பொன்னான வாழ்வு தரும் பொன்விளைந்த களத்தூர்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழியாக இருக்கலாம். ஆனால், கோயில்களை பராமரிக்கவே ஊர்கள் உருவானது என்பது சான்றுகள் மூலம் தெரிய வருகிறது. அப்படி திருக்கோயில்கள் பெருமைகளை உரைக்கவும் தன்னை உருவாக்கிக் கொண்ட ஊர்களில் தனி சிறப்போடு பொன்னை விளைவித்து செல்வ செழிப்பை தந்த ஊர்தான் பொன்விளைந்த களத்தூர். செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டிலிருந்து 10 கிலோமீட்டர் திருக்கழுக்குன்றத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த இந்த ஊர்தான் பொன்விளைந்த களத்தூர்.

63 நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் ஆண்ட இந்த ஊர் புண்ணிய பூமியாகும். நளவெண்பாவை எழுதிய புகழேந்திப் புலவர் பிறந்த ஊர். வீரராகவ அந்த கவி வீரராகவர் வாழ்ந்த ஊர். படிகாத்த புலவர் வாழ்ந்த ஊராகும். இயற்கை எழில் கொஞ்சும் முழுக்க விவசாய நிலத்தை கொண்ட பலதரப்பட்ட மக்களை உள்ளடக்கிய இந்த பொன் விளைந்த களத்தூர் சிறப்புகளை நாம் காணலாம்.

மூன்றாம் நந்திவர்மன் காலம் முதலாக சோழர் ஆட்சி காலம் வரை களத்தூர் ஒரு கோட்டமாக இருந்தது. இந்தக் கோட்டத்தில் பல நகரங்களும் மதுராந்தகம் நகரமும் பல தனி ஊர்களும் இணைந்து களத்தூர் கோட்டம் இருந்தது. மேலும் இப்படி பல சிறப்புகளை பெற்ற பொன் விளைவித்து தந்ததால் பொன்விளைந்த களத்தூரில் கி.பி. 750 ஆம் ஆண்டில் இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் அருள்மிகு  மீனாட்சி அம்மன் முன் குடுமி ஈஸ்வரர் ஆலயம் எழுப்பப்பட்டது. முதலாம் குலோத்துங்கன் கிபி 1075 ஆவுடையார் வழிபாட்டு நிலமும், விளக்கெரிக்க பொன்னும் தானமாக செய்துள்ளான். இரண்டாம் குலோத்துங்கன் இவ்வூரை தேகநல்லூர் என அழைத்து நந்தவனம் அமைக்கவும் உதவி புரிந்துள்ளான்.

கிபி 1264 சடையவர்மன் சுந்தரபாண்டியன் இவ்வூரை கங்கைகொண்ட சதுர்வேதிமங்கலம் என குறிப்பிட்டு பழுதுபார்க்கவும்,  பராமரிக்கவும் நிலம் அளித்துள்ளான். வீர நரசிம்ம பல்லவன் ஆகியோர் இத்தலம் சிறப்புற சிறப்பு நிலங்களை தானமாக வழங்கி தொடர்ந்து பூஜைகள் நடக்க உதவி செய்துள்ளனர்.

பக்தனை காப்பாற்றிய பரமேஸ்வரன்

ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அது போல அருள்மிகு முன்குடுமீஸ்வர் கோயிலுக்கும் தனி சிறப்பு உண்டு இவ்வூரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு தினமும் முக்காலமும் பூஜை செய்யும் புனித வேலையை கோவில் குருக்கள் குடும்பமே மிகுந்த பக்தி சிரத்தையுடன் செய்து வந்தனர். இதே ஊரில் உள்ள முன் குடுமீஸ்வரர் ஆலயத்திற்கு தினமும் செய்யப்படும் சிவபூஜைக்கான பூ மாலையை அரசனிடம் சேர்க்க வேண்டும்.

இது ஆதிகாலம் முதல் அரசன் ஒருவனின் கட்டளையாக இருந்துவந்தது. அப்படி ஒருநாள் பக்தி பூரிப்பால் குருக்கள் மனைவி தனது கழுத்தில் சாமிக்கு வைத்திருந்த மாலையை சூடிக்கொள்ள, இதை நேரில் கண்ட குருக்கள் அதிர்ச்சி அடைந்தார். அரசகட்டளைக்கு பயந்து தனது மனைவியை கோபமாக திட்டி விட்டு அந்த மாலையை வாங்கிச்சென்று அரசனிடம் சேர்ப்பித்தார், ஆவலுடன் வாங்கிய அரசன் அதில் தலைமுடி ஒன்று இருப்பதை கண்டு கோபம் அடைந்தார். சிவனுக்கு சாற்றும் மாலையில் எப்படி மனிதனின் தலை முடி வந்தது என்று கோபமாக குருக்களை பார்த்து கேட்டார்.

பயந்து நடுங்கிய குருக்கள் அது சிவனின் முடி தான் என்று பொய் சொல்லிவிட்டார். இதைக் கேட்ட அரசன், சிவன் தலையில் முடி இருக்கவே இருக்காது இருக்கவும் முடியாது இதை நான் நாளைக்கு வந்து பார்க்கவேண்டும். இல்லையென்றால் உனக்கு கடும் தண்டனை என்று கூறிவிட குருக்கள் தமக்கு தண்டனை நிச்சயமாகி விட்டது என்று கதி கலங்கினார். வீட்டிற்குச் செல்லாமல் நேராக கோயிலுக்குச் சென்று சிவனின் பாதம் பிடித்து கதறினார். இரவில் அங்கேயே உறங்கி விட்டார். தனக்கு தினமும் பூஜை செய்யும் குருக்களின் உண்மையான பக்தியும் வழிபாட்டையும் தினம் தினம் கண்டு இன்புற்ற இறைவன் அவர் மனைவி தன் மீது கொண்டுள்ள பக்தியும் எண்ணி மகிழ்ச்சி அடைந்து ஆலய குருக்கள் அசரீயாக வந்தார்.

குருக்களே அச்சம் கொள்ள வேண்டாம், நாளை அரசனை அழைத்து வாரும், நான் சடைமுடியுடன் காட்சி தருகிறேன் நிம்மதியாக வீடு போய் சேரும் என்றும் கூறியுள்ளார். பரமேஸ்வரனின் வாக்கைக் கேட்டு உள்ளம் பூரித்த குருக்கள் மகிழ்ச்சி அடைந்து வீட்டுக்கு சென்றார் மறுநாள் காலையில் அரசனிடம் சென்று கோவிலுக்கு வாருங்கள் சிவபெருமானின் தலையில் முடியை காண்பிக்கிறேன் என்று கூறி வந்து விட்டார்.

அரசனும் தனது மந்திரி படைசூழ ஆலயம் வரை ஆலயம் வந்து பார்த்தபோது சிவலிங்கத்தின் தலையில் சடைமுடியுடன் இறைவன் காட்சி கொடுத்தார். இந்த காட்சியை ஆச்சரியத்துடன் கண்டு அரசன் அகமகிழ்ந்தார். மீண்டும் இறைவனை பழைய நிலைக்கு வருமாறு கூறிய வேண்டுகோளையும் ஏற்று தலை முடி விழுந்த சடைமுடி தலையின் முன் பகுதியில் குடுமி ஆக மாறி சாந்தமாக அருளினார். இதைக் கண்ட அரசன் பரவசமடைந்து குருக்களைப் பாராட்டி ஆலய பூஜை நடைபெற பொன்னும் பொருளும் வழங்கினான்.

அன்றுமுதல் இவ்வாலயம் முன் குடுமீஸ்வரர் சுவாமி என்று அழைக்கப்படலாயிற்று. இக்கோயிலில் உள்ள 32 தூண்களில் ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு கலை நயத்துடன் வரலாற்றை பறைசாற்றும் தூண்களாக உள்ளது. இக்கோயிலின் வடகிழக்குப் பகுதியில் அருள்மிகு மீனாட்சி அம்மன் கருவறை அமைந்து தன் நாதனை காணவரும் பக்தர்களை காத்து நிற்கிறார். நின்றகோலத்தில் பசிக்கு அழும் குழந்தைக்கு பால் புகட்டும் தாய் போல கருணை ததும்பும் புன்னகையோடு தன்னை காணவரும் பக்தர்களுக்கு மக்களுக்கு காட்சி கொடுக்கிறார் கருணையும் அருளை அள்ளிக்கொடுக்கும் அன்னையாக திகழ்கிறாள் என்று பக்தர்கள் பரவசத்தில் திளைக்கின்றனர்.

நீராதாரத்துடன் உள்ள பூமியை நன்செய் என்பர், இங்கு, வாழை, நெல், கரும்பு முதலானவை பயிராகும். நீராதாரம் குறைந்த பூமியை புன்செய் என்பர். இந்தப் பூமியில் எள், கொள்ளு, துவரை போன்றவை பயிராகும். இரண்டிலும் அடங்காத நிலத்தை மானாவாரி என்பர். இது அந்தந்தப் பகுதிகளின் வளத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. மிகவும் உயர்ந்த நிலத்தை பொன் போட்டால் பொன் விளையும் என்று புகழ்ந்து கூறுவர். இப்படி புகழுக்காக அல்லாமல் பொன் விளைந்த பகுதிதான் பொன்விளைந்த களத்தூர்.

அந்த வகையில் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை தேசிகன் சுவாமி பாதயாத்திரையாக ரங்கம் புறப்பட்டார். இரவு நெருங்கியதால் பொன்விளைந்த களத்தூரில் உள்ள பெருமாள் சந்நதியில் தங்க நேரிட்டது. தேசிகர் சுவாமிகளின் ஆராதய மூர்த்தியான லட்சுமி ஹயக்கிரீவர் இவரைக் கொண்டு ஒரு அதிசயம் நிகழ்த்த விரும்பினார். எனவே அந்த வகையில் குதிரை முகம் கொண்ட  இரவில் ஒரு வெள்ளைக் குதிரை வந்து குடியானவன் பயிரிட்டு அறுவடைக்குத் தயாராக இருந்த வயலை மேய்ந்தது.

நிலத்துக்கு உரியவர் பயிரைப் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்தும் குதிரை திரும்பி செல்லவில்லை. எனவே, அந்தப் பெரியவர் தேசிகர் சுவாமியைக் கூப்பிட்டு உமது குதிரை என்னுடைய பயிரையெல்லாம் மேய்ந்துவிட்டது. அதை திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு வேண்டினார். தேசிகர் குடியானவரிடம் சிறிது பால் கொண்டுவருமாறு கேட்க, எடுத்துவந்த பாலை ஹயக்கிரீவருக்கு நிவேதனம் செய்தவுடன் குதிரை திரும்பிவிட்டது.

இந்நிலையில் மறுநாள் காலை, குடியானவன் அறுவடைக்கு வந்து பார்த்தபோது, குதிரை எங்கெல்லாம் வாய் வைத்து மேய்ந்ததோ, அங்கெல்லாம் பொன் விளைந்திருந்தது. எப்படி இத்தனையும் பொன்னாயிற்று என்று குடியானவன் வியந்து தானியத்தை அறுவடை செய்து நெற்கதிர்களை சேமித்து வைத்த இடம் (களம்) கொல்லைமேடு என்ற பகுதி இன்றும் உள்ளது. அதைத் தொடர்ந்து நெல்லை தூற்றியபோது பதர் சென்று விழுந்த இடம் பொன்பதர் கூடம் என்று இன்றும் அதை ஒட்டிய பகுதியாக உள்ளது.

உடனடியாக தேசிகர் சுவாமிகளிடம் வந்த குடியானவன் இந்த அதிசயத்தைக் கூறி வணங்கினான். தேசிகர் சுவாமி குடியானவனை ஆசீர்வதிக்க இந்த பொற்குவியலைக் கொண்டு ஆலயத்துக்கும், ஏழைகளுக்கும், கல்விக்கும், நோயுற்றவர்களுக்கு வைத்யமும் செய் என்று பணித்தார். குடியானவனும், அவ்வாறே செய்ய இந்த ஊருக்கு பொன் விளைந்த களத்தூர் என பெயராயிற்று நமது நாட்டின் முக்கியத் தொழிலான விவசாயத்தை மேன்மைப்படுத்தும் வகையில் அன்றே பொன்கதிர் குவிக்கப்பட்ட களம் கொண்ட புண்ணிய பூமி பொன்விளைந்த களத்தூர் என்று இன்றும் விளங்கி வருகிறது. இந்த பொன்விளைந்த களத்தூரில் விவசாயமும் பசுமை மாறாமல் செழித்து வருகிறது.

இப்படிப்பட்ட இந்த ஊரில் லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயம், கோதண்டராமர் சுவாமி மற்றும் சேதுராமர் திருக்கோயில், பிடாரி மல்லிச்சியம்மன் ஆலயம், புகழேந்தி புலவர் மணிமண்டபம், வள்ளி முருகன் கோயில் என கோயில்களும் அமைந்துள்ளன. இப்படிப்பட்ட பொன்விளைந்த களத்தூரில் உள்ள கோயில்களை நாமும் தரிசிப்போம்.

செய்தி: ரத்தின.கேசவன்

படங்கள்: எஸ்.பாலாஜி

Related Stories:

>