அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவலில் தண்டினீ பீடம் எனும் ஞானசக்தி பீடத்தில் வாராஹியின் அம்சமாக அருள்கிறாள் அகிலாண்டேஸ்வரி. தல விருட்சமாக வெண்நாவல் மரமும், நவ தீர்த்தங்கள் தல தீர்த்தங்களாகவும் உள்ள திருத்தலம். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்க, கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் அமைய, விவசாயம் செழிக்க, தண்ணீர் பஞ்சம் ஏற்படாதிருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். சிவன், அம்பாளுக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள். சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தில், அகிலத்தை (உலகம்) காப்பவளாக அம்பிகை அருளுவதால் ‘அகிலாண்டேஸ்வரி’ என்றழைக்கப்படுகிறாள்.

‘அகிலாண்டேஸ்வரி’, இத்தலத்தில் ஜம்புகேஸ்வரரை உச்சிக் காலத்தில் பூஜிப்பதாக ஐதீகம். எனவே மதிய வேளையில் அம்பாளுக்கு பூஜை செய்யும் அர்ச்சகர், அம்பாள் அணிந்த புடவை, கிரீடம் மற்றும் மாலையைத் தான் அணிந்து, கையில் தீர்த்தத்துடன் மேளதாளம் முழங்க சிவன் சந்நதிக்கு செல்வார். சுவாமிக்கு அபிஷேகம் செய்து, கோமாதா பூஜை செய்துவிட்டு அம்பாள் தன் சந்நதிக்குத் திரும்புவார். இந்த பூஜையை அம்பாளே நேரில் சென்று செய்வதாக ஐதீகம். இந்நேரத்தில் அர்ச்சகரை அம்பாளாக பாவித்து பக்தர்கள் வணங்குகின்றனர்.

Related Stories: