சிம்மம்

திருவண்ணாமலை

சூரியனே சிம்ம ராசியை ராஜபோகமாக ஆளுகிறார். அதனால் ஒரு முடிவை எடுத்து விட்டால் அதன் பின்பு மாற்றிக் கொள்வது என்பது உங்கள் அகராதியில் எப்போதும் இல்லை. ஊரே கூடி ஒரு குடையின் கீழ் நின்றாலும் முன் வைத்த காலை பின்வைக்க மாட்டீர்கள். சூரியனின் ஆகர்ஷண சக்தியை அடிப்படையாக வைத்துதான் மற்ற கோள்கள் தன் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அதுபோல ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை

பேரும் ஏதாவது ஒரு சூழலில் உங்களின் உதவியை நாட வேண்டியிருக்கும்.

சிம்மத்திற்கு இரண்டாம் இடமான தனம், குடும்பம், வாக்கு ஸ்தானாதிபதியாக புதன் வருவதால் பணம் காசுக்கு எப்போதும் குறையிருக்காது. ஆனால், என்ன கையில் காசு தங்காது செலவழிந்த வண்ணம் இருக்கும். புதன் வாக்கு எனும் பேச்சுக்கு அதிபதியாக இருப்பதால் பளிச்சென்று பேசுவீர்கள். யோசிக்கும் கணமே வாக்கில் வார்த்தைகளை வெளிப்படுத்துவீர்கள். மூன்றாமிடம் எனும் முயற்சி ஸ்தானம் மற்றும் இளைய சகோதர ஸ்தானத்திற்கு சுக்கிரன் அதிபதியாகிறார். இதனால் உங்களின் எல்லா முயற்சிகளுமே கொஞ்சம் தடாலடியாகத்தான் இருக்கும். ‘‘நீங்க இன்னிக்கு காலையில பேசிக்கிட்டிருக்கும்போது கூட இந்த விஷயத்தை சொல்லலையே’’ என்ற அளவிற்கு திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.

சுக பாக்யாதிபதியாக செவ்வாய் வருகிறது. அதாவது சுக ஸ்தானம், தாய்க்குரிய இடத்திற்கெல்லாம் செவ்வாய் வருகிறது. அதேபோல பாக்ய ஸ்தானம், அதாவது ஒன்பதாம் இடமான தந்தைக்குரிய இடத்திற்கும் செவ்வாய்தான் அதிபதியாக வருகிறார். அதேசமயம் உங்களின் ராசியாதிபதியான சூரியனும், செவ்வாயும் அதிநட்பு கிரகமாக வருவதால். பெற்றோர் புகழும்படி நடந்து கொள்வீர்கள். அவர்கள் விட்ட பாரம்பரியத்தை கட்டிக் காக்க போராடுவீர்கள் ஐந்தாம் இடமான பூர்வ புண்யாதி

பதியாக குரு வருகிறார். இவரே எட்டுக்குரியவராகவும் இருக்கிறார். சத் புத்திரன், சத் புத்திரி என்று சொல்வார்களே அதுபோல நல்ல வாரிசுகள் அமையும்.

அதேபோல உங்களின் ஆறுக்கும், ஏழாம் இடமான வாழ்க்கைத்துணை ஸ்தானத்திற்கும் உரியவராக கும்பச் சனி வருகிறார்.

அதனால் உங்களின் வாழ்க்கைத் துணை திறமைமிக்கவர்களாக இருப்பார். உங்கள் குற்றங் குறைகளை சுட்டிக் காட்டுபவராகவும் விளங்குவார். தர்ம, கர்ம ஸ்தானம் என்றும், உத்யோகத்தை பற்றிச் சொல்லும் பத்தாம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். ஒருவிதத்தில் சூரியனும், சுக்கிரனும் பகைக்கோள்களாகும். அதனால், படித்த துறையில் தொடர்ந்து பணியாற்ற முடியாது. நாலு பேரை வைத்து வேலை வாங்கும் தொழில்தான் எப்போதும் சரியாக வரும். பெயரும், புகழும், பணமும் ஒருங்கே இருக்கும் துறை அல்லது பதவி என்று தேர்ந்தெடுத்து அதற்காக காத்திருந்து வேலையில் சேருவீர்கள்.

சூரியன் சிவகோத்திரத்தை சேர்ந்தவர். சிவனுடைய அம்சமாகவே சூரியன் விளங்குகிறார்.

சூரியன் ஒரு நெருப்புக் குழம்பாக கொதிக்கும் கிரகம். இவ்வாறு பூலோகத்தில் சூரினுக்கு நிகர்த்ததாக ஒரு தலத்தை சொல்ல வேண்டுமெனில் அது திருவண்ணாமலையே ஆகும். கொழுந்துவிட்ட அக்னியானது கருணையின் பொருட்டு இங்கு மலையாக குளிர்ந்துள்ளது. சிவனே மலையாகவும், மலையே சிவமாகவும் பிரிக்க முடியாதபடிக்கு விளங்குகிறது. சூரியன் எப்படி எல்லாவற்றிற்கும் மையமாக உள்ளதோ, அதுபோல பூமியினுடைய மையமாக திருவண்ணாமலை தலம் விளங்குகிறது என்பதை ஸ்காந்த புராணமும், பகவான் ரமணரும் உறுதிப்படுத்துகின்றனர். வானத்து நெருப்புப் பந்து சூரியன் எனில், பூமியில் அதற்கு இணையான நெருப்புப் பந்தாகவும், நெருப்புத் தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலையே ஆகும்.

அருணன் என்பதற்கு சூரியன் என்ற பொருளும் உண்டு. அருணாசலம் என்பதற்கு அசையாத ஞான சூரியன் என்றும் பொருள் கொள்ளலாம். இதையெல்லாம் தாண்டி பூமியின் சூரிய ஸ்தானமே திருவண்ணாமலை என்றும் கொள்ளலாம். சூரியனுக்காவது உதித்தல், மறைதல் என்பது உண்டு. ஆனால், அருணாசலம் எனும் இந்த ஞான சூரியன் விழுதல், எழுதல் எதுவும் இல்லாமல் உயர்ந்த நிலையில் எல்லோரையும் ஆளுதல் என்ற மகாசக்தியை தன்னிடத்தே கொண்டுள்ளது. ஏற்றம், ஏமாற்றம் என்ற மாறுபட்ட நிலையை நீங்கள் கடந்து எப்போதும் முன்னேற்றம் என்று உயர அந்த உயரமான திருவண்ணாமலையையும், அருணாசலேஸ்வரரையும் வணங்குங்கள்.

Related Stories: