சென்னை: எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ‘கூழாங்கல்’ பி.எஸ்.வினோத் ராஜ் எழுதி இயக்கியுள்ள படம், ‘கொட்டுக்காளி’. சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசை அமைப்பாளர் கிடையாது. சூரி, அன்னா பென் நடித்துள்ளனர். வரும் 23ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பரபரப்பாகப் பேசியதாவது: ‘கூழாங்கல்’ படத்துக்காக வினோத் ராஜ் ரோட்டர்டேம் விழாவில் விருது வாங்கினார்.
உடனே வினோத் ராஜை வைத்து ஒரு படம் தயாரிக்க முடிவு செய்த நான், கதையைக்கூட கேட்கவில்லை. அவரது திறமையைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகவே படத்தை தயாரித்தேன். சினிமாவில் கிடைக்கும் பணத்தை நல்ல திறமையாளர்களை உருவாக்கவும், சினிமாவை மேலும் உயர்த்தவும் பயன்படுத்துவேன். என்னை உயர்த்திய சினிமாவுக்கு நான் செய்யும் சேவை இது. ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்த இயக்குனர்கள் புஷ்கர், காயத்ரி ஆகியோர், ‘இது சினிமாவுக்கு நீங்கள் செய்யும் சிறந்த சேவை’ என்றனர்.
அவர்களின் வார்த்தை எனக்கு அதிக மகிழ்ச்சி அளித்தது. இப்படத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து, வினோத் ராஜின் அடுத்த படத்தை தயாரிப்பேன். இன்னும் அதிக லாபம் கிடைத்தால், திறமையாளர்களை தேடிக் கண்டுபிடித்து உதவி செய்வேன். இப்படத்தில் வினோத் ராஜ் அரசியல் பேசியிருக்கிறார். ஆனால், எதையும் திணிக்காமல் சொல்லியிருக்கிறார். காமெடியன், ஹீரோ என்பதை எல்லாம் தாண்டி சூரி ஒரு அற்புதமான நடிகர். என்னைவிட அவர் மிகச்சிறந்த நடிகர்.
அவர் ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி. ‘விடுதலை 1’, ‘கருடன்’ ஆகிய படங்கள் வேறு. ‘கொட்டுக்காளி’ படம் வேறு. இதில் நடித்த சூரிக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். ரசிகர்கள் கொடுத்த நடிகர் என்ற அந்தஸ்தை வைத்து, என்னால் என்னென்ன நல்லது செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன். இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார். சூரி, அன்னா பென், பி.எஸ்.வினோத் ராஜ், இயக்குனர்கள் லிங்குசாமி, வெற்றிமாறன், மிஷ்கின், பாலாஜி சக்திவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
The post சூரி ஜெயித்தால் நான் ஜெயித்த மாதிரி: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
