புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு

நெல்லை: புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசியை முன்னிட்டு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் உள்ளிட்ட மாநகரில் உள்ள சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். ஆடல் கலைகளின் முதல்வனாகத் திகழும் சுவாமி நடராஜருக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தப்படுவது வழக்கம். அதாவது மார்கழி திருவாதிரை, மாசி வளர்பிறை சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி ஆகிய 6 தினங்களில் நடத்தப்படும் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்பவர்களுக்கு வேண்டும் வரங்களை நடராஜர் தந்தருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.  

Advertising
Advertising

இந்நிலையில் புரட்டாசி மாத வளர் சதுர்த்தசி தினமான நேற்று நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். இதே போல் தச்சநல்லூர் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி தினத்தையொட்டி நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், தவமணி ஈஸ்வரருக்கு மாப்பொடி, மஞ்சட்பொடி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களாலும், பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களாலும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரமாகி மஹா தீபாராதனை நடந்தது. பூஜைகளை கோயில் அர்ச்சகர் கைலாச சிவம்  முன்னின்று நடத்தினார்.

இதையொட்டி  திருவாதவூரார் அருட்பணி மன்றத்தினர் திருவாசகம் முற்றோதினர். மதியம் 1 மணிக்கு மகேஷ்வர பூஜையை தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அருட்பணி மன்ற செயலாளர் இசக்கியப்பன், பொருளாளர் ரவிசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள், கல்யாணசுந்தரம் பிள்ளை, மாரியப்பன் உள்ளிட்ட சிவனடியார்கள் மற்றும் பெண்கள் என திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பாளை திரிபுராந்தீஸ்வரர் கோயில், குறிச்சி சொக்கநாதர் கோயில், சந்திப்பு கைலாசநாதர் கோயில், சிந்துபூந்துறை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், டவுன் தொண்டர்கள் நயினார் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

Related Stories: