முற்றும் கண்ட ராமக்கோன் நெல்லையப்பர் கோயிலில் சிறப்பு வழிபாடு

நெல்லை: நெல்லை டவுன் நெல்லையப்பர் காந்திமதியம்பாள் கோயிலில் முற்றும் கண்ட ராமக்கோனுக்கு 2ம் ஆண்டாக நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. நெல்லை அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ராமக்கோன். இவர் கடந்த கி.பி. 7ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரண்மைக்கு வேணுவனம் என்றழைக்கப்பட்டு வந்த நெல்லை மூங்கில்காட்டை கடந்து தினமும் பால் கொண்டுசெல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவ்வாறு ஆவணி மாதத்தில் சென்ற போது குறிப்பிட்ட இடத்தில் தினமும் மூங்கில் மரத்தால் கால் இடறி ராமகோன் கீழே விழுந்தாராம்.

அதை மன்னரிடம் தெரிவித்து அந்த இடத்தில் வளர்ந்திருந்த மூங்கிலை கோடாரியால் வெட்டியபோது ரத்தம் வடிந்ததாம். பின்னர் மூங்கிலிருந்த பகுதியைத் தோண்டியபோது சிவலிங்கம் காணப்பட்டதாம். இதை காணும் பாக்கியம்பெற்ற அவர், முற்றும்கண்ட ராமக்கோன் என அழைக்கப்பட்டதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து வேணுவனநாதர் என்ற பெயருடன் நெல்லையப்பருக்கு மூலஸ்தானம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு மூலவரின் சிலையின் தலை பகுதியில் கோடாரியால் வெட்டப்பட்ட தழும்பு இன்றும் கூட, அபிஷேகத்தில் போது முழுமையாகக் காண முடிகிறது.

இக்கோயில் வளாகத்தில் மூலஸ்தானத்திற்கு பின்னால் ராமகோன், அவரது மனைவி ராக்காயி ஆகியோருக்கு சிலைகள் உள்ளன. அங்கு முற்றும் கண்ட தினத்தையொட்டி 2வது ஆண்டாக நேற்று ராமக்கோனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பொற்றாமரை குளத்தில் இருந்து பால்குடத்தை நான்கு ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக பக்தர்கள் எடுத்துவந்து கோயிலை வந்தடைந்ததும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் ராமக்கோனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: