அலங்கு விமர்சனம்

செம்பன் வினோத்தின் மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், திடீரென்று அவளை நாய் கடித்துவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாய்களின் சத்தமே அவளுக்கு கேட்கக்கூடாது என்று டாக்டர் அறிவுறுத்த, தனது ரைட் ஹேண்ட் சரத் அப்பானியை அழைத்து, நகரில் எங்குமே நாய் இருக்கக் கூடாது என்று செம்பன் வினோத் கட்டளையிடுகிறார். உடனே நாய்கள் கத்தியால் வெட்டுப்பட்டு சாகின்றன. இதில் தப்பிக்கும் காளி என்ற பெண் நாயை உயிராக நேசிக்கும் குணாநிதி மற்றும் நண்பர்கள், சரத் அப்பானியின் கையை வெட்டிவிட பகை மூள்கிறது. குணாநிதி கோஷ்டியைப் போட்டுத்தள்ள சரத் அப்பானி முயற்சிக்க, பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

வாயில்லாப் பிராணிகளின் மீதும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை முழுநீள படமாக்கி பாடம் நடத்தியுள்ள இயக்குனர் எஸ்.பி.சக்திவேல், நாய்க்கும், வெள்ளந்தி மனிதர்களுக்கும் இடையிலான பாசத்தை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார். காளி என்ற நாய்தான் ஹீரோ என்று சொல்லலாம். மலைவாழ் மக்களின் யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கேரக்டர்களில் குணாநிதி, ஸ்ரீரேகா, காளி வெங்கட் உள்பட பலர் சிறப்பாக நடித்துள்ளனர். போலீசாக சண்முகம் முத்துசாமி வில்லத்தனம் செய்ய முயற்சித்துள்ளார். செம்பன் வினோத் கம்பீரமாக வருகிறார். அவரது அடியாள் சரத் அப்பானி, குணாநிதி கோஷ்டியிடம் செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொண்டு அலறுகிறார். இதர மலைவாழ் மக்கள் அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர்.

பாண்டிகுமாரின் ஒளிப்பதிவு கச்சிதம். தினேஷ் காசியின் சண்டைப் பயிற்சியும், அஜீஸ் பின்னணி இசையும் படத்துக்கு வலிமை.

Related Stories: