மகா சிவராத்திரி உருவான கதை பற்றி தெரியுமா ?

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் முக்தியை அளிப்பவராக சிவபெருமான் இருக்கிறார். அந்த சிவபெருமானை வழிப்படுவதற்குரிய ஒரு அற்புத நாளாக மாசி மாதத்தில் தேய்பிறை காலத்தில் வரும் மகா சிவராத்திரி தினம் இருக்கிறது. இந்த சிவராத்திரி தினம் குறித்த பல ஆன்மீக சுவாரஸ்யம் மிகுந்த புராண சம்பவங்கள் பல உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு தெரிந்து கொள்ளலாம். தேவர்களும் அசுரர்களும் இறவா வரம் தரும் தேவாமிர்தம் பெற பாற்கடலை கடைந்தனர். அப்போது அந்த பாற்கடலில் இருந்து வெளிப்பட்ட உலகின் அனைத்து உயிர்களையும் கொள்ள கூடிய ஆலகால விஷத்தை உலக உயிர்களை காக்கும் பொருட்டு சிவபெருமான் அருந்தினார். அப்படி சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி உலகை காத்த தினம் இந்த மகா சிவராத்திரி தினமாகும்.

நினைத்தாலே முக்தி தரும் தலமாக திருவண்ணாமலை இருக்கிறது. இந்த திருவண்ணாமலையில் அக்னி மலையாக இருக்கும் சிவபெருமானின் தோற்றதை கண்டு பிரமித்து நின்ற, நாராயணனையும் நான்முகனையும் தன் அடி முடி கண்டு வர போட்டி வைத்தார் சிவ பெருமான். சிவனின் முடியை காண அன்னப் பறவையாக உருவெடுத்த பிரம்மாவும், சிவனின் அடியை காண வராக அவதாரம் எடுத்த விஷ்ணுவும் ஈசனின் சிரத்தையோ பாதத்தையோ காண முடியாமல் தோற்று சிவனை பணிந்த தினமும் சிவராத்திரி தினம் ஆகும். மேலும் சிவன் அக்னி மலையாக உருவான தினம் மகா சிவராத்திரி தினம் என்பது சிறப்பு.

உலகம் பிரளயம் ஏற்பட்டு அழியும் நிலை உருவான போது, அந்த இரவுப் பொழுதில் அன்னை உமாதேவி சிவபெருமானை பூஜித்து அருள் பெற்றார் எனவும், அந்த இரவில் தன்னைப் போல விரதம் இருப்போர் யாராயினும் அவர்களுக்கும் மோட்சம் அளிக்க வேண்டுமென பரமேசுவரனிடம் பராசக்தி வரம் பெற்றதும் இந்த சிவராத்திரி தினத்தில் தான் என கூறப்படுகிறது. இஷ்வாகு குலத்தில் பிறந்த சித்ரபானு என்ற சக்கரவத்தி ஜம்புத்வீபத்தை எனப்படும் பறந்து விரிந்த அகண்ட பாரதத்தை ஆட்சி புரிந்து வந்தான். மகா சிவராத்திரியின் போது தனது மனைவியுடன் உபவாசம் இருந்து சிவபூஜை செய்தான். ஒரு சிவராத்திரியன்று அஷ்ட வக்ர மகரிஷி அவனது தர்பாருக்கு விஜயம் செய்தார். அப்போது அவர் மன்னனுக்கு சிவராத்திரி மகிமையை விளக்க ஒரு கதை கூறினார்.

அதாவது ஒரு சமயம் காட்டோரம் வசித்த வேடன் ஒருவன் வேட்டையாடச் காட்டிற்குள் சென்றான். இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு புலியைக் கண்டான். வேடனை பார்த்த புலியும் அவனை துரத்தியது. புலிக்கு பயந்த வேடன் வேகமாக அருகிலுள்ள ஒரு ஒரு வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். மரத்திற்கு கீழே வேடனை தாக்க புலி காத்துக் கொண்டிருந்தது. வேடனுக்கு தூக்கம் கண்ணை சுழற்றியது. கிளையில் படுத்து தூங்கலாம் என்றால் தூக்கத்தில் கீழே விழுந்து புலிக்கு இரையாகி விடுமோ என்ற பயம் வேடனுக்கு இருந்தது. எனவே தூக்கம் வராதிருக்க மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கீழே போட்டுக் கொண்டிருந்தான்.

அந்த மரத்தின் அடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. வேடன் பறித்துப் போட்ட வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மேல் விழுந்து கொண்டிருந்தன. அன்று சிவராத்திரி என்பதை வேடன் அறியவில்லை. வேடன் அந்த ராத்திரி முழுவதும் தூங்காமல், உணவு எதுவும் உண்ணாமல் வில்வ இலைகளை பறித்து சிவலிங்கத்தின் மீது போட்ட செயல் சிவனுக்கு அவனையறியாமல் செய்த வில்வ அர்ச்சனை ஆனது. தன்னை அறியாமல் சிவராத்திரி விரதம் இருந்த வேடனின் முன்னால், புலி உருவில் இருந்த சிவபெருமான் தனது நிஜ ஸ்வரூபத்தில் காட்சியளித்தார். வேடனின் செயலை பாராட்டி அவனுக்கு மோட்சப் பதவி அருளினார். இந்தக் கதையை ரிஷிகள் சொல்லக் கேட்ட மன்னன் புன்னகை செய்தான். முன் பிறவியில் தானே அந்த வேடனாக இருந்ததாகவும். சிவராத்திரி புண்ணியம் காரணமாக இப்பிறவியில் சக்கரவர்த்தியாக பிறந்திருக்கிறேன் என்று சித்ரபானு மன்னன் அஷ்ட வக்ர மகரிஷியிடம் கூறினான். இது சிவராத்திரி பூஜையின் மகிமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

Related Stories: