வரும் 19ம் தேதி திரைக்கு வரும் படம், ‘கொம்புசீவி’. பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார், தார்னிகா நடித்துள்ளனர். பாலசுப்ரமணியெம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படம் குறித்து சண்முக பாண்டியன் கூறுகையில், ‘இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். திரைத்துறையில் நீண்ட கால அனுபவம் கொண்ட பலர் என்னுடன் நடித்தனர். எனது தந்தை கேப்டன் விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான சரத்குமார் சார் நடித்துள்ளார். படத்தில் பணியாற்றியதில் இருந்து எனக்கும் அவர் நெருங்கிய நண்பராகி விட்டார். அவருடன் பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை பார்த்த பிறகு நானும் பொன்ராமின் தீவிர ரசிகனாகி விட்டேன்.
அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டேன். அப்போது எனது தந்தைக்கு ‘ஊதா கலரு ரிப்பன்’ என்ற பாடல் மிகவும் பிடிக்கும். அவரிடமும் ‘கொம்புசீவி’ படத்தின் கதை சொல்லப்பட்டது. கேட்டுவிட்டு பெரிதும் ரசித்தார். எனவே, அவரது ஆசியுடன்தான் இப்படம் உருவாகியுள்ளது. என்னிடம் இருக்கும் நகைச்சுவை நடிப்பையும், எதிர்வினையையும் பொன்ராம் வெளியே கொண்டு வந்தார். நான் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு விசேஷ பயிற்சி பெற்றேன். இதனால், எல்லா காட்சியிலும் பதற்றம் இல்லாமல் நடிக்க முடிந்தது. இது ரொம்ப சீரியஸான கதை. ஆனால், அதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம்’ என்றார்.
