திருமண தடை நீங்க வல்வில் ராமன் வழிபாடு

* அருள்மிகு வல்வில் ராமன் கோயில்

Advertising
Advertising

சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில். இக்கோயிலின் பிரதான இறைவனாக ஸ்ரீ ராமர் வல்வில் ராமன், சக்கரவத்தி திருமகன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல விருட்சமாக புன்னை மரம் இருக்கிறது. கோயிலின் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ கோயில்களில் ஒன்றாக இது இருக்கிறது. ஜடாயு எனப்படும் கழுகுகளின் தலைவனாகிய புள்ளிற்கு ராமன் ஈமைக்கிரியைகள் செய்த தலம் என்பதால் இது திருபுள்ளம் பூதங்குடி ஆனது.

தல புராணத்தின் படி சீதா பிராட்டியாரை தனது புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு இராவணன் கவர்ந்து சென்ற போது, பட்சிகளின் ராஜனாகிய ஜடாயு சீதா தேவியை மீட்க ராவணனை எதிர்த்து போரிட்டார். மிகுந்த ஆற்றல் வாய்ந்த இராவணன் ஜடாயுவை தீவிரமாக காயப்படுத்தி, ஜடாயுவின் இரண்டு இறகுகளையும் வெட்டி வீழ்த்தினான். சீதையை தேடிக்கொண்டு இப்பகுதிக்கு வந்த ராம லட்சுமணர் ராமரின் பெயரை முனகிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜடாயுவை கண்டு அவரை அசுவாசப்படுத்தினர். தன்னை ஸ்ரீராமர் ஏந்தியிருக்க இராவணன் சீதையை இலங்கைக்கு கவர்ந்து போன செய்தியை கூறிய பின்பு உயிர் நீத்தார் ஜடாயு. ஜடாயுவின் வீரம் மற்றும் தன் மீதான பக்தியை எண்ணி உருகிய ஸ்ரீராமர் ஜடாயுவிற்கு தானே மகன் ஸ்தானத்தில் இருந்து ஈமை கிரியைகளை செய்ய முற்பட்டார்.

ஈமை கிரியைகள் செய்ய மனைவி உடன் இருப்பது அவசியம். இதை எண்ணிய ராமர் தன் மனைவி சீதா தேவியை மானசீகமாக நினைத்தார். அப்போது சீதையின் மறுஅம்சமான பூமாதேவி தோன்றி ஸ்ரீ ராமருடன் இணைந்து ஈமைக்கிரியைகளை செய்தனர். இதனடிப்படையிலேயே இந்த வல்வில் ராமர் கோயில் கட்டப்பட்டது. அருள்மிகு வல்வில் ராமர் கோயில் சிறப்புகள் பொதுவாக ராமர் கோயில்களில் ராமர் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால் இந்த வல்வில் ராமர் கோயிலில் ராமர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கிழக்கு திசை நோக்கி புஜங்க சயன கோலத்தில் சோபன விமானத்தின் கீழ் சயனித்தவாறு பக்தர்களுக்கு காட்சி தருகிறார். வைணவர்களை பொறுத்தவரை இரண்டு பூதபுரிகள் உண்டு. ஒன்று காஞ்சிபுரத்தில் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீ பெரும்புதூர். இதை ஆழ்வார்கள் சிறப்பித்தார்கள்.

மற்றொன்று தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் இந்த புள்ளம் பூங்குடி இதை வைணவ ஆச்சாரியர்கள் சிறப்பித்தார்கள். நவகிரகங்களில் புதன் கிரகத்திற்குரிய பரிகார கோயிலாக வல்வில் ராமன் கோயில் இருக்கிறது. திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட திருமண தடை நீங்கும். வேலைகளில் இருப்பவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க இக்கோயிலில் இருக்கும் நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து வழிபடுவதால் பதவி, உத்தியோக உயர்வுகள் கிடைக்கப்பெறுவர்கள் என்பது பக்தர்களின் வாக்காக இருக்கிறது. கோயில் அமைவிடம்-அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்புள்ள பூதங்குடி என்கிற ஊரில் அமைந்துள்ளது. கோயில் நடை திறப்பு-காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும். கோயில் முகவரி அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில் திருப்புள்ள பூதங்குடி தஞ்சாவூர் மாவட்டம் – 612301. தொலைபேசி எண் 9443525635.

Related Stories: