சூரிய ஒளியின் மகத்துவம்!

ஜோதிடம் என்ற மருத்துவம் - 49

நிச்சயமாக ஜோதிடக் கலையின் துணையோடு மருத்துவம் என்கிற அறிவியல் உலகிற்கு ஆலோசனை சொல்ல இயலும். வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் அளவிற்கு நீராகாரம் பருகி வர வேண்டும் (முதல் நாள் இரவில் சாதத்தில் ஊற்றி வைத்த நீராக இருக்க வேண்டும்), அதனுடன் மருத்துவர்கள் தருகின்ற மருந்தினையும் தவறாது உட்கொண்டு வரவேண்டும், தினமும் காலை சூரிய உதயத்தின்போதும், மாலை சூரிய அஸ்தமனத்தின்போதும் சூரியனின் ஒளி அந்தக் குழந்தையின் மீது விழவேண்டும் என்பதான ஆலோசனைகளை மருத்துவ ஜோதிடம் வழங்கியிருக்கிறது. வெங்காயம், வெள்ளைப் பூண்டு ஆகியவை சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவை. நீராகாரம் என்பது சந்திரனின் சக்தியினை உள்ளடக்கியது.

ஜாதகத்தில் உண்டாகியிருக்கும் சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களின் பலவீனமான நிலையினை இதுபோன்ற உணவுப் பழக்கவழக்கத்தின் மூலம் சமாளிக்க இயலும். அதேபோன்று இந்தக் குழந்தையின்மீது சூரியனின் செயல்பாடு சரியான விகிதத்தில் அமைய வேண்டும் என்பதற்காக காலை, மாலை ஆகிய இரண்டு சந்தியா காலத்திலும் சூரிய ஒளியினை கிரகித்துக் கொள்வது உடல் ஆரோக்யத்தைக் காக்கும் என்ற எண்ணத்தில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நெஃப்ராடிக் சிண்ட்ரோம் என்ற குறைபாட்டினை சரிசெய்ய மருத்துவ உலகத்துடன் இணைந்து ஜோதிட அறிவியலும் துணை நிற்கிறது. தற்போது அந்தக் குழந்தைக்கு நடந்து வரும் செவ்வாய் தசையின் காலம் மருத்துவ சிகிச்சைக்கு துணைபுரியும் என்பதால் முடிந்தவரை மேற்சொன்ன ஆலோசனைகளை கடைபிடித்து வந்தால் செவ்வாய் தசை முடிவடைவதற்குள் இந்தக் குறைபாட்டினை ஓரளவிற்கு சரிசெய்துவிட முடியும்.

மருத்துவ சிகிச்சையும் ஒரே முறையை பின்பற்றுவதாக அமைய வேண்டும். சிறிது காலத்திற்கு அலோபதி மருத்துவம், பிறகு சித்தா, அதனைத் தொடர்ந்து ஹோமியோபதி, ஆயுர்வேதம், அக்குபிரஷர் என்று வெவ்வேறு மருத்துவ முறைகளை மாற்றி மாற்றி பின்பற்றாமல் ஏதேனும் ஒரே முறையை பின்பற்றி வருவது நல்லது. வந்திருக்கும் நோயின் தீவிரத்தினை உணர்ந்து ஏதேனும் ஒரு மருத்துவமுறையை மட்டும் தொடர்ந்து பின்பற்றுவதோடு ஜோதிட அறிவியல் சொல்லும் ஆலோசனையையும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் நிச்சயமாக உடல் ஆரோக்யத்தினைக் கட்டிக் காக்க இயலும். ஜோதிடர்கள் என்றாலே அலோபதி மருந்துகளுக்கு எதிரான எண்ணத்தினைக் கொண்டவர்கள் என்ற தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது. மருத்துவ ஜோதிடம் (மெடிக்கல் அஸ்ட்ராலஜி) என்பது அலோபதி மருத்துவத்திற்கு எதிராகச் செயல்படுவது அல்ல.

பாரம்பரியம்மிக்கது என்ற எண்ணத்தோடு இந்திய மருத்துவ முறை மட்டும்தான் சிறந்தது என்று வாதிடுவது ஜோதிட அறிவியலின் நோக்கமும் அல்ல. ஐரோப்பிய நாடுகளில் உள்ள மருத்துவ ஜோதிடர்களின் ஆராய்ச்சி அலோபதி மருந்துகளை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். வேதிப்பொருட்களை தனக்குள் உள்ளடக்கிய அலோபதி மருந்துகளின் மீதும் மருத்துவ ஜோதிடத்திற்கு முழுமையான நம்பிக்கை உண்டு. அதே நேரத்தில் உணவு பழக்கம் என்று வரும்போது அந்த நாளைய பாரம்பரிய உணவுகளான நீராகாரம், சுண்டைக்காய், மணத்தக்காளி, மிளகு, இஞ்சி ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை மருத்துவ ஜோதிடர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

பாட்டி வைத்தியம் என்று அழைக்கப்படும் கஷாயம், லேகியம் போன்றவை வருமுன் காக்கும் நோய்த்தடுப்பு மருந்துகள் என்ற கூற்றினில் அசாத்தியமான நம்பிக்கையும் ஜோதிடத்திற்கு உண்டு. அந்தந்த நாடுகளின் தட்பவெப்பநிலைக்கு ஏற்ப அந்தந்த நாட்டு உணவுப்பழக்கம் என்பது நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன நாகரீகம் என்ற பெயரிலும், வீண் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டும் இந்தப் பழக்கத்தினை மாற்றும்போதுதான் உடல்நிலையில் பிரச்னை என்பது உண்டாகிறது. இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் நமது உடல்நிலை மட்டுமல்ல, நமக்குப் பின்னால் வரும் சந்ததியினரும் முழு ஆரோக்யத்துடன் வாழ்வார்கள்.

திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத்சர்மா

(தொடரும்)

Related Stories: