தனுசு

திருப்புட்குழி

உங்கள் ராசியின் சின்னமே போர்க்கருவியான வில்லை குறிப்பதால் எதையுமே போராடிப் பெறுவதில் தனித்த சுகம் காண்பீர்கள். போராட்டமில்லையெனில் போரடிக்கும் என்பீர்கள். சவாலான விஷயங்களெல்லாம் உங்களுக்கு அவல் சாப்பிடுகிறமாதிரி இருக்கும். அதனால் தனுசுக்கு அதிபதியான குருவையே போராட்ட குரு என்று தனித்து அடையாளப்படுத்தலாம். விஞ்ஞானியைப்போல எடுத்துக்கொண்ட விஷயங்களை மாறுபட்ட கோணத்தில் அணுகுவீர்கள். ஆனால், எல்லா விஷயங்களிலும் தொடர்ந்து போராடி இறுதியில் ஜெயிப்பீர்கள். வில் லேசில் வளையாது. ஆனால், நீங்கள் வளைந்துவிட்டால் வணங்கி நிற்பீர்கள்.

குபேரனாக இருந்தாலும் சிறியதாக அவமானப்படுத்தினாலும் ஒதுக்குவீர்கள்.

‘‘அவன் கிடக்கிறான்’’ என்று உதறுவீர்கள். மூன்றாமிடத்திற்கு அதிபதியாகவும் கும்பச்சனி வருகிறது. எப்போதுமே ஒரு குழுவினரோடு இணைந்து செயல்படக்கூடிய நீங்கள், திடீரென்று தனிமையை விரும்புவீர்கள். சட்டென்று குழுவை கலைப்பீர்கள். உங்களின் ராசிநாதனான குருவே தாய்க்குரிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக இருப்பதால் அம்மாதான் எல்லாமும் என்றிருப்பீர்கள். தாயா... தாரமா... என்கிற போராட்டம் இருக்கும். உங்கள் ஜாதகத்தில் குரு கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தால் மாற்றாந்தாய் வளர்ப்பில் நீங்கள் வளர வேண்டியிருக்கும்.

ஐந்தாமிடமான பூர்வபுண்ய ஸ்தானத்திற்கு அதிபதியாக மேஷச் செவ்வாய் வருகிறது. பிள்ளைகள் மீது பாசத்தோடு இருப்பீர்கள். அவர்களுக்கு எந்த விஷயத்திலும் பிரஷர் கொடுக்க மாட்டீர்கள். ‘‘ரேங்க் கார்ட்ல கையெழுத்து போடமாட்டேன்’’ என்று பிடிவாதம் பிடிக்க மாட்டீர்கள். தாத்தா பாட்டி வாழ்ந்த இடம் என்று பூர்வீக சொத்துகள் எதையும் விற்காமல் வைத்திருப்பீர்கள். ஆறாமிடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால் மர்ம ஸ்தானத்தில் நோய் வந்தால் முன்கூட்டியே மருத்துவம் பார்த்துவிடுங்கள். இல்லையெனில் பிரச்னை பெரிதாகும். கடன்கள் வாங்கினால் சட்டென்று அடையாது.

வழக்குகள் நீண்டுகொண்டே செல்லும். அதனால், சொத்துக்களுக்காக கடன்களை வாங்குங்கள். இல்லையெனில் வேறு எதற்காகவாவது செலவழிந்து கொண்டிருக்கும்.  ஏழாமிடமான வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சொல்லும் இடத்திற்கு அதிபதியாக புதன் வருகிறார். அதனால் வாழ்க்கைத் துணைவர் புத்திக் கூர்மை நிறைந்தவராக இருப்பார். வேறு மாநிலத்தவராகக் கூட அமைவதுண்டு. எட்டாமிடத்திற்கு உரியவராக சந்திரன் வருவதால் பயணிப்பது என்பது பிடித்தமான ஒன்றாகும். திட்டமிடாத திடீர் பயணங்கள் அதிகமிருக்கும். தந்தை மற்றும் பிதுர்காரகன் எனும் ஸ்தானத்திற்கு அதிபதியாக ஆத்ம காரகனான சூரியன் வருகிறார். தந்தையின் வழியில் தவறாது செல்வீர்கள்.

பணம் மட்டுமல்லாமல் உங்களுக்காக புண்ணியத்தையும் சேர்த்து வைத்திருப்பார். கல்வி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் அமர்வீர்கள். பதினோராம் இடமான லாப ஸ்தானத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருவதால் ரியல் எஸ்டேட், கார் வாங்கி விற்பது போன்றவற்றில் ஈடுபட்டு லாபம் சம்பாதிப்பீர்கள். பன்னிரெண்டாம் இடமான விரய ஸ்தானத்திற்கு அதிபதியாக விருச்சிக செவ்வாய் வருகிறது. இது முக்தி ஸ்தானத்தையும் குறிக்கும். எனவே, மகான்களின்ஜீவ சமாதிகள், சித்தர் வழிபாடு என்று ஈடுபடுவீர்கள். தனுசு ராசிக்கு அதிபதியாக குரு வருகிறார். அதேசமயம் இவரை கோதண்ட குரு என்று அழைப்பர். எல்லாம் இருந்தும் ஒரு வெற்றிடம் இருக்கும். ஜெயித்ததற்கான அர்த்தத்தை உணராது இருப்பீர்கள்.

எப்போதும் மனம் ரணமாக இருப்பதைப்போன்று இருப்பீர்கள். அதனால் இறைவனே மனிதனாக வாழ்ந்து போராடி அதில் வெற்றி பெற்று அந்த வெற்றிக்கு பிறகு மகிழ்ச்சிக் கோலத்தில் திளைத்து விட்டு வரும்போது உங்கள் வாழ்வின் அர்த்தம் புரியும். அதனால் அமைதியும் பெருகும். அப்படிப்பட்ட தலமே திருப்புட்குழி ஆகும். இத்தலம் ஜடாயு எனும் கழுகுக்கு ஸ்ரீராமர் தன் கைகளாலேயே ஈமக் கிரியைகளை செய்த தலமாகும். மேலும், ராவணனை வதம் செய்த வெற்றிக் கோலத்தோடு விஜயராகவன் எனும் திருநாமத்தோடு அருள்பாலிக்கும் தலமாகும்.

ஜடாயுவுக்காக அந்த வெற்றிக் கோலத்திலேயே ஸ்ரீதேவி, பூதேவியோடு காட்சியளிக்கிறார். அந்த கோதண்டராமனான விஜயராகவன் கோதண்ட குருவில் பிறந்த உங்கள் வாழ்வை நிச்சயம் மாற்றுவார். நிம்மதியை தருவார். இத்தலம் சென்னையிலிருந்து வேலூர் செல்லும் வழியில் 80 கி.மீ. தொலைவும், காஞ்சிபுரத்திலிருந்து வேலூர் செல்லும் வழியில் 13 கி.மீ. தூரத்திலுள்ள பாலுசெட்டி சத்திரத்தில் இறங்கி கோயிலுக்குச் செல்லலாம்.

Related Stories: