சென்னை: சினிமாக்காரன் என்ற நிறுவனம் சார்பில் எஸ்.வினோத் குமார் தயாரிக்க, ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வே மேக்னா, பிரசன்னா பாலசந்திரன், ஜென்சன் திவாகர், ஆர்.சுந்தர் ராஜன், பாலாஜி சக்திவேல் நடித்த படம், ‘குடும்பஸ்தன்’. இப்படம் திரைக்கு வந்து வெற்றிபெற்றதை தொடர்ந்து நடந்த நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய சான்வே மேக்னா, ‘தெலுங்கில் சில படங்களில் நடித்தேன். பிறகு தமிழுக்கு வந்தேன்.
எனது முதல் படத்துக்கே இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தமிழில் நான் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன். அதாவது, 100 படங்களிலாவது நடித்து ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். விரைவில் இப்படம் தெலுங்கிலும் வெளியாகிறது. படத்தைப் பார்த்தவர்கள், என்னைப்போல் ஒரு மனைவி வேண்டும் என்று சொல்லியிருந்தனர். ஒருவருடைய வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியம் இல்லை என்பதை இப்படம் சொல்லிக் கொடுத்திருக்கிறது’ என்றார்.
