தெளிவு பெறுஓம்

காசிக்குச் சென்று திதி கொடுக்க முடியாதவர்கள் தமிழ்நாட்டில் எந்த  கோயிலுக்குச் சென்று திதி கொடுத்தால் காசிக்குச் சென்ற புண்ணியம்  கிடைக்கும்?

- வெங்கட்ராமன், மயிலாடுதுறை.

 

“அயோத்யா  மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா..” என்கிற மந்திரம் உங்கள் கேள்விக்கான  விடையாக அமைந்திருக்கிறது. அதாவது அயோத்தி, மதுரா (தமிழ்நாட்டில் உள்ள  மதுரை அல்ல, வட இந்தியாவில் உள்ள மதுராபுரி என்கிற நகரம்), மாயா என்ற  ஹரித்வார், காசி (வாரணாசி), காஞ்சிபுரம், அவந்திகா என்கிற உஜ்ஜயினி,  த்வாரவதி என்கிற த்வாரகை இந்த ஏழும் முக்தி ஸ்தலங்கள் என்பதே அந்த  மந்திரத்தின் பொருள்.

ஆக காசிக்கு இணையானது நமது தமிழ்நாட்டில் அமைந்துள்ள  காஞ்சிபுரம் என்பதை மந்திரத்தின் மூலமாக நமது மகரிஷிகள் தெளிவுபடுத்தி  இருக்கிறார்கள். காசிக்குச் செல்ல இயலாதவர்கள் காஞ்சிபுரத்திற்குச் சென்று  திதி கொடுப்பதால் நிச்சயமாக அதற்குரிய பலனை அடைய இயலும். இதுபோக “கங்கேச  யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு”  என்கிற மந்திரத்தின் வாயிலாக கங்கைக்கு இணையானது நம் காவிரி என்ற  உண்மையும் நமக்குப் புரியும்.

காவிரி நதி எங்கெல்லாம் பாய்கிறதோ, அந்த  நதிக்கரையின் ஓரமாக அமர்ந்து செய்யும் முன்னோர்களுக்கான கடன்கள் நிச்சயமாக  பலனைத் தரும். அதற்கு உங்கள் ஊரே மிகச்சிறந்த உதாரணம் ஆகும். உலகின்  பல்வேறு மூலையில் உள்ளவர்களும் உங்கள் ஊருக்கு வந்து துலா ஸ்நானம்  செய்வதோடு தங்கள் முன்னோர்களுக்கான கடன்களையும் செய்துவிட்டுச்  செல்கிறார்கள். கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்?

?உண்மையில் சனிப் பெயச்சி எப்போது வருகிறது. ஒரு சிலர் ஜனவரி  மாதத்தில் என்கிறார்கள். வேறு சிலர் அடுத்த டிசம்பர் மாதத்தில்தான்  என்கிறார்கள். என்னைப்போன்றே பலரும் குழப்பத்தில் உள்ளனர்.  தெளிவுபடுத்துங்கள்.

 - ஜி.டி.சுப்ரமணியம், கொளத்தூர்.

 

வாக்கியம்,  திருக்கணிதம் என இரு வேறு வகையான பஞ்சாங்க கணக்குகள் நம் நாட்டில்  பின்பற்றப்படுவதால் இந்த குழப்பம் உண்டாகியுள்ளது. திருக்கணிதப்  பஞ்சாங்கத்தின் கணக்கின்படி வருகின்ற 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம்  தேதியன்று சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. வாக்கிய பஞ்சாங்க கணிதத்தின்படி  2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதியன்று அதிகாலை 05.22 மணிக்கு  சனிப்பெயர்ச்சி என்பது நடைபெறுகிறது. நம் தமிழ்நாட்டில் உள்ள ஆலயங்கள்  அனைத்திலும் வாக்கிய பஞ்சாங்க கணிதமே பின்பற்றப்பட்டு வருகிறது.

குறிப்பாக  சனிபகவானுக்கு உரிய திருநள்ளாறு திருத்தலத்தில் வாக்கிய பஞ்சாங்க  கணிதத்தையே பின்பற்றுவதால் 27.12.2020 அன்றுதான் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது  என்பதை நாம் எடுத்துக்கொள்ளலாம். சனிப்பெயர்ச்சியின் பலனை அறிந்துகொள்ள  முயற்சிக்கும்போது அவரவர் பின்பற்றுகின்ற பஞ்சாங்கம் எதுவோ அந்த கணிதத்தை  மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதில் பாதி, அதில் பாதி என்ற  நிலையை பின்பற்றக் கூடாது. நீங்கள் ஆலய விதிகளை பின்பற்றுபவர் என்றால்  திருக்கோவில் அனுஷ்டான பஞ்சாங்கம் கணிக்கப்படுகின்ற வாக்கிய கணிதத்தை  பின்பற்றலாம். திருக்கணித விதிகளை பின்பற்றுபவர் என்றால் அந்த பஞ்சாங்கம்  சொல்லும் நாளை கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள். எந்தக் கணிதமாக இருந்தாலும்  சனிபகவானின் அருள் கிடைக்க வேண்டும் என்பதே பிரார்த்தனையாக அமையட்டும்.

?விரதகாலத்தில் கறுப்பு நிற உடை உடுத்துவது சரியா?

-  பாரதி பராசரன், பெங்களூரு.

பொதுவாக நமது இந்து மதத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வர்ண ஆடை என்பது உண்டு இது ஒரு புறம் இருந்தாலும் விரதம் இருப்பதற்கு என்று தனியாக எந்த ஒரு நிறத்தையும் சாஸ்திரம் நிர்ணயம் செய்யவில்லை. விரதம் என்ற வார்த்தைக்கு மன உறுதி என்பது மட்டுமே பொருள். மனதில் உறுதியோடு இறைவனின் பால் முழு பக்தியையும் செலுத்துவோர்க்கு நிறம், மணம், சுவை எதுவும் முக்கியமில்லை. சபரிமலைக்குச் செல்வதற்கு மாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் கறுப்பு நிற ஆடையை அணிந்துகொள்கிறார்களே என்ற ஐயம் உருவாகலாம்.

அந்த நாளில் காட்டுவழிப்பயணம் மிகவும் கடுமையாக இருந்ததாலும், காட்டு மிருகங்களிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் கறுப்பு நிற ஆடை பயன்பட்டது. அதோடு காவல் தெய்வமான கருப்பண்ணசுவாமிக்கும் கறுப்பு நிற ஆடை உகந்தது என்பதால் கறுப்பு நிற ஆடையை ஐயப்ப பக்தர்கள் அணிகிறார்கள். விரதம் இருப்பதற்கு ஆடையின் நிறம் முக்கியமில்லை என்பதால் எந்த நிறத்தை உடைய ஆடையையும் விரத காலத்தில் அணிந்து கொள்ளலாம், அதே நேரத்தில் அந்த ஆடையானது அடுத்தவர்களின் கண்களைக் கவரும் வகையில் அமையக்கூடாது என்பதே உங்கள் கேள்விக்கான பதில்.

 

?இருபத்து நான்கு மணிநேரமும் திறந்திருக்க வேண்டிய கோயில்கள் கால நேரங்கள் நிர்ணயிக்கப்பட்டு மூடி பின்னர் தரிசனத்திற்கு திறந்து விடுகிற ஐதீகம் சரியா?

- அயன்புரம் த. சத்தியநாராயணன்.

 

24 மணி நேரமும் கோயில்கள் திறந்திருக்க வேண்டும் என்ற கருத்து தவறானது. ஒவ்வொரு ஆலயமும் ஒரு ஆகம விதியின் அடிப்படையில் அமைந்திருக்கும். எந்த விதியின்படி பிரதிஷ்டை செய்யப்பட்டமோ அந்த விதியை தவறாமல் பின்பற்றுவார்கள். பொதுவாக சிவாகம விதியின்படி ஆறு கால பூஜை என்பது உண்டு. உஷக்காலம், காலசந்தி, உச்சிகாலம், சாயரக்ஷை, சாயரக்ஷை இரண்டாம் காலம், அர்த்தஜாமம் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. உஷக்காலம் என்பது சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னதாக அதாவது ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டும்.

சூரிய உதயம் ஆறு மணிக்கு என்று எடுத்துக்கொண்டால் அதிகாலை நான்கரை மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியைக் கொண்டு வந்து சந்நதியைத் திறந்து பூஜை செய்வார்கள். கால சந்தி என்பது சூரிய உதயத்தில் இருந்து ஏழரை நாழிகைக்குள் நடத்தப்பட வேண்டும். அதாவது காலை ஒன்பது மணிக்குள்ளாக இந்த பூஜையானது நடத்தப்படுகிறது. உச்சிகால பூஜையானது நண்பகலில் நடக்கும். சாயரக்ஷை என்பது சூரிய அஸ்தமனத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக அதாவது மாலை நான்கரை மணியிலிருந்து துவங்கும். இரண்டாம் கால சாயரக்ஷை பூஜையானது தோராயமாக இரவு ஏழரை மணியளவில் நடைபெறும்.

அர்த்தஜாம பூஜையானது சுமார் பத்து மணியளவில் நடைபெற்று பள்ளியறை பூஜை என்பது நடைபெறும். இந்த நடைமுறை எல்லா ஆலயங்களிலும் கடைபிடிக்கப்படுகிறது. நண்பகலில் உச்சிகால பூஜை முடிந்தவுடன் சந்நதியை மூடிவிட்டு மீண்டும் சாயரக்ஷை பூஜைக்கு முன்பாகத்தான் திறப்பார்கள். அதே போல இரவினில் அர்த்தஜாம பூஜை முடிந்தவுடன் சந்நதியினை பூட்டி சாவியை பைரவர் சந்நதியில் வைத்துவிட்டு ஆலயத்தையை பூட்டிவிடுவார்கள். இது சரியான நடைமுறையே.

நமது வசதிக்காக 24 மணிநேரமும் ஆலயங்கள் திறந்திருக்கவேண்டும் என்று எண்ணக்கூடாது. ஒவ்வொரு கால பூஜையிலும் அபிஷேகம் முடிந்து அலங்காரம், நைவேத்யம் நடைபெறும் சமயங்களில் திரையிடப்பட்டிருக்கும். அந்த நேரங்களிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நடைமுறையும் சரியானதே. இறைவனின் தரிசனத்தைக் காண நாம் காத்திருப்பதில் எந்தவிதமான தவறும் இல்லை. அவ்வாறு காத்திருந்து தரிசனம் செய்யும்போது கிடைக்கும் உணர்வே அலாதியானது என்பது நாம் அனைவரும் அனுபவித்து உணர்ந்த உண்மைதானே.

 

?விரதம் இருந்து மாலை போட்டு கோயிலுக்கு சாமி கும்பிட செல்லும் பக்தர்கள் கூட சிகரெட், குட்கா போன்றவற்றை பயன்படுத்துகிறார்களே, அந்த பக்தி முழுமை அடையுமா?

 - விஜயா மாதேஸ்வரன், தர்மபுரி.

 

உங்களைப் போன்றே இதே கேள்வியை மேலும் சில வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள். விரதம் இருப்பது என்பதே மனதினைக் கட்டுப்படுத்தி இறைவனின் பால் தனது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்பதற்காகத்தான். அந்த மன உறுதி இல்லையென்றால் நிச்சயமாக அந்த பக்தியானது முழுமை அடையாது. விரதத்திற்காக மாலை அணிந்திருப்பவர்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களையும் அடக்க வேண்டும். கோபதாபத்திற்கு ஆளாகக் கூடாது. உணர்ச்சிவசத்தால் எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாது.

அவ்வாறு கட்டுப்பாட்டோடு இருக்கவேண்டுமெனில் உணர்ச்சிகளைத் தூண்டும் அசைவ உணவு, போதையைத் தருகின்ற லாகிரி வஸ்துக்களை நிச்சயமாகப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துபவர்கள் விரதம் இருப்பதால் எந்தவிதமான பலனும் இல்லை. அவர்களுடைய பக்தி முழுமையானதாக இருக்காது என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

 

?சாதாரணமாக தொடை தட்டக்கூடாது என்ற கட்டுப்பாடு எதனால் வந்தது?

-  அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.

தொடை தட்டுதல் என்பது பெற்றோருக்கான அந்திமச்சடங்கின்போது செய்யப்படுகின்ற ஒரு நடைமுறை ஆகும். தனது மடி மீது படுக்க வைத்து தொடையை ஆட்டிக்கொண்டே நம்மைத் தாலாட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோருக்கு நாம் செய்கின்ற நன்றிக்கடன். ஈர வஸ்திரம் கட்டிக்கொண்டு சிதை மீது வைக்கப்பட்டிருக்கும் உடலை தொடையைத் தட்டிக்கொண்டே சுற்றி வருவார்கள். அவ்வாறு தொடையைத் தட்டும்போது கர்த்தாவின் வஸ்திரத்தில் இருக்கும் ஈரமானது சிதையில் வைக்கப்பட்டிருக்கும் உடலின் மீது படும்.

அந்த ஈரத்தில் இருக்கும் வாசத்தினைக் கொண்டு நாம் பெற்ற பிள்ளை நமக்கான அந்திமக் கடனை செய்கிறான் என்பதை இறந்த ஆத்மா உணர்ந்து கொள்ளும். அதுமட்டுமல்லாது ஜோதிட ரீதியாக மனித உடற்கூறு இயலை பிரிக்கும்போது ஒன்பதாம் பாவகம் என்பது தொடையைக் குறிக்கும். இதே ஒன்பதாம் பாவகம் என்பதுதான் கர்ம ஸ்தானம், பித்ரு ஸ்தானம் என்று பிரித்தறியப்படுகிறது.

பித்ருக்களுக்கான கர்மாவினைச் செய்யும்போது மட்டுமே தொடையைத் தட்ட வேண்டும் என்பது ஜோதிடவியல் ரீதியாகவும் உணரப்படுகிறது. இதனால்தான் சாதாரண நாட்களில் தொடையைத் தட்டக்கூடாது என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Related Stories: