நான் நலமாக இருக்கிறேன்: கார் விபத்து குறித்து யோகி பாபு விளக்கம்

சென்னை: தமிழ் படவுலக முன்னணி நடிகர் யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டுமின்றி, கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் நடிக்கும் அவர், ஏலகிரியில் நடந்த ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றுவிட்டு, நேற்று அதிகாலை நேரத்தில் காரில் சென்னைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த காரில் நடிகர்கள் உதயா, அஜ்மல் ஆகியோரும் வந்தனர்.இந்நிலையில், யோகி பாபு வந்த கார் வாலாஜா அருகிலுள்ள டோல்கேட்டில் விபத்துக்குள்ளாகி, அவர் பலத்த காயம் அடைந்ததாகவும், அவருடன் சென்ற உதவியாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சோஷியல் மீடியாவில் தகவல் வெளியானது.

இச்சம்பவம் குறித்து உடனே விளக்கம் அளித்த யோகி பாபு, ‘எனக்கு எந்த விபத்தும் ஏற்படவில்லை. நான் நலமாக இருக்கிறேன். ஒரு தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தேன். அந்த படப்பிடிப்புக்காக வந்திருந்த ஒரு கார்தான் விபத்தில் சிக்கியது. அந்த காரில் நானும், என் உதவியாளரும் பயணம் செய்யவில்லை. இந்நிலையில் நானும், என் உதவியாளரும் அந்த காரில் சென்று விபத்தில் சிக்கி காயம் அடைந்ததாக தகவல் பரவியது. அது முற்றிலும் தவறு. இந்த விஷயத்தை அறிந்து எனது நண்பர்கள், திரையுலக பிரமுகர்கள், ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் என்னை செல்போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகின்றனர். என்மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.

Related Stories: