நாக கன்னியர்கள்

பாம்பின் உடல் மிகவும் தூய்மையானது. வழுவழுப்பானது. சேறு சகதியில் புரண்டபோதிலும் அழுக்கு படிவதில்லை. கல்லிலும் முள்ளிலும், பயணிக்கும் போதும் துன்பமடைவதில்லை. அதனால் பாம்பு வடிவம் தூய்மையானதாகவும் துன்பமற்றதாகவும் கொள்ளப்படுகிறது. எனவே, தூய்மை மிகுந்த பெண்கள் நாக கன்னியர் என்று கூறப்படுகின்றனர்.

பூவுலகில் மானுடப் பிறவியில் தோன்றிய கன்னிப் பெண்கள் எதிர்பாராது மாண்டு போனால் மறுபிறப்பில் தூய்மை உடைய நாகமாகப் பிறப்பார்கள் என்றும், எஞ்சிய ஆயுளைப் பாம்பு வடிவில் கழிப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அவர்களே நாட்டுப்புற வழக்கில் நாக கன்னிகைகள் என்று போற்றப்படுகின்றனர். அவர்கள் அவ்வடிவில் இருந்தவாறே குலதெய்வமாக விளங்கி, மக்களுக்கு உதவிகளைச் செய்வார்கள் என்று நம்புகின்றனர். தாம் பிறந்த, வாழ்ந்த குடும்பத்தில் ஏற்படும் புத்திர தோஷம் திருமணத் தடை முதலியவற்றை நீக்கி நல்வாழ்வு அளிக்கின்றனர்.

இப்படி மானுட வடிவில் இருந்து மாண்டு நாக கன்னியராகப் பிறந்தவரும், நாகங்களின் வழியில் தோன்றிய நாக கன்னியரும் சிறப்புடன் சிவ  வழிபாடுகளை செய்து உய்கின்றனர். திருப்பனந்தாள், திருநெல்வேலி முதலிய தலங்களில் நாக கன்னிகையர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர். இவர்கள் சிவ சந்நதியில் மணிதீபம் ஏந்தி நிற்பதாகக் கூறப்படுகிறது. திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் ஆலயம் நாகர்கள் வழிபட்ட தலங்களுள் ஒன்றாகும். திருப்பனந்தாள் தலபுராணத்தில் நாக கன்னிகை வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறு கூறப்பட்டுள்ளது.

நாகலோக அரசி வாசுகி, அவனது மகள் சுமதி, அவளுக்குத் திருமணம் நடத்த வாசுகி நிச்சயித்தாள். அதைக் கேட்ட அவள் நான் திருமணத்தை விரும்பவில்லை. எனக்கென கன்னிமாடம் கட்டிக் கொடுங்கள். அதிலிருந்தவாறே சிவனை ஆராதிக்க விரும்புகிறேன் என்றாள். அதன்படியே ஆகட்டும் என்றாள் வாசுகி. ஒருநாள் சிவபெருமான் அவளது கனவில் தோன்றி, தாலவனமாகிய திருப்பனந்தாள் சென்று செஞ்சடைச் சிவபெருமானை வழிபடுக என்றார். அதன் படியே அவள் திருப்பனந்தாள் சென்று கன்னி மாடத்திருந்தாள்.

அங்கிருந்த வாறே தினமும் செஞ்சடைப் பெருமானை வழிபட்டு வந்தாள். இப்படி இருக்கும் நாளில் திருத்தல யாத்திரை மேற்கொண்ட அரித்துவஜன் அரசன் திருப்பனந்தாளுக்கு வந்தான். இருவரும் ஒருவரையொருவர் கண்டு காதல் கொண்டனர். சுமதி, அரித்துவஜனை அழைத்துக் கொண்டு நாகலோகம் சென்றாள்.

அங்கே அவர்களது திருமணம் நடந்தது. பிறகு அவளும் அவனும் ஒரு பிலத்தின் (பூமியில் இயற்கையாக அமைந்த ஒரு துளை) வழியே திருபனந்தாள் வந்து பெருமானையும் அம்பிகையையும் வழிபட்டனர். சுமதி தம் பெயரால் ஒரு சுனையை (இப்போதைய திருக்குளம்) அமைத்தாள். அது அவள் பெயரால் நாகதீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. அரித்துவஜனும் தம் பெயரால் ஒரு லிங்கம் நிறுவினான். இவர்கள் பெருமானுக்கு பெருந்திருவிழா செய்து மகிழ்ந்தனர் என்று தல புராணம் கூறுகிறது.

கார்க்கோடகம்

அஷ்டமா நாகங்களில் ஒருவன் கார்க்கோடகன். இவன் வழிபட்ட தலங்களில் முதன்மையானது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடக நல்லூர். இங்குள்ள இறைவன் கார்க்கோடகேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார்.

இவன் சிவபெருமானின் விரலில் மோதிரமாக இருப்பவன். ஒரு சமயம் தன்னையறியாது அவரது கரத்தில் விஷத்தை உமிழ்ந்துவிட்டான். அப்பாவம் நீங்க திருவாலங்காட்டுக்கு வந்து சிவ வழிபாடு செய்தான். அங்கு இரத்தின சபையில் பெருமானின் அண்டமுற நிமிர்ந்தாடும் கூத்தைக் கண்டு மகிழ்ந்தான்.

திருவாலங்காட்டில் இவருடைய திருவுருவம் வழிபாட்டில் உள்ளது. இவர்  பெயரால் ஒரு மடம் அமைந்திருந்ததாகவும், திருமழிசை நாட்டு செங்குந்தர்கள் அதன் சீடர்களாக இருந்தார்கள் என்றும் ஒரு பழைய நூல் குறிப்பு கூறுகிறது. திருப்பாம்புரம் - கார்க்கோடகன் பூசித்த தலமாக இவ்வூர் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ளது. இங்கு நாக ராஜனின் மூலவர், உலாத்திரு மேனி  ஆகியன உள்ளன. இறைவன் பாம்பு புரேசர். அம்பிகை வண்டுசேர் குழலி.

வாசுகி

அஷ்டமா நாகங்களில் ஒருவளான வாசுகி, மகா சிவபக்தை. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தாம்புக் கயிறாக இருந்தவள். அப்போது தேவர்களும் அசுரர்களும் மந்திரமலையில் கட்டிஇழுத்ததால் வலி பொறுக்க மாட்டாமல், காளம் என்னும் விஷத்தைக் கக்கினாள். அதைப் பெருமான் சுருக்கி நாவற் கனி போலாக்கி விழுங்கித் தனது கண்டத்தில் நிறுத்தி நீலகண்டரானார். தனது விஷத்தைப் பெருமான் உண்டு கண்டம் கறுத்து நீலகண்டரானதைக் கண்டு அஞ்சி வருந்திய அவள் காஞ்சிபுரம் சென்று சிவலிங்கம் அமைத்து வழிபட்டாள்.

அந்த லிங்கம் அமைந்த ஆலயம் மணிகண்டேசம் என்னும் பெயரில் உள்ளது. திருவொற்றியூரில் தன்னை வழிபட்ட வாசுகியைப் பெருமான் எடுத்துத் தனது திருமேனியில் ஒடுக்கிக் கொண்டார். அதனால் படம்பக்கநாதர் எனவும், வாசுகீசுவரர் எனவும் அழைக்கப்படுகிறார். திருவொற்றியூரில் மூலவராக  உள்ள லிங்கம் பாம்புப் புற்று வடிவுடன் இருப்பதுடன் அதில் வாசுகியின் திருவுருவம் அமைந்திருப்பதைக் காணலாம்.

சிவபெருமான் முப்புராதிகளை அழிக்கச் சென்ற போது அவருடைய வில்லில் கட்டிய நாணாக வாசுகி இருந்தாள். இவள் சிவபெருமானிடம் உபதேசம் பெற்று அவருடைய சந்நதியை விட்டு நீங்காது இருக்கின்றாள். இவள் அமைத்த தீர்த்தங்கள் இவளின் பெயரால் வாசுகி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இவளது மகள் உலூபியை பாண்டவருள்  ஒருவனான அர்ச்சுனன் மணந்தான் என்று பாரதம் கூறுகிறது.

தொகுப்பு: கார்த்திக்

Related Stories:

>