திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் தை பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில், தை பூசத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தை பூசத்தை முன்னிட்டு நேற்று அண்ணாமலையாருக்கும், உண்ணா முலையம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. மேலும், கோயில் 5ம் பிரகாரத்தில் உள்ள கம்பத்திளையனார் சன்னதி, கோபுரத்திளையனார் சன்னதிகளில் அருள்பாலிக்கும் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது.அதைத்தொடர்ந்து, காலை 11.30 மணி அளவில் கிரிவலப்பாதையில் உள்ள ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரிக்கு சுவாமி புறப்பாடு நடந்தது. தவில், நாதஸ்வரம், உடல் இசை முழங்க வீதிவலம் வந்து ஈசான்ய குளக்கரையில் சந்திரசேகரர் வடிவாக அண்ணாமலையார் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து, ஈசான்ய குளத்தில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது.

தீர்த்தவாரி முடிந்து கோயிலுக்கு சுவாமி திரும்பியபோது, அண்ணாமலையாரை தம்முடைய மகனாக பாவித்து வழிபட்ட வள்ளால மகாராஜா இறந்த செய்தியை, ஓலைச்சுவடியில் இறைவனுக்கு வாசித்து அறிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வள்ளால மகாராஜாவின் மறைவு துயர் தகவல் தெரிந்ததும், தவில், நாதஸ்வர இசை உடனே நிறுத்தப்பட்டது. எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல், கோயிலுக்கு சுவாமி சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, வரும் மாசி மகத்தன்று, பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் வள்ளால மகாராஜாவுக்கு நடைபெறும் திதி மற்றும் கவுதம நதியில் நடைபெறும் தீர்த்தவாரியில் சந்திரசேகரர் எழுந்தருள்வார்.

Related Stories: