கும்பகோணம் சார்ங்கபாணி -பக்தர் கட்டிய கோபுரம்

இத்தல மூலவர், உற்சவர் இருவருமே சார்ங்கபாணி என்றழைக்கப்படுகிறார்கள். அதாவது வில் ஏந்தியவர். ஆராவமுதன் என்றும் பெயர் உண்டு.

மகாலட்சுமியான கோமளவல்லித் தாயாருக்கும் சார்ங்கராஜனுக்கும் இங்கே திருமணம் நடைபெற்றதால் கல்யாணபுரம் என்றும் இத்தலம் வழங்கப்படுகிறது. தேர்வடிவ முன்மண்டபமும் 11 நிலை கோபுரமும் கொண்டு மூன்று ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோயிலே கும்பகோணத்தின் மிகப்பெரிய ஆலயம் என்பார்கள்.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இயற்றிய திருக்குடந்தை புராணம் இத்தலத்தின் பெருமைகளைக் கூறுகிறது.இத்தல கருவறை விமானம், திருவரங்க கருவறை விமானத்திலிருந்து பிரித்துக் கொண்டுவரப்பட்டதாகவும், அதனால் இது வைகுந்த விமானம் என்று பெயர் பெற்றதாகவும் சொல்வார்கள். தன் ஆலய கோபுரத்தை பிறரிடம் யாசகம் பெற்று கட்டிய லக்ஷ்மிநாராயணன் எனும் பிரம்மச்சாரி இறந்தபோது பெருமாளே அவருக்கு ஈமக்கடன் செய்ததாக வரலாறு.

இப்பொழுதும் தீபாவளி அமாவாசை அன்று பெருமாள் அந்த பக்தனுக்கு திதி கொடுப்பது வழக்கம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயின வாயிலையும், தை முதல் ஆனி வரை உத்தராயண வாயிலையும் பெருமாள் கருவறைக்குச் செல்லப் பயன்படுத்துவது மரபு. தட்சிணாயின வாயில் கல்யாண வாசல் என்றும் அழைக்கப்படுகிறது. வடகலை சம்பிரதாயத்துடன் பாஞ்சராத்ர முறைப்படி நித்திய பூஜைகள் நடைபெறுகின்றன. ஆடி மாதம் ஜேஷ்டாபிஷேக ஏகாதசியில் மூலவருக்கு எண்ணெய்க் காப்பு சாத்தி 45 நாட்களுக்குக் களையாமல் வைத்திருப்பார்கள்.  அந்நாட்களில் உற்சவர் வீதியுலா வருவதில்லை. தீபாவளி அன்று மூலவருக்கு புனுகு சாத்துப்படி நடைபெறும்.

பெருமாளின் சயனக்கோலம் கண்டு பெருமாளுக்கு என்ன அலுப்போ என்ற பொருளில் ‘நடந்த கால்கள்..’ எனும் பாசுரத்தைப் பாட, உடனே பெருமாள் எழுந்திருக்கும் பாவனையில் காட்சி தந்தார், தருகிறார். இது உத்தான சயனம் எனப்படுகிறது. திருமழிசையாழ்வார் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்து இறுதியில் ஜீவன் முக்தி பெற்றது திருக்குடந்தையில்தான். எனவே இத்தலத்தை திருமழிசைப்பிரான் உகந்த இடம் என அழைப்பது வழக்கம்.

மூலக் கருவறையில் ஆதிசேஷன் மேல் உள்ள பள்ளி கொண்ட குழந்தை கண்ணனை குழந்தை இல்லாதவர்கள் கையில் எடுத்து பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோமளவல்லித் தாயார் அவதரித்த தலமாதலால் தாயாரை வழிபட்ட பின்னே பெருமாளை வழிபடுவது இத்தல மரபு. இத்தாயார் படி தாண்டா பத்தினி என அழைக்கப்படுகிறார். காணும் பொங்கல் அன்று மட்டும் தாயார் ஆலயத்தின் உட்பிராகார வலம் வந்து கனுப்பிடி வைப்பது மரபு. அப்போது பெண் பக்தர்கள் தாயாருடன் அந்த வைபவத்தில் கலந்து கொள்வர்.

தைத்திருவிழாவின் போது திருமணநாள் நினைவாக கோமளவல்லித் தாயாருக்கு இத்தலத்தில் மாலை மாற்றும் விழா சிறப்பாக நடைபெறுகிறது. உற்சவர் சங்கு, சக்கரம், கதாயுதம், வில், உடைவாள் ஆகிய பஞ்சாயுதங்களுடன் வலது திருக்கரம் அபயம் வழங்க ஐம்பொன் விக்ரக வடிவில் திகழ்கிறார்.

இத்தல தேர், சித்திரைத் திருத்தேர் எனும் பெயரில் திருவெழுகூற்றிருக்கை எனும் பிரபந்தத்தைப் பாடி திருமங்கையாழ்வாரால் சமர்ப்பிக்கப்பட்டது. வைகுந்த ஏகாதசியன்று அரையர் சேவை சிறப்பாக நடைபெறும். பெருமாளுக்கு மொச்சை, பாசிப்பருப்பு, உளுந்து, துவரை, கொள்ளு ஆகியவற்றை குறுநொய்யாக உடைத்து, வேகவைத்து வெல்லம், பசு நெய் சேர்த்து நித்தம் புதிய மண்பானையில் செய்யப்படும் பிரசாதம் கும்மாயம் என அழைக்கப்படுகிறது.

தைமாத மட்டையடி உற்சவம் புகழ் பெற்றது. தன்னிடம் சொல்லாமல் வெளியே சென்ற பெருமாளை ஆலயத்திற்குள் அனுமதிக்காமல் தாயார் கதவை மூட, நம்மாழ்வார் தலையிட்டு ஊடலை தீர்க்கும் வைபவம் அது.

Related Stories: