துலாம்

திருக்கோளூர்

குளிர்வான, இதமான, சுகமான சுக்கிரனே இந்த துலா ராசியை ஆட்சி செய்கிறது. தேசம், ஜாதி, மதம் கடந்த மனிதநேயத்திற்கு எப்போதும் முக்கியத்துவம் தருவீர்கள். மகனை தேர்க்காலில் இட்ட மனுநீதிச்சோழன்போல பொட்டில் அடித்தால்போல் நியாயம் சொல்வீர்கள். அதேசமயம் ஒருவரை நம்பிவிட்டால் அவரே கதி என்றும் கிடக்கும் மனோநிலை உங்களுக்கு உண்டு. நீதி கிரகமான சனி துலாம் ராசியில் உச்சமாவதால் நீதி, நேர்மைக்கு கட்டுப்படுவீர்கள். ஆனால், சூரியன் நீசமாவதால் நாட்டு நிர்வாகம் உண்டு. ஆனால், வீட்டு நிர்வாகம் தெரியாது. குடும்பத்திலுள்ள உள்நிர்வாகங்களில் ஈடுபாடு இராது. நீங்கள் கொஞ்சம் தெரிந்தே ஏமாறுகிற கேரக்டரும் கூட.

உங்கள் ராசியின் 2க்கும், 7க்கும் செவ்வாய் அதிபதியாக செவ்வாய் வருவதால் தோன்றுவதை பேசுவார்கள். பொய்யை தொடரத் தெரியாது விழிப்பீர்கள். பொறுப்புகளை எப்போதுமே வாழ்க்கைத் துணைவரிடம்தான் அதிகம் ஒப்படைப்பீர்கள். சுக்கிராச்சார்யார் உங்களின் ராசியாதிபதிக்கு குருவாக இருப்பதால் திருடனுக்கும் அறிவுரை கூறுவீர்கள். பண்டிதர்களுக்கும் கற்றுக் கொடுப்பீர்கள். சுக்கிரன் வாகனத்திற்குரியவராகவும் இருப்பதால் திடீர் பயணங்கள் பிடிக்கும். உங்கள் ராசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு குரு அதிபதியாகிறார். இதற்கு முயற்சி ஸ்தானம் என்று பெயர். முயற்சி திருவினையாக்கும், முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் போன்ற பழமொழிகளை நிரூபித்துக் காட்டுவீர்கள்.

இளைய சகோதரன் சொல்வதை காது கொடுத்துக் கேட்பீர்கள். கூட்டு முயற்சி உங்களுக்கு பிடிக்கும். க்ளாஸ் மேட், காலேஜ் மேட் போன்றோர்கள் பிசினஸ் பார்ட்னர்களாக வாழ்வு முழுவதும் வருவார்கள். எல்லோரும் தாய்மீது பாசம் வைப்பார்கள். நீங்கள் பக்தி செலுத்துவீர்கள். அதுவும் உங்கள் ராசிக்கு நான்காமிடம் சனி வருவதால் சொந்த பந்தம், உற்றார் உறவினர் என்று எல்லோரையும் அனுசரித்தும், அரவணைத்தும் செல்வீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானமான புத்திர ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் சனி வருவதால் சூட்சும புத்தி மிகுந்திருக்கும். குழந்தைகளை அதிகம் விரட்டாது படிக்க வைப்பீர்கள்.

உங்களால் வளர்ந்தவர்கள் உங்களுக்கு எதிராகத் திரும்புவார்கள். உங்களின் இல்வாழ்க்கைத் துணையாக வருபவர்கள் உங்களைவிட வேகமாக இருப்பார்கள். நிர்வாகத்திறமையில் ஈடு இணையற்று இருப்பார்கள். எல்லாவற்றையும் தீர்மானித்த பிறகு, மனைவியிடம் புதிதாக கேட்பதுபோல் அபிப்ராயம் கேட்பீர்கள்.

ராசியிலிருந்து ஒன்பதாம் இடமென்பது தந்தையாரை குறிக்கும். அதற்கு புதன் அதிபதியாக வருவதால் தந்தையின் ஒவ்வொரு சொல்லும் உங்களுக்கு மந்திரமாகும். புத்திக்குரியவரான புதன் தந்தை ஸ்தானத்திற்கு வருவதால் தந்தையாரைப்பற்றிய வியப்பு எப்போதும் இருக்கும்.

அனுபவமில்லாத வயதிலேயே தொழில் தொடங்கும் தைரியம் இருக்கும். நஷ்டம் வந்தாலும் சமாளித்துக் கொள்ளும் பக்குவம் இருக்கும். ஏனெனில், யாரையும் சார்ந்திருக்கக்கூடாது என்கிற வைராக்கியம் இருக்கும். எல்லாவற்றையும் எளிதாக அடைய விரும்புவீர்கள். சுக்கிரன் அதிபதியாக வருவதாலும், சந்திரன் பத்தாம் இடத்திற்குரியவராகவும் வருவதால் அழகு நிலையங்கள், பெரிய ஷாப்பிங் மால்கள், விளம்பர நிறுவனங்கள் என்று வேலை செய்வீர்கள். உங்கள் ராசியிலிருந்து 11வது இடத்திற்கு உரியவராக சூரிய பகவான் வருகிறார்.

உங்களின் லாபாதிபதியாக சூரியன் வருவதால் தந்தையார் வழியில் எப்போதும், எல்லாவற்றிற்கும் சப்போர்ட் இருக்கும். அரசாங்க விஷயங்களை கையாளும்போது சரியான ஆலோசகரை பக்கத்தில் வைத்துக் கொண்டு செய்யுங்கள். அதுபோல மூத்த சகோதரருடன் இணக்கமாக இருங்கள்.

பன்னிரண்டாம் இடத்திற்கு அதிபதியாக புதன் வருவதால் மறைந்திருந்திருந்த நூல்களை வெளியிடுவீர்கள். காலத்தால் மறக்கப்பட்ட கலாசாரங்களை வளர்ப்பீர்கள்.

சுக்கிரனின் ஆதிக்கத்தில் துலாம் ராசி வருவதால் பெருஞ்செல்வத்தை நீங்கள் விரும்புவீர்கள். குபேரனாக வாழ விரும்புவீர்கள். சிலர் காலத்தால் அவ்வாறு வாழ முடியாதவர்களும், செல்வம் பெற்றிருப்போர் அதனுடன் தெய்வீக அருளையும் தேக்கி வாழ்க்கை நடத்த இன்னும் அவர்கள் வாழ்வு செம்மையுறும். எனவே அதற்காக நீங்கள் செல்ல வேண்டிய திருத்தலமே திருக்கோளூர் ஆகும். குபேரன் ஒன்பது வகையான நவநிதிகளுக்கும், எண்ணிலடங்கா பெருஞ்செல்வத்துக்கும் தலைவனாகி தனது அளகாபுரியை ஆண்டான். குபேரன் சிறந்த சிவபக்தனாக இருந்தான். சிவபக்தியில் சிறந்தவனாக இருந்தாலும் தான் செல்வப் பெருவேந்தன் என்று கர்வத்தோடு அலைந்தான். சித்தத்தில் சுத்தமுண்டாக்க உமையன்னை சினம் கொண்டாள்.

உன் உருவம் விகாரமடைந்து, உன்னிடமுள்ள நவநிதிகளும் உன்னைவிட்டகல வேண்டுமென்று சபித்தாள். குபேரனை விட்டு நவநிதிகளும் அகன்றன. அவனை விட்டகன்ற நிதிகள் தன்னை வைத்துக்கொள்வார் யாருமின்றி பெருமாளை வேண்டி பொருநை நதிநீராடி பிரார்த்தித்தன. திருமால் நவநிதிகளையும் தன் அருகே வைத்து பாதுகாப்பளித்து அதன் மீது சயனம் கொண்டார். அதனாலேயே அவருக்கு வைத்தமாநிதிப்பெருமாள் எனும் திருநாமம் உண்டாயிற்று. வேறொருபுறம் குபேரன் தன் தவறுணர்ந்து பரமசிவனின் பாதத்தில் வீழ்ந்தான். பார்வதியிடம் மன்னிப்பு கோரினான்.

தாமிரபரணிநதியின் தென்கரையில் அமைந்துள்ள தர்மபிசுன ஷேத்ரத்திலுள்ள (இன்றைய திருக்கோளூர்) திருமாலிடம் தஞ்சமடைந்துள்ளன என்றார். திருக்கோளூர் வந்தவன் பெருமாளைக் குறித்து பெருந்தவம் புரிந்து மன்றாடினான். திருமால் மனம் இரங்கி குபேரனை மன்னித்து நவநிதிகளைத் தந்தருளினார். இன்றும் வறுமையில் வாழ்பவர்களும், செல்வம் இழந்தவர்களும், இன்னும் செல்வங்கள் பெருகவும் வைத்தமாநிதிப் பெருமாளை வணங்கி சகல சம்பந்துமிக்க வாழ்க்கையைப் பெறுகின்றனர். இத்தலம் திருநெல்வேலியிலிருந்து 37 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Related Stories: