தனது கணவர் குரு பிரகாஷுடன் நிம்மதியாக வாழ்ந்து வரும் ஸ்வேதா ஸ்ரீம்டனுக்கு ஸ்மார்ட்போன் மீது ஆசை ஏற்பட, உடனே ஒரு ஸ்மார்ட்போனை குரு பிரகாஷ் வாங்கி கொடுக்கிறார். பொழுதுபோக்கிற்காக சோஷியல் மீடியாவை பயன்படுத்தும் ஸ்வேதா ஸ்ரீம்டன், பிறகு அதற்கு அடிமையாகி, ரகசிய சினேகிதன் வேல்முருகனுடன் வாட்ஸ்-அப் மூலம் பழகுகிறார். இதையறிந்த குரு பிரகாஷ் மனைவியை கண்டிக்க, தனது செயலை நியாயப்படுத்தும் ஸ்வேதா ஸ்ரீம்டனால் குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.
தங்களது கேரக்டர்களை நன்கு உணர்ந்து குரு பிரகாஷ், ஸ்வேதா ஸ்ரீம்டன், வேல்முருகன் ஆகியோர் யதார்த்தமாக நடித்துள்ளனர். மற்றும் பத்மா, நிஷா, பாக்யராஜ், கந்தவேலு, பிரசாந்தி, பிரதீபா, ரவி ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கின்றனர். டாக்டர் சுரேஷ், எஸ்.சுப்பிரமண்யா ஆகியோரின் பின்னணி இசை, படத்துக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது. ஷாம்ராஜ் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. எழுதி இயக்கியுள்ள சேகர் கன்னியப்பன், இன்றைய சூழ்நிலையில் சோஷியல் மீடியாவுக்கு அடிமையாகி பெண்கள் பாதிக்கப்படுவதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்.
