வேட்டையன் – திரைவிமர்சனம்


த. செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன். அமிதாப்பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், மஞ்சு வாரியர், ரீத்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக எஸ்பி ஆதித்யன்(ரஜினிகாந்த்) , காவல் துறையே நடுங்கும் தைரியம் கொண்ட போலீஸ். அவரது தைரியத்தை நம்பி ஒரு சமூகப் பிரச்னை சார்ந்த புகார் கடிதம் ஒன்றை எஸ்பிக்கு அனுப்பி வைக்கிறார் சரண்யா (துஷாரா விஜயன்). தன்னை நம்பி வந்த புகாரை ஏற்று ஆவண செய்கிறார் ஆதித்யன். தவறென்றாலே என்கவுன்டர் என முடிவு செய்யும் அதிகாரியான ஆதித்யன் அவரது பட்டியலில் எப்பவும் போல ஒரு என்கவுன்டரை நடத்துகிறார். ஆனால் அந்த என்கவுன்டர் என்னவாகிறது, அதற்கான விசாரணைக்காக வரும் சத்யதேவ் (அமிதாப் பச்சன்) என்ன செய்கிறார் என்பது மீதிக்கதை.

ரஜினிகாந்த் … பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல. என்னும் அடைமொழி எக்காலத்திலும் இவருக்கு மட்டும்தான் பொருந்தும். அந்த வகையில் மனிதர் ‘70 வயதா? போடா அதெல்லாம் சும்மா நம்பர்ஸ்‘ என்கிற ரீதியில் மாஸ் கிளாஸ், பட்டக் கண்ணாடி, சுருட்டி விட்ட சட்டை சகிதமாக வந்து நிற்க தியேட்டரில் விசில் பறக்கிறது. இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ஒரு சூப்பர் ஸ்டார் எனில் அவருக்கு ஆலோசனை சொல்ல வேண்டுமானால் இன்னொரு சூப்பர் ஸ்டார்தானே வர வேண்டும். அந்த வேலையைக் கச்சிதமாக செய்ய வந்து நிற்கிறார் அமிதாப் பச்சன். ஆர்பாட்டம் இல்லாத என்ட்ரி, காட் ஃபாதர் போன்ற தோற்றம், அமைதியாக உட்கார்ந்து அப்ளாஸ் அள்ளுகிறார். இருவருக்கும் இடையே ஃபகத் ஃபாசில் பலவேஷம் இல்லாமல் எப்படி ஒரு நாடகம் நடக்காதோ அப்படியான ஒரு கேரக்டர் ஃபாகத் ஃபாசிலுக்கு. வாய்ப்பைப் பயன்படுத்தி ஆங்காங்கே சிரிப்புக்கும் பயன்பட்டிருக்கிறார்.

துஷாரா தான் கதைக்கரு, அவருக்கு இணையாக அசல் கோளாறு என இருவருக்குமே அவரவர் தரப்பில் இப்படம் நிச்சயம் மைல்கல்தான். மஞ்சு வாரியர், ரக்ஷன் இருவருமே ‘ ஜெய்லர் ‘ படத்தின் மிச்சமாகவே தெரிந்தாலும் சில காட்சிகளுக்கு பயன்பட்டிருக்கிறார்கள். அபிராமி, ராணா , கிஷோர், ரித்திகா சிங், ரமேஷ் திலக், என யாருக்கும் சோடை சொல்ல முடியாத பாத்திரம். ரித்திகாவின் பாக்ஸிங் அடித்தளம் போலீஸ் கெட்டப்புக்கு கச்சிதமாகவே பொருந்துகிறது. ‘ஜெய் பீம்‘ மூலம் சமூகத்துக்கான வகுப்பெடுத்த ஞானவேல், கதையும் – மாஸ் காட்சிகளும் சரியாகக் கலந்தால் இன்னொரு கமர்சியலான சமூகப் படம் கொடுக்கலாம் என சினிமா உலகுக்கும் வகுப்பெடுத்திருக்கிறார். ஒரு சில லாஜிக் இடையூறுகள், சில கேள்விகள் எழுந்தாலும் ஒரு பெரிய ஹீரோவை ஒரு சமூகக் கதைக்குள் பயன்படுத்தும் போது சில தியாகங்கள் செய்துதான் ஆக வேண்டும். அதை தவிர்க்க முடியாது. எங்கேயும் பில்டப் காட்சிகள் ஓவர் டோஸ் ஆகாமல் காட்சிக்குள் கலக்கலாக கொடுத்திருக்கிறார்.

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் நடிகர்/நடிகைகள் இளமையாகத் தெரிவது புதிதல்ல. இந்தப் படமும் அப்படித்தான். அத்தனை பேரும் அவ்வளவு அழகு. பாடல் காட்சிகள், மாஸ் காட்சிகளிலும் பொறி பறக்கிறது எனில் பின்னணி இசையில் அனிருத் அதகளம் செய்கிறார். மனசிலாயோ மற்றும் ஹன்டர் பாடல்கள் பிளே லிஸ்ட் ரகமாகத் தெறிக்கின்றன. ஒரு சில குறைகளைத் தவிர்த்தாலும், கிளைமாக்ஸில் என்ன முடிவு என்பதை இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்கலாம். மேலும் மக்கள் எதை எடுத்துக்கொள்ள வேண்டும், எது தேவை என்பது சொல்லியும் சொல்லாமல் முடிவதுதான் சற்றே நெருடல். குடும்பமாகப் பார்க்க முடியுமா எனில் அதுவும் சற்று சந்தேகம் . ஆனால் ‘மஹாராஜா‘ போன்ற முதிர்ந்த கதைகள் கொண்ட படங்களைக் கொண்டாடிய மக்கள் இப்போது பக்குவத்துடன் இருக்கிறார்கள் என நம்புவோம். மொத்தத்தில் எப்படி ஒரு விசேஷ விருந்தில் அத்தனை பதார்த்தங்களும் இலையில் இருக்குமோ அப்படி மாஸ் +கதை+ கருத்து+ கமர்சியல் என அத்தனையும் சரிசமமாக சேர்ந்து விடுமுறை தினத்திற்கு ஏற்ற நல்ல விருந்தாக மாறியிருக்கிறது இந்த ‘வேட்டையன்‘.

The post வேட்டையன் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: