சென்னை: பிரபாஸ் ஜோடியாக ‘தி ராஜா சாப்’ பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார், நிதி அகர்வால். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதன் 2வது பாடல் வெளியீட்டு விழா, கடந்த 17ம் தேதி ஐதராபாத்திலுள்ள மிகப்பெரிய மாலில் நடந்தது. இதில் நிதி அகர்வால், இசை அமைப்பாளர் தமன் உள்பட படக் குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தபோது நிதி அகர்வால், திடீரென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக்கொண்டார். அப்போது சிலபேர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திரையுலகினர் பலர் நிதி அகர்வாலுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிவாஜி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ‘பெண்கள் கண்டபடி உடை அணிந்தால் பிரச்னைதான். நடிகைகள் வெளியே வரும்போது கண்ணியமான உடைகள் அணிய வேண்டும்’ என்று பேசியதற்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து மன்னிப்பு கேட்ட சிவாஜி, நிதி அகர்வாலுக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகுதான் இதுபோன்ற கருத்து தனக்கு தோன்றியதாக சொன்னார். இந்நிலையில் நிதி அகர் வால் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘பாதிக்கப்பட்ட வரையே குறை சொல்வது என்பது, பிரச்னையை மேன்மேலும் திசை திருப்புவதாகும்’ என்று கோபத்துடன் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
