மிதுனம்

திருத்தொலைவில்லி மங்கலம்

மிதுனம் என்றாலே இரட்டை என்று பொருள். இரண்டு குழந்தைகள் சேர்ந்து நிற்பதுபோல ஒரு தோற்றத்தை அந்த நட்சத்திரக் குவியல் தெரிவிப்பதால்

மிதுனம் என்கிறோம். சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல துல்லியமாக நீதி வழங்குவதில் வல்லவர்கள். அதனாலேயே துலா ராசி, மீன ராசியில் உள்ளவர்கள் உங்களைப்போல் சிந்திப்பதாக நினைப்பீர்கள். கொஞ்சம் ‘ஆடு மாதிரி அடங்கியிருப்பீர்கள், கிளம்பினால் சிங்கம் போல புறப்படுவீர்கள்.’

உங்களின் ராசியாதிபதியாக புதன் வருவதால் நள்ளிரவு செய்தி வரை பார்த்துவிட்ட பிறகே தூங்கச் செல்வீர்கள். மிதுனத்திற்கும், கன்னி ராசிக்கும் அதிபதி புதன்தான்.

மிதுனம் என்று கொண்டால், கன்னி ராசிக்கு கொஞ்சம் தெரிந்தாலும் அதை பூதாகரமாக்கி புகழ் பெறுவார்கள். மிதுனராசி என்பது நெறிப்படுத்தப்பட்ட புதனைக் குறிக்கும். நிற்காமல் பாயும் நதிபோல, எதையோ தேடிச் செல்லும் யாத்ரீகன்போல தேடல் இருந்து கொண்டே இருக்கும். வஞ்சனையே இல்லாமல் அலுவலகத்தில் வேலை பார்ப்பீர்கள். நடுநடுவில் பாராட்டுகளால் குளிரெடுக்கும். ஆனால், ப்ரமோஷன் லிஸ்ட்டில் உங்கள் பெயர் இருக்காது. ஏனெனில், அனுசரித்துப் போகத் தெரியாது.

இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்திற்கு அதிபதியாக சந்திரன் வருவதால், பேச ஆரம்பித்தால் அதற்குள் ஒரு மெசேஜ் இருக்கும். ஆனால், தூண்டிவிட்டால்

எல்லாவற்றையும் கொட்டி விடுவீர்கள். யார் மனதையும் புண்படுத்தாது பேசுவீர்கள். உங்களின் பூர்வ புண்ய ஸ்தானம் என்று சொல்லப்படும் ஐந்தாம் இடத்திற்கு அதிபதியாக சுக்கிரன் வருகிறார். குழந்தைகள்பற்றியும் ஐந்தாம் இடம் சொல்வதால் உங்களில் பலருக்கு இரட்டைப் பிள்ளைகள் இருக்கும். பெண் குழந்தைகள் மீது மிகுந்த பிரியமுள்ளவர்களாக இருப்பீர்கள். உங்களின் புதிய சிந்தனைகளை கொஞ்சம் மட்டம் தட்டிப் பேசுவார்கள். ‘‘அவங்களுக்கு எங்க புரியப் போகுது’’ என்று சில இடங்களில் நீங்களே உங்களை புகழ்ந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கால்பாகமாவது உங்கள் கைக்கு வரும்.

உங்களின் ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்திற்கும், பதினோராம் இடமான லாபத்திற்கும் செவ்வாய் அதிபதி ஆகிறார். உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சரியில்லாவிட்டால் உடன்பிறந்த மூத்த சகோதரர்களால் நிறைய இழப்புகள், ஏமாற்றங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். உடன்பிறந்தாலும் வரம்போடு இருப்பது நல்லது. மனைவியின் மீது பாசமாகத்தான் இருப்பீர்கள். கணவனும், மனைவியுமான நீங்கள் சமமான அறிவோடு இருப்பீர்கள். ஏனெனில் உங்களின் வாழ்க்கைத் துணைக்கு ஆடம்பர வாழ்வில் நாட்டம் அதிகமிருக்கும். உங்கள் மனைவி நேருக்கு நேர் பேசுவதால் கொஞ்சம் வருத்தப்படுவீர்கள்.

உங்களின் பத்தாம் இடமான உத்யோக ஸ்தானத்திற்கு அதிபதியாக குரு வருவதால் தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை பார்க்க நீங்கள் விரும்பினாலும், உங்களால் முடியாது. இந்த வேலையை விட்டுட்டு சொந்த தொழில் தொடங்கிட்டேன்’’ என்பீர்கள். மிதுனம் என்பதே இரட்டை என்று பார்த்தோம். ராசியாதிபதி புதனாக வருவதால் பெரும்பாலும் பெருமாள் கோயில்கள் உங்களுக்கு ஏற்றவையாக அமையும். அதிலும் ஒரே தலத்தில் இரட்டை பெருமாள் அருளும் தலமாக இருப்பின், உங்கள் ராசியின் அடிப்படையிலான அலைவரிசைக்கு உரியதாக அது அமையும். அப்படிப்பட்ட உங்களுக்கான தலமே இரட்டைத் திருப்பதிகளாக விளங்கும் திருத்தொலைவில்லி மங்கலம் ஆகும். நூற்றியெட்டு திவ்யதேசங்களில் இரண்டு திவ்யதேசங்கள் அருகருகே இருப்பது இங்கு மட்டும்தான்.

இரு கோயில்களையும் சுவாமி நம்மாழ்வார் மங்களாசாஸனம் செய்துள்ளார். முதலாவதான திருப்பதியில் எழுந்தருளும் பெருமாளின் திருப்பெயர் தேவப்பிரான் ஆகும். இரண்டாவதான திருப்பதியில் அருளும் பெருமாளின் நாமம் அரவிந்தலோசனன் என்பதாகும். சேர்ந்தே அருளும் இருவரையும் சேவித்து வாருங்கள். திருநெல்வேலியிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் திருத்தொலைவில்லி மங்கலம் அமைந்துள்ளது.

Related Stories: