தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று, அங்கு சில ஹிட் படங்களில் நடித்து, தற்போது பான் இந்தியா ஸ்டாராக புகழ்பெற்று இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அவரது நடிப்பில், இந்த ஆண்டில் ‘சாவா’, ‘சிக்கந்தர்’, ‘தாம்மா’, ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ ஆகிய படங்கள் வெளியானது. இதில் ‘சாவா’, ‘தி கேர்ள்ஃபிரண்ட்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் ஹனு ராகவபுடியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ‘மைசா’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
இதில் அவர் மைசா என்ற பழங்குடி பெண் வேடத்தில் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் நடிக்கின்றனர். சமீபத்தில் ‘மைசா’ படத்தின் முதல் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. இதில் ராஷ்மிகா மந்தனா ரத்தக்காயங்களுடன் துப்பாக்கியை நீட்டும் காட்சி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் முழுக்க அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
