தாயுடன் சேர்ந்து நடிகை ஹன்சிகா வரதட்சணை கொடுமை; போலீசில் அண்ணி பரபரப்பு புகார்

மும்பை: ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடிகை முஸ்கான் போலீசில் புகார் அளித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் ‘வேலாயுதம்’, சூர்யாவுடன் ‘சிங்கம் 2’, தனுஷுடன் ‘மாப்பிள்ளை’, சிம்புவுடன் ‘வாலு’, ஜெயம் ரவியுடன் ‘ரோமியோ ஜூலியட்’, ‘அரண்மனை’ உள்பட படங்களில் நடித்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து மணந்தார். இப்போது தமிழில் காந்தாரி என்ற படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானியை பாலிவுட் நடிகையான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் காதலித்து கடந்த 2020ல் மணந்தார். இப்போது இவர்கள் பிரிந்து வாழ்கிறார்கள். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மும்பை அம்போலி காவல் நிலையத்தில் முஸ்கான் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், ‘‘எனது கணவர் பிரசாந்த் மோத்வானி, அவரது தாய் ஜோதி மோத்வானி, தங்கை ஹன்சிகா மோத்வானி ஆகியோர் விலையுயர்ந்த பொருட்கள், பணத்தை கேட்டு வரதட்சணை கொடுமை செய்கிறார்கள். ஓரிரு ஆண்டுகள் நன்றாக சென்ற எங்களது திருமண வாழ்க்கையில் மாமியார் ஜோதி, நாத்தனார் ஹன்சிகாவால் பிரச்னைகள் தொடங்கியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இது குறித்து ஹன்சிகா தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை.

 

Related Stories: