நல்வாழ்வு அருள்வார் நாகராஜர்

நாகவழிபாட்டிற்காக கோயில்கள் பல இருந்தாலும் நாகத்தின் பெயரையே கொண்ட நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலை போன்று சிறப்புமிக்கது வேறில்லை. நாகர்கோவில் பெயர் காரணமும் நாகராஜா கோயிலை மையமாக வைத்தே உள்ளது. இந்த நாகராஜருக்கு உகந்தநாள் ஞாயிற்றுக்கிழமைதான். என்ன காரணம்? பூதல வீர உதயமார்த்தாண்டர் தற்போதைய களக்காடு முதல் குமரி மாவட்டம் அடங்கியதான வேணாட்டை ஆண்டு வந்தவர். இவர் தொழுநோயால் அவதிப்பட்டார்.

நாகராஜா கோயிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபாடு செய்தார், உடனே அவரது நோய் நீங்கியதாகவும், இதனை தொடர்ந்து கோயிலுக்கு நிபந்தம் அளித்ததாகவும் செய்தி உண்டு. அப்போதிருந்து நாகராஜா கோயிலில் ஞாயிறு வழிபாடு தொடர்ந்ததாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இக்கோயிலின் கருவறைக்கு பின்புறம் உள்ள இடத்தில் தொழு நோயை குணப்படுத்தும் ஆற்றல் உடைய ‘ஒடி வள்ளி’ என்னும் மூலிகை செடி இருந்தது என்றும், இதன் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு சுவை கொண்டது என்றும் இங்கு வாழும் பெரியவர்கள் கூறுவதுண்டு.

‘மகாமேரு மாளிகை’ என்று அழைக்கப்படும் தெற்குவாசல், கோயிலின் நுழைவு வாயிலாக உள்ளது.

நாகர்கோவில் நகராட்சியின் முத்திரை சின்னமாக மகாமேரு மாளிகை இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. இவ்வழியாகத்தான் பக்தர்கள் கோயிலுக்குள் செல்கின்றனர். கோயிலை சுற்றி ஒரு கி.மீ சுற்றுவட்டார பகுதியில் யாரும் பாம்பு கடித்து இறந்தது இல்லை என்ற கூற்றும் உள்ளது. மூலவர் நாகராஜர். இங்கு சிவன், திருமால். பாலமுருகனுக்கு தனித்தனி சந்நதிகள் உண்டு. நாகராஜர், அனந்தகிருஷ்ணர் சந்நதிகளுக்கு இடையே அங்கியுடன் கூடிய சிவலிங்கம் உள்ளது. நாகராஜா கருவறையின் மேற்கூரை ஓலையால் வேயப்பட்டிருப்பது சிறப்பான அம்சமாகும். அக்கூரையில் எப்போதுமே ஒரு பாம்பு காவல் புரிகிறது என்றும் வருடந்தோறும் ஆடி மாதம் கூரை புதிதாக வேயப்படும்போது ஒரு பாம்பு வெளிவருவது வழக்கம் என்றும் சொல்கிறார்கள்.

மூலவர் அமைந்துள்ள இடம் எப்போதும் ஈரமாகவே இருக்கிறது. மூலவர் இங்கு தண்ணீரிலேதான் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அந்த தண்ணீர் ஊற்றிலிருந்து எடுக்கப்படும் மண்ணே இக்கோயிலின் முக்கிய பிரசாதமாகும். இது 6 மாதகாலம் கருப்பு நிறமாகவும், 6 மாதகாலம் வெள்ளை நிறமாகவும் மாறிவருகிறது. எவ்வளவோ காலமாக பிரசாதம் எடுத்தும் அந்த மண் குறையாமல் இருப்பது அதிசயம். இக்கருவறையில் விமானமும் கிடையாது. பீடமும் கிடையாது. பாம்பிற்காக எழுப்பப்பட்ட இந்த ஆலயத்தில் உட்கோயில் வாசலில் இருபக்கமும் ஐந்து தலையுடன் படமெடுத்த கோலத்தில் ஆறு அடி உயரத்தில் இரண்டு பெரிய பாம்பு சிலைகள் உள்ளன.

நாகதோஷம் உள்ளவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டு சென்றால் தோஷம் நிவர்த்தியாகிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அடுத்தடுத்து 11 ஆயில்யம் நட்சத்திர நாட்களில் நாகராஜாவிற்கு பால் ஊற்றி வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதுபோல் திருமணம் தடைப்பட்டவர்கள் 7 வாரம் தொடர்ந்து வழிபட்டால் திருமணம் கைகூடும். நாகராஜாவுக்கு ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமை சிறப்பு வாய்ந்ததாகும். தினமும் அதிகாலை 4 முதல் பகல் 11.30 மணிவரையும், மாலை 5.30 முதல் 8.30 மணிவரையும் கோயில் திறந்திருக்கும். ஆனால் ஞாயிற்றுக்கிழமை, ஆயில்யம் நட்சத்திர நாட்களில் பகல் 1 மணிவரை திறந்திருக்கும். அதிகாலை 4.30 மணிக்கும், காலை 10 மணிக்கும் அபிஷேகம் நடக்கும். நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

Related Stories: