புதுடெல்லி: 97வது ஆஸ்கர் விருதுக்கான, சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான பிரிவு போட்டியிலிருந்து ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் வெளியேறியது. திருமணம் ஆகி ஊருக்கு செல்லும் ஹீரோ தவறுதலாக மனைவி என நினைத்து வேறு பெண்ணை அழைத்து செல்ல பின் நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. யதார்த்தமான காட்சிகள் மூலம் நம்மை இந்த படத்தோடு ஒன்ற வைத்து இருந்தார்கள். ஆமிர்கான் தயாரித்த இப்படத்தை அவரது மாஜி மனைவி கிரண் ராவ் இயக்கினார். 2025 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுப் பட்டியலில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்த ‘லாபத்தா லேடீஸ்’ திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 15 படங்களில் இடம்பெறவில்லை. இதனை, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும், இந்தியாவைப் பற்றிய மற்றொரு படமான, பிரிட்டிஷ் இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் சந்தியா சூரியின் ‘சந்தோஷ்’ படம் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.