ஐதராபாத்: கவர்ச்சி உடை விமர்சனத்துக்கு நடிகை நிதி அகர்வால் பதிலடி கொடுத்துள்ளார். நடிகை நிதி அகர்வால் கடந்த சில நாட்களுக்கு முன் ஐதராபாத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள ராஜா சாப் பட நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வெளியில் வரும்போது கூட்டத்திற்கு நடுவில் சிக்கி கொண்டார். அந்த வீடியோ வைரலான நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பிரபலங்கள் பலரும் நடிகைக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்நிலையில் நடிகைகள் வெளியில் வரும்போது கண்ணியமாக உடை அணிந்து வர வேண்டும் என சிவாஜி என்ற தெலுங்கு நடிகர் பேசியது சர்ச்சை ஆகியுள்ளது.
அதற்கு பிறகு மன்னிப்பு கேட்ட நடிகர் சிவாஜி, ‘இருப்பினும் தான் சொன்ன கருத்தில் இருந்து மாற போவதில்லை’ என கூறியிருக்கிறார். நிதி அகர்வால் சம்பவத்திற்கு பிறகுதான் நடிகைகள் உடை பற்றி தனக்கு பேச தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பட நிகழ்ச்சிக்கு கவர்ச்சியாக வந்ததை பற்றி வந்திருக்கும் விமர்சனத்திற்கு நடிகை நிதி அகர்வால் பதிலளித்து இருக்கிறார். அதாவது, “பாதிக்கப்பட்டவரை குறை கூறுவது கையாளுதல் என்று அழைக்கப்படுகிறது” என கோபமாக பதிவிட்டு இருக்கிறார்.
