சென்னை: கடந்த 2010 பிப்ரவரி 5ம் தேதி தமிழில் சரண் இயக்கத்தில் அஜித் குமார் ஜோடியாக ‘அசல்’ என்ற படத்தில் நடித்திருந்த பாவனா, 15 வருட இடைவெளிக்குப் பிறகு `தி டோர்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்க வந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி: மலையாளத்தில் நடித்த நான், தமிழில் மிஷ்கின் இயக்கிய `சித்திரம் பேசுதடி’ படத்தில் அறிமுகமானேன். என் தந்தை பாலசந்திரன் ஒளிப்பதிவாளராக இருந்ததால், திரைத்துறை பற்றி பல விஷயங்களை சொல்வார்.
தமிழில் நடிக்க நான் தயங்கியபோது, திருவனந்தபுரத்துக்கு வந்து மிஷ்கின் கதை சொன்னார். எனக்கு பிடித்ததால் நடித்தேன். எனது தந்தைக்கு நான் தமிழில் நடிப்பதில் விருப்பம் இல்லை. பிறகு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தேன். சென்னைக்கு பல வருடங்களுக்குப் பிறகு நான் வந்தபோது, ரசிகர்கள் கொடுத்த அன்பையும், ஆதரவையும் பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது. இன்னும் என்னை அவர்கள் நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கின்றனர்.
மலையாள மெகா ஸ்டார்கள் மம்மூட்டி, ேமாகன்லால் ஆகியோரை ஷூட்டிங்கில் பார்த்தாலே போதும், நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். மலையாளம், கன்னடம், தமிழில் பல படங்களில் நடித்த நான், தெலுங்கில் அதிக படங்களில் நடிக்க முடியவில்லை. ‘தீபாவளி’ படத்தில் நடித்த சுசி கேரக்டரை ஞாபகத்தில் வைத்து ரசிகர்கள் குறிப்பிடுவது அதிக மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தமிழில் ‘அசல்’ படம் எனக்கு கடைசி படமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. படத்துக்காக என்னை தொடர்புகொள்வது எப்படி என்று பல இயக்குனர்களுக்கு தெரியாததால், தமிழில் நடித்திருக்க வேண்டிய பல வாய்ப்புகளை நான் இழந்துள்ளேன். பிறகு என்னை நேரில் பார்க்கும் இயக்குனர்கள் இதுபற்றி சொல்வார்கள். இனிமேல் எனக்கு தமிழில் இடைவெளி இருக்காது. எனது அண்ணன் ஜெயதேவ் இயக்கிய ‘தி டோர்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறேன். இது ரிலீசான பிறகு தமிழில் தொடர்ந்து நடிப்பேன். இது பேய் படம்தான் என்றாலும், எனக்கு பேய் பயமில்லை.