சிவராத்திரி அன்று சிவனுக்கு நடைபெறும் நான்கு ஜாம பூஜையின் சிறப்புக்களை தெரிந்துகொண்டு விரதம் இருப்பதே புண்ணியம்.

எம்பெருமானின் ஆசியை பரிபூரணமாக பெற வேண்டுமென்றால் சிவராத்திரியன்று விரதமிருந்து, இரவு முழுதும் தூங்காமல் கண் விழித்து, சிவபெருமானின் நாமத்தையோ அல்லது ‘ஓம் நமச்சிவாய’ மந்திரத்தையோ அல்லது தேவாரம், திருவாசகம், திருமுறை, சிவசோத்திரம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம், திருமுறை இப்படி சிவனின் பெருமைகளை கூறும் எந்த ஒரு நூல்களை படிப்பதிலும் நமக்கு புண்ணியம் தான் கிடைக்கும். இதோடு சேர்த்து ‘சிவாய நம’ என்ற மந்திரத்தை சிவராத்திரி தினத்தன்று முழுவதும் மனதார உச்சரித்து வந்தால் நமக்கு வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்பதும் நம் முன்னோர்களின் கூற்று. நம்மில் பெரும்பாலானோர், கோயிலுக்கு சென்று அந்த பூஜையில் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்து இருப்போம். ஆனால் அந்த நான்கு ஜாம பூஜைகள் எதற்காக நடைபெறுகின்றன? நான்கு கால பூஜை காண அர்த்தம்தான் என்ன? என்பதற்கான விளக்கத்தையும் தெரிந்துகொண்டு பூஜையில் கலந்து கொள்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. நான்கு ஜாம பூஜைகள் பற்றி தெரியாதவர்கள் சிவராத்திரியின் இந்த புனிதமான நாளில் அதைத் தெரிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. சிவராத்திரியில் விரதமிருந்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளும்போது, சிவபெருமானின் நான்கு கால பூஜைக்கு உண்டான அர்த்தத்தையும் தெரிந்துகொண்டு உங்களது புண்ணியத்தை பல மடங்காக பெருக்கி கொள்ளலாம்.

பொதுவாக சிவராத்திரி அன்று அந்த எம்பெருமானை நான்கு காலத்திலும், நான்கு கோலத்திலும் தரிசனம் செய்யவேண்டும் என்று கூறுவார்கள். நான்கு காலம் என்பது நான்கு ஜாம பூஜையை குறிக்கின்றது. முதல் ஜாமம் மாலை 6 மணியிலிருந்து 9 மணிவரை. இரண்டாம் ஜாமம் இரவு 9 மணியிலிருந்து 12 மணி வரை. மூன்றாம் ஜாமம் நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரை. நான்காம் ஜாமம் அதிகாலை 3 மணியிலிருந்து 6 மணிவரை. இதில் முதல் ஜாமத்தில் எம்பெருமான் ‘சோமஸ்கந்தர்’ அலங்காரத்தில் காட்சி தருகின்றார். சிவன், முருகன், உமாதேவி இவர்கள் மூவரையும் சேர்த்து வழிபடுவதே சோமஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜையானது பிரம்மதேவன், சிவபெருமானை நினைத்து செய்யும் பூஜையாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் நடைபெறும். அதாவது பசும்பால், பசு தயிர், பசுநெய், கோமியம், கோசானம் இவைகள் ஐந்தும் சேர்ந்ததே பஞ்ச கவ்வியம் என்று அழைக்கப்படும்.

சிவபெருமானை மஞ்சள் நிற பொன் ஆடையால் அலங்கரித்து, தாமரைப் பூவால் அர்ச்சனை செய்து, பாசிப்பருப்பு பொங்கல் வைத்து நைவேத்தியம் படைக்கப்படும். ரிக்வேத மந்திரங்கள் ஓத, பசு நெய் தீபமேற்றி பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டால் நம்முடைய பிறவி கர்ம வினை நீங்கும் என்பது ஐதீகம். இரண்டாம் ஜாம பூஜையில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும். இந்த பூஜையானது விஷ்ணு பகவான், சிவபெருமானுக்காக செய்யப்படும் பூஜையாக கருதப்படுகிறது. சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சந்தனக்காப்பு அணிவித்து, வெண்பட்டு ஆடை அலங்காரம் செய்து, இனிப்பு பாயசம் நைவேதியமாக படைத்து, நல்லெண்ணை தீபம் ஏற்றி, யஜுர் வேதம் ஓதி, இரண்டாம் பூஜையானது சிறப்பாக நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தால் செல்வச் செழிப்பும் பெருகும்.

மூன்றாம் ஜாம பூஜையில் கருவறையின் பின்புறம் இருக்கும் லிங்கோற்பவரை தரிசனம் செய்ய வேண்டும். இந்த பூஜையானது உமாதேவி, சிவபெருமானை நினைத்து செய்யும் பூஜையாக கூறப்படுகிறது. தேன், பச்சை கற்பூரம், வில்வ இலை, இவைகளை கொண்டு அபிஷேகம் நடைபெற்று, சிவப்பு பட்டுத்துணியால் அலங்காரம் செய்து, ஜாதிமல்லி பூ அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி, சாம வேதம் ஓதி பூஜைகள் சிறப்பாக நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டால் தீய சக்திகள் நம்மை அண்டாமல் சக்திதேவி பாதுகாப்பால் என்பது ஐதீகம். நான்காம் ஜாம பூஜையில் ரிஷப வாகன சிவபெருமானை சந்திரசேகராக தரிசனம் செய்ய வேண்டும். இந்த பூஜையானது உயிருள்ள அனைத்து ஜீவராசிகளுடன் சேர்ந்து முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வழிபடுவதாக சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

குங்குமப்பூ, கரும்புச்சாறு, பால் இவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, நந்தியாவட்ட பூவால் அர்ச்சனை செய்து, வெண் சாதம் நைவேத்தியமாக படைக்கப்பட்டு, அதர்வண வேதம் ஓதி, தீப தூப ஆராதனைகள் காட்டப்பட்டு பூஜையானது சிறப்பாக நடைபெறும். இந்த பூஜையில் கலந்து கொண்டால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும். இப்படியாக சிவபெருமானை உங்களின் உடல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விரதமிருந்து, மனதார எந்த குறையும் இல்லாமல் செய்யப்படும் சிவ பூஜையை, சிவபெருமான் கட்டாயமாக ஏற்றுக் கொள்வார், என்பதை மனதில் வைத்துக்கொண்டு வழிபட்டால், உங்களுக்காக கிடைக்கும் வரத்தினை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது. சிவபெருமானை நினைத்து பிரார்த்தனை செய்யும்போது, நம்முடன் சேர்த்து ‘நம்மைச் சுற்றி இருக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்’ என்ற பிரார்த்தனையை வைத்துக்கொண்டு இந்த சிவராத்திரியை வழிபடுவோம்.

Related Stories: