பாபா சித்திக் கொலை: கலக்கத்தில் பாலிவுட் நடிகர் நடிகைகள்

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் பாலிவுட் பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர். சல்மான் கான், ஷாருக்கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருடன் நெருக்கமாக இருந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவராக இருந்தவர் பாபா சித்திக். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலம் முன்னணி நிர்வாகியாக இருந்தார். எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி வகித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கடந்த 12ம் தேதி அவர், மும்பையில் உள்ள தனது மகனும் எம்எல்ஏவுமான சீஸன் சித்திக் அலுவலகத்தில் இருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த மூன்று மர்மநபர்கள் பாபா சித்திக்கை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பாபா சித்திக் உயிரிழந்தார். இந்த சம்பவம் மகாராஷ்டிரா அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மற்றொருவரை தேடி வருகின்றனர் இந்நிலையில் பாபா சித்திக் கொலைக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கேங் பொறுப்பேற்றுள்ளது. சிறையில் உள்ள லாரன்ஸ், தன் கூட்டாளிகளுடன் சிறையில் வைத்தே பாபா சித்திக் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளார். பாபா சித்திக் அரசியல் கட்சி தலைவர் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் நல்ல செல்வாக்கு படைத்தவர். முக்கியமாக பிரபல நடிகர் சல்மான் கானுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர். அவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் தான், பாபா சித்திக்கை கொன்றதாக லாரன்ஸ் கேங் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதனால் சல்மான் கானின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஷாருக்கான், சல்மான்கான் போன்ற பாலிவுட் பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ரம்ஜான் காலத்தில் பாபா சித்திக் கொடுக்கும் பிரமாண்ட இப்தார் விருந்து மும்பையில் மிகவும் பிரபலம். விவிஐபிகள் மட்டுமே அதில் கலந்து கொள்வார்கள். அந்த விருந்தில் கலந்து கொள்வதை விஐபிகளே பெருமையாக நினைப்பார்கள். பாலிவுட்டில் இருந்த பல பிரச்னைகளுக்கும் அந்த இப்தார் விருந்து நிகழ்ச்சி தீர்வு கொடுத்துள்ளது.

முன்பு ஷாருக்கான் – சல்மான்கான் இடையே சில மனஸ்தபங்களால் இருவரும் பேசாமல் இருந்தனர். 2013 ஆம் ஆண்டு பாபா சித்திக் நடத்திய இப்தார் நிகழ்ச்சியில் இதற்கு தீர்வு காணப்பட்டது. ஷாருக்கான், சஞ்சய் தத், அனில் கபூர், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், ஷில்பா ஷெட்டி, கேத்ரினா கைஃப், ஊர்மிளா மடோன்கர், சோனு சூட், மாதவன், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் பாபா சித்திக்கின் குடும்ப நண்பர்களாக இருந்துள்ளனர். இதனால் பாலிவுட் நடிகர், நடிகைகளும் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

* குறி, சல்மான் மட்டுமல்ல!

சல்மான் கானை மட்டுமே மிரட்டி வந்த லாரன்ஸ் பிஷ்னோய், யாரும் எதிர்பாராத வகையில் பாபா சித்திக்கை கொன்றுவிட்டார். காரணம், அவர் சல்மானின் நண்பர் என்பதால். அதேபோல், சல்மானுக்கும் பாபா சித்திக்கும் பொதுவான நண்பர்களாக பாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் உள்ளனர். அதிலும் ஷாருக்கான், வருண் தவன், கேத்ரினா கைஃப், அனில் கபூர், பாபி தியோல், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோர் சல்மானுக்கு மிகவும் நெருங்கியவர்கள். இவர்கள் அனைவருமே இப்போது கடும் அச்சத்தில் இருக்கிறார்கள். தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என சிலர் காவல்துறையை நாடியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* மன்னிப்பு கேட்பாரா?

மானை கொன்றதற்காக சல்மான் கான் மன்னிப்பு கேட்டால் அவரை மன்னித்துவிடுவதாக லாரன்ஸ் பிஷ்னோய் கூறியிருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் சட்டப்படி நான் விடுதலை ஆகிவிட்டேன். அதனால் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டேன் என தீர்மானமாக இருக்கிறார் சல்மான் கான். அதே சமயம், மன்னிப்பு கேட்டு விடுங்கள் என இப்போது சல்மானுக்கு ஷாருக்கான் உள்பட சிலர் அறிவுரை கூறி வருகிறார்களாம்.

The post பாபா சித்திக் கொலை: கலக்கத்தில் பாலிவுட் நடிகர் நடிகைகள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: