குங்கும சுந்தரியை கரம் பற்றும் காசி விஸ்வநாதர்

* உமையாள்புரம் - கும்பகோணம், தஞ்சை

* வைகாசி விசாக வைபவம் - 18.5.2019

காசி விஸ்வநாதர் குங்குமசுந்தரியுடன் கோலோச்சும் திருத்தலம் உமையாள்புரம். தல மரமாக வில்வமும், தல தீர்த்தமாக காவிரியும்   விளங்குகின்றன. இத்தலத்தில் வைகாசியில் திருக்கல்யாண விழா நடக்கிறது. இவ்வேளையில் இவ்வூரில் உள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் இங்கு   எழுந்தருளி, அம்பிகையை சிவனுக்கு மணம் செய்து வைப்பார்.  இத்தலத்தின் அருகில் சுவாமிமலை, திருவையாறு ஐயாறப்பர், திருவைகாவூர்   வில்வவனேஸ்வரர், வடகுரங்காடுதுறை அழகு சடைமுடிநாதர் கோயில்கள் மற்றும் திவ்ய தேசங்களான கபிஸ்தலம், புள்ளம் பூதங்குடி ஆகியவை   உள்ளன.  பெண்கள் தங்களது கணவர் ஆரோக்கியமாக இருக்கவும், திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமையவும் அம்பிகைக்கு குங்கும   அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

அம்பாள் சந்நதி முன்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்துகின்றனர். இத்தலத்தில் வேண்டிக்கொள்ள காசியில் வழிபட்ட பலன்   கிடைக்கும் என்பது ஐதீகம். அம்பாள் சந்நதியில் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலத்தில் இப்பகுதியில் வசித்த ஒரு பெண், அம்பாள்   மீது தீவிர பக்தி கொண்டவளாக இருந்தாள். ஒரு சமயம் அவளது கணவன், தீராத நோயால் பாதிக்கப்பட்டான். கணவன் குணமாக வேண்டி அப்பெண்,   இத்தல அம்பிகைக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டாள். அம்பாள் அவளது கணவனின் நோயைக் குணப்படுத்தி அருள் புரிந்தாள். இதனால்   அம்பிகைக்கு குங்குமசுந்தரி என்று பெயர் ஏற்பட்டது. அம்பாளுக்கு எதிரே ராஜமகா வல்லப கணபதி தனி சந்நதியில் இருக்கிறார்.

பிராகாரத்தில் விநாயகர், முருகன், பைரவர் ஆகியோர் கொலுவிருக்கிறார்கள். தலவிருட்சம் வில்வம். கந்தர்வப்பெண் உருவாக்கிய தீர்த்தம் ஊர்   எல்லையில் இருக்கிறது. படைப்புக் கடவுளான பிரம்மா கயிலாயம் சென்றபோது, அங்கிருந்த முருகனைக் கவனிக்காமல் சென்றார். முருகன் அவரை   அழைத்து யார் என விசாரித்தபோது, “நானே படைப்புக்கடவுள்’’ என கர்வத்துடன் கூறினார். அவரது ஆணவத்தை அடக்க எண்ணிய முருகன்,   படைப்பிற்கு ஆதாரமான பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்க, அவர் தெரியாமல் விழித்தார். அவரிடமிருந்து படைக்கும் தொழிலைப் பறித்தார்.   சிவபெருமானுக்கும் இதற்குரிய விளக்கம் தெரியவில்லை. எனவே, முருகன் தந்தைக்கே குருவாக இருந்து, அம்மந்திரப் பொருளை உபதேசித்தார். இந்த   நிகழ்வு ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமி மலையில் நிகழ்ந்தது.

உபதேசம் பெற சிவன் வந்த போது அம்பிகையும் உடன் வந்தாள். சிவன் அவளை இத்தலத்தில் இருக்கும்படி சொல்லிவிட்டு, தான் மட்டும் சென்று   உபதேசம் கேட்டார். உமையவளாகிய அம்பாள் தங்கிய தலமென்பதால் இவ்வூர், “உமையாள்புரம்’’ எனப் பெயர் பெற்றது. வைகாசி விசாகத்தன்று காசி   விஸ்வநாதருக்கும், குங்குமசுந்தரி அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். அந்த திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு   திருமணத் தடை நீங்கி திருமணம் முடிந்தவர்கள் அடுத்த ஆண்டு நடக்கும் திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம், புடவை, சீர் பட்சணங்கள் செய்து   கொண்டுவந்து கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றிக்கொள்கின்றனர். மழலை வரம் வேண்டுவோர் வளைகாப்பு வைபவம் நடத்தி பரிகாரம்   பெறுகின்றனர்.

 - சி.லட்சுமி

Related Stories: