அஞ்சாமை போன்ற படங்களால் அரசியல் மாற்றம்: ரகுமான் நம்பிக்கை

சென்னை: விதார்த், வாணி போஜனுடன் முக்கியமான வேடத்தில் ரகுமான் நடித்துள்ள படம் ‘அஞ்சாமை’. சுப்புராமன் இயக்கிய இப்படம், நீட் தேர்வின் அவலங்களை பற்றி கூறியிருந்தது. இதில் நடித்தது பற்றி ரகுமான் கூறியது: இந்த படத்தின் கதையை இயக்குனர் சுப்புராமன் சொன்னதும், நான் உடனே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். காரணம், கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் பின்னணியில் இதன் கதை இருந்தது.

அந்த சம்பவம், என்னை மனதளவில் பாதித்தது. நீட் தேர்வு எழுதுவதற்காக தனது மகனை ஜெய்ப்பூருக்கு அழைத்து செல்லும் தந்தை, உடல் நிலை பாதிக்கப்பட்டு வழியிலேயே இறக்கிறார். பிறகு தனியாக தத்தளிக்கும் மகன், அப்பாவின் சாவுக்கு இந்த சிஸ்டம்தான் காரணம் என போராட ஆரம்பிக்கிறான். அந்த மாணவனுக்கு உறுதுணையாக இருந்து வாதாடும் வக்கீலாக நடித்தது பெருமையாக கருதுகிறேன். இதுபோன்ற உண்மை சம்பவங்களை வெளியே கொண்டு வரும்போதுதான் நீட் தேர்வால் நடக்கும் அவலங்களை பற்றியும் சமூகம் அறிந்து கொள்ள முடியும். இத்தகு படங்களால்தான் அரசியல் மாற்றங்களும் சாத்தியமாகும்.

படத்தை பார்த்த சமூக ஆர்வலர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தை அனைவருமே தியேட்டரில் குடும்பத்துடன் பார்க்க வேண்டும்.
விஷால் நடித்து இயக்கும் ‘துப்பறிவாளன் 2’, ஜெயம் ரவி நடிப்பில் அகமது இயக்கும் ‘ஜனகணமன’ ஆகிய படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் ‘1000 பிளஸ் பேபிஸ்’, ‘பேட் பாய்ஸ்’, ‘ஐ நோ மீ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இவ்வாறு ரகுமான் கூறினார்.

The post அஞ்சாமை போன்ற படங்களால் அரசியல் மாற்றம்: ரகுமான் நம்பிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: