தீயவர்களை அழிக்க இசக்கி அவதாரம்

நாகர்கோவில் கோட்டாறில் இருந்து பார்வதிபுரம் செல்லும் சாலையில் உள்ளது நடுக்காட்டு இசக்கி அம்மன் கோயில். முன்பு அடர்ந்த வனமாக இருந்த இந்த பகுதியில் நடுக்காட்டில் கோயில் இருந்ததால், பக்தர்களால் நடுக்காட்டு இசக்கி அம்மன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பகலில் கூட செல்ல அச்சப்படும் இந்த பகுதியில் உள்ள அம்மன் கோயிலில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். மன்னர் ஆட்சி காலத்தில், குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன. மரண தண்டனைக்கு ஆளானவர்களை இந்த பகுதியில் தான் தூக்கில் இட்டனர். தூக்குமரத்தை கழுவு எனவும், தூக்கிலிடுவதை கழுவேற்றுதல் எனவும் கூறுவது வழக்கம். எனவே இந்த பகுதியை கழுவன்திட்டை எனவும் அழைத்தனர்.

பார்வதிபுரம் பகுதியில் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் தொழிலை செய்தவர்களுக்கு வழங்கப்பட்ட நிலம் ஆராச்சர் நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் அமைந்துள்ள இசக்கி அம்மன் கோயில் எந்த ஆண்டு தோன்றியது என்பதை அறிய முடியவில்லை. எனினும் சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது. ஆகவே இந்த கோயில் மிகவும் பழமையான கோயில் என்பதை அறிய முடிகிறது. பார்வதிதேவியின் அவதாரங்களில் ஒன்று இசக்கி. தீயவர்களை அழிக்க பார்வதி தேவி எடுத்துக் கொள்ளும் அவதாரம் இதுவாகும்.

சிலப்பதிகாரத்தில் மாதவி இசக்கி அம்மன் கோயிலுக்கு சென்று பால் சோறு படைத்து வணங்கியதாக இளங்கோவடிகள், ‘பூங்கண் இயக்கிக்கு பால்ச் சோறுபடைத்தும் பண்பில் பெயர்வோள்’ எனக் குறிப்பிடுகிறார். தேவியின் இடது பக்கம் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். முருகன், ஐயப்பன் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. 1984ல் மக்கள் இந்த கோயிலை புதுப்பித்து நித்திய வழிபாடுகள் செய்து வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இங்கு பக்தர்கள் அதிகம் வருகின்றனர். ஆவணி மாதம் திருவிழா மற்றும் சித்திரை 1ம் தேதி சித்திரை விஷூ கணி காணல் நிகழ்ச்சியின் போது, பக்தர்களுக்கு கை நீட்டம் மற்றும் காய் கனிகள் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

Related Stories: