பங்குனி பிரமோற்சவ விழா : நாங்குநேரியில் தங்கசப்பரத்தில் சுவாமி வீதியுலா

நாங்குநேரி: நாங்குநேரி பெருமாள் கோயில் பங்குனி பிரமோற்சவத்தின் 7ம் நாளையொட்டி தங்கசப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா 7 நாட்களாக நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் பெருமாளுக்கும் திருவரமங்கைத் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. தினமும் சுவாமி தாயாருடன், கருடன், அனுமன், சிம்மம், ஆளேறும் பல்லக்கு, கருட வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகளும் நடந்தன. மதுரகவி வானமாமலை ஜீயர் சுவாமிகள் தலைமையில் திருக்கோஷ்டியினர் திவ்ய பிரபந்த பாடல்களை பாடி பெருமாள் சப்பர வீதியுலாவில் பங்கேற்று வருகின்றனர்.

ஏழாம் திருவிழாவையொட்டி நேற்று மாலை பெருமாள் தாயாருடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளினார். முன்னதாக கோயில் கல்மண்டபத்தில் சுவாமிக்கு திருமஞ்சனம் தயாரிக்கத் தேவையான மஞ்சளை உரலில் இட்டு உலக்கையால் குத்தி தூளாக்கும் வைபத்தை கோயில் பட்டர்கள் செய்தனர். அதிலிருந்து எடுக்கப்பட்ட மஞ்சள்பொடி திருமஞ்சன பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின் திருவரமங்கைத் தாயாருடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தளிய பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைப் படைத்து ஏராளமானோர் தரிசித்தனர். வரும் 20ம் தேதி 10ம் நாள் திருவிழாவில் தங்க தேரோட்ட வைபவம் விமரிசையாக நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Related Stories: