திருமுறை காட்டும் தைப்பூசம்

தமிழ் வேதமான திருமுறைகளில்திருவிழாக்களைப் பற்றிய சிறப்புமிக்க செய்திகளை ஆங்காங்கு காண்கிறோம். திருவாதிரையில் நடைபெற்ற திருவிழாவைத் திருவாரூர்ப் பதிகம் குறிக்கின்றது. திருவிடை மருதூரில் நடைபெற்ற பூசத் திருவிழாவைப் பற்றிய செய்திகளைத் திருவிடை மருதூர்ப்பதிகங்கள் சிறப்புடன் குறிக்கின்றன.தை மாதம், ஆறுகளில் நீராடுவதற்குரிய புண்ணிய காலமாகும். குறிப்பாக தைப் பௌர்ணமியன்று தைப்பூசத்தில் ஆறுகளில் இறைவனை எழுந்தருளச் செய்து நீராட்டு விழா நடத்தினர். அதுவே பின்னாளில் தைப்பூச விழாவாக விரிவாக்கம் பெற்றது என்பர். ஆறுகளில் நீராடுவது புண்ணியம் என்றாலும் குறிப்பாக, தைப்பூசத்தில் காவிரியில் நீராடுவதுபெரும்புண்ணியமாகும்.

அன்பர்களுக்குத் தீர்த்தம் அளிக்க, திருவிடைமருதூர்ப் பெருமான் காவிரிக்கு பூசத் திருநாளில் எழுந்தருளுகின்றார். அவர் காவிரியில் நீராடி அழகாக விளங்குகிறான். அதனைத் திருஞானசம்பந்தர், ‘‘ஓர் செம்மை உடைத்தாய்ப் பூசம் புகுந்து ஆடிப்பொலிந்து அழகாய ஈசன்’’ என்று போற்றுகின்றார். மேலும், உலகம் தைப்பூச நீராடலால் பொலிவு பெறுகிறது என்பதை, ‘‘வருந்திய மாதவத்தோர் வானோர் ஏனோர் வந்தீண்டிப் பொருந்திய தைப்பூசம் ஆடி உலகம் சொலிவெய்த’’ என்று பாடுகிறார்.திருமயிலைக் கபாலீச்சரத்தில் பெண்கள் பொங்கலிட்டுக் கொண்டாடும் திருநாளாகத் தைப்பூசம் குறிக்கப்படுகிறது.

தைப்பூசம் ஒண்கண் மடநல்லார்...

நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் என்று திருஞானசம்பந்தர் குறித்துள்ளார். இங்கு பூசத் திருவிழாவில் பொங்கலிடும் காட்சியைக் கண்டு வியக்கிறார்.இவற்றின் மூலம் தைப்பூசம் பெண்களுக்கு உரிய நோன்பு என்பதும் அது 2000 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்படும் விழா என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.மார்கழி மாதத்தில் பௌர்ணமியில் தொடங்கிய பாவை நோன்பு தைப்பூசத்தில் முடிவடையும். நோன்பின்போது பால், தயிர், நெய் முதலியவற்றை நீக்கி உலக நன்மைக்காக வேண்டி விரதமிருக்கும் பெண்கள் தைப்பூசத்தில் நெய் முதலியவற்றை இட்டும் பொங்கலிட்டு வழிபட்டனர். காலப்போக்கில் மார்கழி பௌர்ணமியில் தொடங்கிய நோன்பு மார்கழி முதல் தேதிக்கு மாற்றம் பெற்றது. அதுபோலவே பொங்கலும் தைப்பூசத்திலிருந்து தை முதல் தேதி

கொண்டாடும் விழாவாகி விட்டது.

- ஆட்சிலிங்கம்

Related Stories: