மனிதநேயமும், அறமும் மட்டுமே வெல்லும் என்று, நேர்மையின் உச்சமாக வாழும் கேரக்டரில் சமுத்திரக்கனி 100 சதவீதம் பொருந்துகிறார். கிளைமாக்சில் அவர் பேசும் வசனங்கள் சாட்டையடி. குடும்ப வறுமையின் காரணமாக அவரை ஒன்றரை கோடி ரூபாய்க்கு அடிமையாக்கும் அனன்யா, இரு மகள்கள், இளவரசு ஆகியோர், கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்துள்ளனர். பாரதிராஜா, வடிவுக்கரசி தம்பதிக்கு ஓரிரு காட்சிகள் என்றாலும், அனுபவ நடிப்பை வழங்கியுள்ளனர். நாசர், கருணாகரன், சுலீல் குமார், தம்பி ராமய்யா, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், சேரன்ராஜ் உள்பட பலர், தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர்.
தமிழகம் மற்றும் கேரள இயற்கையை கேமராவில் அள்ளிக்கொண்டு வந்து அசத்தியிருக்கிறார், எம்.சுகுமார். குறிப்பாக, ‘பொம்மக்கா’ பாடலில் ஒளிப்பதிவு அசத்தல். விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அழுத்தமான முத்திரை பதித்திருக்கிறார். நேர்மையாக வாழ்பவனுக்கு சோதனைகள் வரும். வறுமையிலும் நேர்மையைக் கடைப்பிடித்தால், அதிர்ஷ்டம் அவனை தேடி வரும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கும் இயக்குனர் நந்தா பெரியசாமி, கேரள பார்டரில் கதை நடப்பதால், ஓணம் பண்டிகை காட்சிகளை அடிக்கடி இடம்பெறச் செய்திருப்பது, காட்சிகளின் ஓட்டத்துக்கு தடை போடுகிறது. போலீசாரின் திடீர் மனமாற்றம் டிராமாவாக இருக்கிறது. நேர்மையே வெல்லும் என்ற பாடத்தை படம் சொல்லியிருக்கிறது.