கூட்டுக் குடும்ப வாழ்வே பெரு வாழ்வு

எங்கள் தீபங்களில் ஒளி வந்தது 20

இன்றைய சூழலில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை அதிகம் கோருபவை குழந்தைகளின் வாழ்க்கை மட்டுமல்ல. முதியவர்களின் வாழ்க்கையும்தான். இன்று எளிதில் கண்டறிய முடியாது காரணங்களால் மிகுந்த மனப் போராட்டத்திற்கு முதியவர்கள் ஆளாகிறார்கள்.   வயது முதிர்ந்த பெற்றோர்களை அவர்தம் வாரிசுகள் கைவிட்டால் அவர்களிடம் கண்டிப்பு காட்டவும் தண்டிக்கவும் சட்டங்கள் வந்துவிட்டன. அயல்நாடுகளில் குழந்தைகளை துன்புறுத்தினால் குழந்தைகளுடைய புகாரின் பெயரில் பெற்றோர் கைது செய்யப்படுவது சர்வ சாதாரணம். இந்தியாவில் பெற்றோர்களின் புகார் கேட்டு வாரிசுகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டிய விசித்திரமான சூழல் வந்து கொண்டிருக்கிறது இன்றைய முதியோர்களின் முக்கியமான சிக்கல் அவர்கள் பல்லாண்டுகள் காப்பாற்றி வந்த வாழ்க்கைமுறை சில ஆண்டுகள்முன் சீட்டுக்கட்டாய் கலைத்துப் போடப்பட்டதுதான். பண்பாட்டு மாற்றங்களில் சில நூறாண்டுகளைத் தாண்டி நிற்கிறது மானுடம். அந்தத் தாண்டலுக்குத் தக்க  முறையில் வாழ்க்கையை வார்த்துக் கொண்டது வாலிபம். ஆனால் திசை தெரியாமல் தள்ளாடி நிற்கிறது வயோதிகம்.  

தங்கள் பெயரன் பெயர்த்திகளின் வாழ்க்கைப்போக்குகள் தங்கள் பிள்ளைகளுக்கே புரியாத போது   முதியவர் உணர்ந்திட வழியேது?உணவுமுறை மாற்றம், உணர்வுமுறை மாற்றம், உறவுமுறை மாற்றம் ஆகியவற்றின் அசுர வேகம் முதியவர்கள் பலரையும் மிரண்டு நிற்க வைக்கிறது. முன்னொரு காலத்தில் அடுத்தடுத்த தலைமுறைகளைக் கட்டிப்போடவோ, குறைந்தது அவர்கள் கவனத்தை ஈர்க்கவோ முதியவர்கள் கைகளில் இருந்தது சமையல் சாம்ராஜ்ஜியம். “பாட்டியின் கைமணம்” என்றும் இன்றைய நடுத்தர வயதினரான நாம் பேசிவந்த சொற்கள் கூட இன்றைய உலகில் புழக்கத்தில் இல்லை.   வளரும் வாரிசுகளின் சமையல் விருப்பங்களுக்கோ வளர்ந்த வாரிசுகளின் சமையல் கருவிகளுக்கோ சம்பந்தமேயில்லாத முதியவர்கள்  அவசரம் அவசரமாய் நடக்கும் அரைவேக்காட்டுச் சமையல்களுக்கு மௌன சாட்சிகள் மட்டுமே.என்னதான் சொன்னாலும் தங்கள் பாரம்பரிய உணவுவகைகள் வழியாக தங்களின் இருப்பையும் முக்கியத்துவத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு சிற்சில ஆண்டுகள் முன்புதான் முதியவர்களிடமிருந்து பறிக்கப்பட்டது.  

இந்த வீழ்ச்சியைத் தாங்க முடியாத பெரியவர்கள் சுழற்சி முறையில் மகன்வீடு சென்றாலும் மகள்வீடு சென்றாலும் தங்களையே அந்நியமாய் உணர்வதும் இதனால்தான். பாட்டிக்கு பெயரர்களுக்கு கையில் உருட்டிப் போடும் நேரங்களில் தாத்தாவைப் பற்றிச் சொல்வதற்கு எத்தனையோ கதைகள் இருக்கும்.அந்தக் கதைகள் வழி தாத்தாவின் கதாநாயக ஆளுமைகள் மீட்டெடுக்கப்படும்.இன்றோ பல வீடுகளில் பெரியவர்கள் பெயரர்களிடம் பேச்சுக் கொடுப்பதே அவர்கள் படிப்புக்கு இடையூறாகப் பார்க்கப்படுகிறது. அல்லது சில சொற்கள் தாண்டி அவர்களுடன் பேச குழந்தைகளுக்கு ஏதுமில்லை என்றநிலை உருவாகிவிட்டது.  உணர்வு நிலையில் அன்றாட வாழ்க்கை அவசரங்களால் அடித்துச் செல்லப்படுவதால் தாண்டிச் செல்லும் படகுகளைப் பார்த்தபடி தனிமைத் தீவில் நிற்கிறார்கள் பெரியவர்கள். தங்கள் வாரிசுகள் விரையும் வேலைப்படகு, பெயரர்கள் பயணம் செய்யும் படிப்புப் படகு எதிலும் இவர்கள் செய்ய எதுவுமில்லை.   

பதின்வயதுப் பெயரர்கள் படிக்கும் நேரங்களில் வீட்டிலிருக்கப் பிடிக்காமல் குடியிருப்புகளின் நடைபாதைப் பூங்கா இருக்கைகளுக்குத் தற்காலிக இடப்பெயர்ச்சி நடக்கிறது முதியோர்களுக்கு. மகனோமகளோ தங்கள் வாரிசுகளின் மதிப்பெண்களைக் கூட்ட வீட்டில் நடத்தும் புரட்சியை அவர்கள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ன? இன்னொரு பக்கம் உணர்வு ரீதியாய் அவர்கள் தங்களையே அடையாளப்படுத்திக் கொண்ட சுற்றங்கள் விட்டு விலகிய நிலை.பெருநகரச் சித்தாந்தங்களில் முக்கியமானது,‘‘உறவுகளோடு பழக்கமில்லை. நண்பர்கள்போல் நெருக்கமில்லை” என்பதுதான். குருதிசார் உறவுகளால் குளறுபடிகளே மிச்சம் என்று தொழில்முறையில் பழகிய நண்பர்களை சிக்கெனப் பிடிக்கின்றனர் வாரிசுகள். அத்தகைய நண்பர்களுக்கு வீடுகளில் அடிக்கடி நடக்கும் விருந்துகளில் வரவேற்று சில வார்த்தைகள் பேசிவிட்டு தங்கள் அறைகளுக்குள் முடங்கிக் கொள்ளும்படி முதியவர்கள் நாசூக்காய் வழிநடத்தப் படுகிறார்கள்.   

விருந்தினர்கள் வருகை எட்டு மணிக்கென்றால். ஏழு மணிக்கே பெரியவர்களுக்கு உணவு பரிமாறி,”நீங்க வேணும்னா படுத்துக்குங்களேன்”என்று அன்பாய்ச் சொல்வது ஆரம்பநிலை. விபரம் புரியாமல் விவேகமில்லாமல் ஆர்வம் காட்டும் முதியவர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுவதும் உண்டு. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.இன்றைய உலகின் போக்கு பிடிபடாத நிலையில் நிகழ்கால அம்சங்கள் குறித்துப் பெரியவர்கள் பேசும் பேச்சு பொருந்தாமல் போகிறது.கடந்த காலம் குறித்த அவர்களின் நினைவுமீட்டல் சுருதி தப்பிப் போகிறது.உணவுப் பழக்கம் உணர்வு நிலைகள் உறவுமுறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முதியோர் வாழ்வில் மிக நுண்ணிய திசைமாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.   முன்பின் தெரியாத ஊரில் கொண்டுவந்த கைப் பொருள்களையும் கைப்பேசியையும் களவு கொடுத்துவிட்டு ஒருவன் திகைத்து நிற்பதுபோல் ஐம்பது அறுபது வயதுவரை தங்கள் கைகளுக்குள் பத்திரமாய் இருந்த வாழ்க்கைமுறைகள் மொத்தமாகக் காணாமல் போனதில் திகைத்து நிற்கிறார்கள் முதியவர்கள்.

தங்களுக்குப் பழகிப் போன பழைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள இனிமேல் அவர்களால் இயலாது.அவர்களின் பழைய அணுகுமுறைகளையும் அவதானிப்புகளையும் அப்படியே அனுமதிக்க அடுத்த தலைமுறையாலும் அதற்கடுத்த தலைமுறையாலும் முடியாது.   எடுத்துக் காட்டாய் ஒரு சூழ்நிலை. தாத்தாவின் பெயர் முருகன் என்றால் “முறுக்கு”என்ற பண்டத்தின் பெயரைக்கூட சொல்லத் தயங்கும் பாட்டிக்கு தன் மகனை தன்னுடைய மருமகள் தன்னெதிரிலேயே பெயர்சொல்லி அழைப்பதைக் கேட்டால் வயிறு பதறுகிறது.அதேபோல தன்னுடைய தந்தைக்கெதிரே நின்றும் பேசாத தாத்தாவுக்கு தன்னுடைய பெயரன் தன் மகனருகே கால்மேல் கால் போட்டுக் கொண்டு சாவதானமாகப் பேசுவது, சகிக்க முடியாத விஷயமாகிறது.  “நமக்கென்ன”என்று கண்டும் காணாமல் போகிற சூதும் தெரியாத வெள்ளந்தி மனிதர்கள் வெளிப்படையாய்ப் பேசி வேண்டாத வம்பை விலைக்கு வாங்கிக் கொள்கிறார்கள். இந்த உலகில் தலைமுறை இடைவெளி ஒன்றும் புதிய அம்சமில்லை.ஆனால் இந்தக் காலத்தில் இருக்கும் அளவு தலைமுறைகள் மத்தியில் இத்தனை பெரிய இடைவெளி இருந்ததில்லை.  தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் எத்தனையோ ஆண்டுகளுக்கொரு முறை ஏற்பட்டு வந்தன. ஒரு தொழில்நுட்பத்தைப் பார்த்துப் பழகவே பத்தாண்டுகள் ஆகும்.

(தொடரும்)

மரபின் மைந்தன் முத்தையா

Related Stories: