கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அதிரசம் சுட்டு வழிபடும் சென்னம்மாள் கோயில்: தென்பெண்ணை ஆற்றங்கரைகளின் காவல் தெய்வம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த ஜம்புகுட்டப்பட்டியில் இருக்கிறது பிரசித்தி பெற்ற சென்னம்மாள் கோயில். திருவண்ணாமலையின் நீப்பத்துறை, தர்மபுரியின் தீர்த்தமலை என்று தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் அருள்பாலிக்கும் சென்னம்மாவை குல தெய்வமாகவும், கிராமத்து காவல் தெய்வமாகவும் கொண்டாடி வழிபடுகின்றனர் மக்கள். அந்த வகையில் போச்சம்பள்ளி ஜம்புகுட்டப்பட்டியிலும் அருள்பாலித்து நிற்கிறாள் சென்னம்மாள் என்கின்றனர் கிராமத்து மக்கள்.

நாவப்கள் ஆண்டகாலத்தில் பெண்கள் மீதான கொடுமைகள் கட்டுக்கடங்காமல் இருந்தது. அவர்களின் ஓலம், கைலாயத்திலுள்ள உமையவளின் காதுகளுக்கு கேட்டது. இதனால் அவர்களின் துயர்துடைக்க சமுத்திரம் என்னும் சிற்றூரில் சிறுமியாக உருவெடுத்து விவசாயி ஒருவரின் மகளாக பூலோகத்திற்கு வந்தார். செல்வமாக கிடைத்த, அந்த பெண் குழந்தைக்கு ‘சென்னம்மாள்’ என்று பெயரிட்டு வளர்த்தார் விவசாயி. தங்கையை பாதுகாக்க, திருமாலும் ஒரு சித்தராய் உருவெடுத்து, அந்த கிராமத்தில் உலவிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் நவாப்பின் கண்ணில் பட்ட சென்னம்மாள், அவனுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக திருமணம் செய்வதற்கும் ஒப்புக்கொள்கிறாள்.

இதை தடுப்பதற்காக சித்தர் கோலத்தில் இருந்த திருமால், ஆற்றில் இருந்த பெரியபாறையில் உமையான சென்னம்மாளை மறைத்து விடுகிறார். தாய் தந்தையர்கள் தன் மகள் நீரில் மூழ்கி இறந்துவிட்டாள் என்று முடிவு செய்து, ஆற்றில் தலை முழுகிவிட்டு சென்னம்மாளுக்கு பூ, பொறிகடலை, தேங்காய், கற்பூரம், மஞ்சள், குங்குமம், காதோலை கருமணி, அவல் தின்பண்டங்கள் வைத்து கும்பிட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். சிலநாட்கள் கழித்து சென்னம்மாள், உமையவளின் அம்சம், தங்களை காக்க வந்த காவல் தெய்வம் என்பதை உணர்ந்து மனமுருக வழிபடத் துவங்கினர். இந்த வகையில் தென்பெண்ணையாற்றின் கரைகளில் உள்ள மரத்தடிகளில் சென்னம்மாளுக்கு கோயில் கட்டி குலதெய்வமாக வழிபடத் தொடங்கினர் என்பது வரலாறு.

அதிலும் ஆடி மாதத்தில் நடக்கும் சென்னம்மாள் கோயில் தேரோட்டம், பட்டி தொட்டியெல்லாம் பிரசித்தி ெபற்றது. பம்பை உடுக்கை, காவடியாட்டம், கை சிலம்பு, நையாண்டி மேளம், கரகாட்டம், தாரை தப்பட்டை என்று திரும்பிய திசையெல்லாம் கிராமியக் கலைகளால் குதூகலம் கொந்தளிக்கும். இதில் கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு, பெண்கள் அதிரசம் சுட்டு, சென்னம்மாளுக்கு படையலிட்டு வழிபடுவது வியப்பின் உச்சமாகவே கருதப்படுகிறது. சென்னம்மாள் கோயிலில் கொடி ஏற்றுதல், கலச கும்ப பூஜை, அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை, சென்னம்மாள் சுவாமியுடன் தேர் உலா, ஓமகுண்ட பூஜை, 48 சங்கு அபிஷேகம் என்று வழிபாடுகள் களை கட்டும்.

அப்போது பெண்களும், ஆண்களும் ஈரத்துணியுடன் கோயிலை சுற்றி உருளுதண்டம் போட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். பின்னர் குழந்தை வரம்  வேண்டி பெண்கள் பலர் பூசாரியிடம் மடியேந்தி பிரசாதம் வாங்கி உண்பர். இதையடுத்து அம்மன் அருள் வந்து ஆடும் பூசாரிகளும், பெண்களும் கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அதிரசம் சுட்டு, அதனை அம்மனுக்கு படையலிட்டு வழிபடும் வைபவம் நடக்கும். இந்த அதிரசத்தை சாப்பிட்டால் குழந்தை இல்லாத பெண்களுக்கு நிச்சயம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஆண்டாண்டு காலமாய் தொடரும் ஐதீகம். இதேபோல் நேர்த்திக்கடனாக ஆடுகளை பலியிட்டு கறி விருந்து படைக்கும் நிகழ்ச்சியும் விழாவில் களைகட்டும். நாடகம், பாட்டு, கரகாட்டம், குறவன் குறத்தி, ஒயிலாட்டம் என்றும் நமது பாரம்பரிய அடையாளங்கள் அனைத்தும் சென்னம்மாள் கோயில் விழாவில் இடம் பெறுவது கூடுதல் சிறப்பு.

Related Stories: