செல்வங்களை விற்று, அதில் கிடைத்ததை வைத்து ஏழைகளைக் காப்பாற்றினார். கடைசியில் தன்னிடம் இருந்த விலை உயர்ந்த ஆடைகளை விற்று, அதில் கிடைத்ததை வைத்து ஏழைகளைக் காப்பாற்றினார். உழவரான வல்லாளன் செய்யும் உத்தமத் தொண்டு, மன்னரை எட்டியது; ‘‘நாம் செய்ய வேண்டியதை, எங்கோ ஒரு சிற்றூரில் இருந்து செய்து வருகிறாரே! உடனடியாக அவரை அழைத்துப் பாராட்ட வேண்டும்” என்று வாய்விட்டுச் சொல்லி, முறைப்படி வல்லாளனுக்கு அழைப்பு அனுப்பினார் மன்னர்.

அந்த அழைப்பைக் கண்ட வல்லாளன், “என்ன செய்து விட்டேன் நான்! என் கடமையை, அதுவும் ஏதோ முடிந்தவரை செய்தேன்.

அவ்வளவுதான்! இதற்குப்போய் எனக்குப் பாராட்டா?” என்றவர், மறுக்க முடியாததன் காரணமாக அரசவைக்குப் புறப்பட்டார்.போகுமிடம் அரசவை ஆயிற்றே! விலை உயர்ந்த ஆடைகளையெல்லாம் விற்று, தர்மம் செய்தாகி விட்டது;அதனால் இருக்கும் ஆடைகளில், ஓரளவிற்கு நல்ல ஆடைகளாகத் தேடி, அணிந்து கொண்டு புறப்பட்டார் வல்லாளன்.

“என்னப்பா இது? எதையாவது செய்யலாம்னு போனாக்க, நமக்கு முன்ன நம்ம நேரம் அங்க நிக்கிதே!” என்று நம்மில் பலர் சலித்துக் கொள்வதைப்போல, வல்லாளரின் நேரம் அவருக்கு முன்னால் வந்து நின்றது.

அரசவைக்குப்போய்க் கொண்டிருந்த வல்லாளனை, வழியில் சந்தித்தார் புலவர் ஒருவர்; “ஐயா! வல்லாளரே!

உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டுத்தான் வந்திருக்கிறேன். என் மேலாடையையும் வேட்டியையும் பாருங்கள்! இவற்றில் நெய்த நூல்களை விடத் தைத்த நூல்கள்தாம் அதிகம். ஒரு மேலாடையும் வேட்டியும் தாருங்கள் எனக்கு!” என வேண்டினார்.

வல்லாளன் யோசிக்கவே இல்லை; ‘‘நல்லவேளை! என்னிடம் இருப்பதைத்தான் கேட்டீர்கள்! இந்தாருங்கள்! வீட்டிலிருந்து வேறு ஆடைகளை வரவழைத்துக் கொள்கிறேன்” என்றபடியே, தன் வேட்டியையும் மேலாடையையும் அவிழ்த்து, அப்படியே புலவரிடம் கொடுத்து

விட்டார், வல்லாளன்.புலவர் போய் விட்டார்.

வல்லாளன் நிலை? உள்ளாடையுடன் நின்றார். அப்படியே அரண்மனைக்குப்போக முடியுமா? அல்லது அங்கேயே நிற்கத்தான் முடியுமா? அருகிலிருந்த குளத்தில் ‘பளிச்’சென்று இறங்கி, இடுப்பளவு நீரில் நின்றார் வல்லாளன். பிறகு, அந்தப் பக்கமாகப்போன சிலரிடம் சொல்லி, வீட்டிலிருந்து வேறு ஆடைகளை வரவழைத்து அணிந்த வல்லாளன், அரசவைக்குப் போனார்.

அதற்குள், வல்லாளன் புலவருக்கு ஆடைகள் அளித்த தகவலும் அரசருக்குப் போனது; மன்னர் வியந்தார்; “என்ன மனசு! வள்ளல்! வள்ளல் இந்த உழவர் வல்லாளன்!” என்றார். அதேசமயம் வல்லாளன் அரசவையில் நுழைய, சிம்மாசனத்தில் இருந்து எழுந்த அரசர், முன்வந்து வல்லாளனை வரவேற்றார்; அனைவர் முன்னிலையிலும் வல்லாளனைப் பாராட்டினார்.

பிறகென்ன? மழை பெய்யப் பஞ்சம் தீர்ந்தது. தொண்டை நாட்டில் மாவளம் எனும் ஊரில் நடந்த நிகழ்வு இது. வல்லாளனைப் போன்றவர்களால்தான், உலகம் வாழ்ந்தது; வாழ்கிறது; வாழப் போகிறது!

 - V.S. சுந்தரி

Related Stories: