செய்யாறில் அருள்பாலிக்கிறார் தேவர், முனிவர்களுக்கு வேதம் ஓதுவித்த வேதபுரீஸ்வரர்

தொண்டை நாட்டில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில். இங்குள்ள சுயம்பு மூர்த்தியான இறைவன் தேவர் மற்றும் முனிவர்களுக்கு வேதம் ஓதுவித்ததால் வேதபுரீஸ்வரர் என்றும், வேதநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.  தாயார் பாலகுஜாம்பிகை என்றும், இளமுலையம்பிக்கை என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தை திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தேவாரப்பாடலில் புகழ்ந்து பாடியுள்ளனர். அதேபோல் இங்குள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதரும் பாடியுள்ளார். வேதபுரீஸ்வரர் அழகிய சதுர ஆவுடையார் மீது பெருலிங்கமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாயார் பாலகுஜாம்பிகை தனி சன்னநிதியில் கருணையே வடிவாக அருள்பாலிக்கிறார்.  கலைநுணுக்கத்துடன் எழில்மிகுந்த தோற்றத்துடன் நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கி வருகிறார்.

இங்கு தீர்த்தமாக கல்யாண கோடி தீர்த்தமும், மானச தீர்த்தமும், தல விருட்சமாக பனையும் உள்ளது.  இந்த கோயிலின் கருவறை, அரைநாழி மண்டபம் ஆகியவை 5 ஆம் நூற்றாண்டில் சிம்மவர்மன் காலத்திலும், பஞ்சபூதத்தல கோபுரங்கள் 10 ஆம் நூற்றாண்டில் பராந்தக சோழன் காலத்திலும், அம்பாள் சன்னதி முன் மண்டபம் ஆகியவை மாறவர்மன் காலத்திலும்,  சுற்றுவழி மண்டபம் இணைத்த முன் மண்டபம் 12 ஆம் நூற்றாண்டில் விக்கிரமசோழன் காலத்திலும், கல்யாண மண்டபம் 13 ஆம் நூற்றாண்டில் சம்புவராயர்கள் காலத்திலும், நூற்றுகால் மண்டபம் திருமலை  நாயக்கர் காலத்திலும், ராஜகோபுரம், புற மதிற்சுவர், 2ஆம் நிலை கோபுரம் ஆகியவை 16 ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயன் காலத்திலும் கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றது.

ராஜகோபுரம் 6 நிலைகளை கொண்டு கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோபுரத்தின் நான்கு மூளையிலும் 4 பூதங்களும், அதன் பக்கத்தில் இரு ரிஷபங்களும் அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் துஷ்ட, பூத, பிரேத, பிசாசுகள் பயந்து ஓடவும், தரிசனம் செய்ய வருபவர்களை காத்து ரட்சிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் நான்கு திசைகளிலும் கிழக்கே மூலவரின் வடிவமும், தெற்கே  தட்சணாமூர்த்தி வடிவமும், மேற்கே விஷ்ணு வடிவமும், வடக்கே பிரம்மா வடிவமும் வடிக்கப்பட்டுள்ளது. இக்கோவிலினுள் நுழைந்தவுடன் ராஜகோபுரத்தை பார்த்தவாரு கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார் நந்திபகவான். இறைவன் ஸ்ரீவேதபுரீஸ்வரர் மாதர்வர்களுக்கு, வாணவர்களுக்கும் ரிக், யசூர், சாம, அதர்வண வேதங்களை உபதேசம் செய்தபோது பகைவர்கள் (அசுரர்கள்) நுழைவதை தடுக்கவே காவல் தெய்வமாக நந்தி பெருமான் வாயிலைப் பார்த்தவாறு நிறுத்தப்பட்டு உள்ளது.

கோயிலின் வடமேற்கு மூளையில் தல விருட்சமான பனை மரங்கள் உயர்ந்தோங்கியும், அதன் அருகே மண்டபமும் காணப்படுகிறது. திருஞானசம்பந்தர் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இத்திருத்தலம் வந்து வணங்கி வழிபட்டபோது அடிவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்பனையை பெண் பனையாக காய்க்குமாறு பதிகம் பாடினார். ஆண் பனைகள் அத்தனையும் குரும்பை ஈன்று பெண் மரங்களாக மாறி காய்கள் விழுந்தன. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதமும் திருஞானசம்பந்தரின் 11 பதிகம் பாடிய பின்புதான் பனம் பழம் விழுகிறது. இப்பழத்தினை சாப்பிட்டால் குழந்தை பாக்கியமும், தீராத நோய்களும் தீர்க்கும் அற்புத பிரசாதமாக திகழ்கிறது.முதல் பிரகாரம் சுற்று முடித்து உள்யே நுழையும் போது 11 தலை நாகத்தை அடக்கியவாறு, கீழே பூமாதேவி, மச்சம்(மீன்), கூர்மம்(ஆமை), 8 யானைகள் இவற்றின் மீது வன்மீகநாதன் காட்சியளிக்கிறார். இவரை சனிக்கிழமை தோறும் காலை 9 மணி முதல் 10.30 மணிவரை வழிபட்டால் சகலதோஷங்களும் நீங்கி லட்சுமி கடாட்சம் கிடைக்கும். இந்த அமைப்பு இந்தியாவிலே இங்கு மட்டும்தான் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: