சிதம்பரம் நடராஜருக்கு மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு ஆறு முறை நடராஜ பெருமானுக்கு மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கும். இதில் ஆனி, மார்கழி மாத அபிஷேகங்கள் அதிகாலையில் கோயிலில் ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டப முகப்பிலும், மற்ற நான்கு மாத அபிஷேகங்கள் மாலையில் கோயில் கனகசபையிலும் நடக்கும்.

மாசி மாதத்தில் நடக்கும் மகாபிஷேகம் கோயில் கனகசபையில் நடந்தது. இதனையொட்டி நேற்று காலை மூலவரான சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜப்பெருமான் சித்சபையில் இருந்து கனகசபைக்கு எழுந்தருளினார். அப்போது ஏககால லட்சார்ச்சனை, மகாருத்ர ஹோமம் மற்றும் ருத்ர பாராயணம் நடந்தது.

இரவு 7 மணிக்கு மேல் மூலவருக்கு சந்தனம், பால், தேன், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

Related Stories: