ஜாதகத்தில் சந்திரனின் சாகசங்கள்?

ஒரு ஜாதகத்தில் பலன்களை அறிந்து கொள்ள, பலவகைகளில் சாஸ்திரம் நமக்கு பல கணக்குகளை தந்துள்ளது. அதன்படி ராசி என்பது ஒருவர் பிறந்த  நட்சத்திரத்தின் பாதம் எந்த ராசியில் இருக்கிறதோ அது தான் ஒருவரின் ஜனன ராசியாகும். இதை தீர்மானிக்கும் கிரகம் சந்திரன். சந்திரன் என்ற தினக்கோள், 12  ராசி கட்டங்கள், 27 நட்சத்திரங்கள், 108 பாதங்களை வளர்பிறை, தேய்பிறை என்ற திதி கணக்கில் சுமார் ஒரு மாதத்தில் ராசி மண்டலத்தை அதிவேகமாக  பயணித்து கடந்து செல்கிறது. இந்த சுழற்சி முறையில்தான் காலச்சக்கரம் சுழல்கிறது. இப்படி அதிவேகமாக பயணிப்பதால் சந்திரனுக்கு பயணக் கிரகம் என்ற  பெயர் ஏற்பட்டது.

Advertising
Advertising

சந்திரனின் ஆதிக்கம்

அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பவர் சந்திரன் என்று சொன்னால் அது மிகையாகாது. சந்திரன் சகலகலா வல்லவர், சிந்தனையின் ஊற்று. மனிதர்களுக்கு மிகவும்  முக்கியமான மனம், புத்தி, சிந்தனை இவற்றை சீராக வழங்குபவர் சந்திரன். இதில் குைற ஏற்படும்போதுதான், மனநிலை பாதிக்கப்படுகிறது. பித்தன், பிதற்றன்,  சுவாதீனம் இல்லாதவர் என்ற நிலை ஏற்படுகிறது. இவரின் அருள் கடாட்சம் ஜாதகத்தில் அபரிமிதமாக இருந்தால் எல்லாம் கைகூடும்  பலரும் பணிந்து  பாராட்டுவார்கள். இவரின் பலம் ஜாதகத்தில் குறைந்திருந்தால் ‘விவரம் தெரியாதவர் நம்பத்தகுந்தவர் அல்ல, சொல் ஒன்று செயல் வேறாக இருக்கும்’  என்றெல்லாம் பிறர் தூற்றுவார்கள். சுகம், துக்கம், கோபம், தாபம், ஏக்கம், உணர்ச்சி, நெகிழ்ச்சி, காதல், காமம், களிப்பு, கனிவு, கற்பனை, கவிதை, கனவு, கலை,  காவியம், கசப்பு, சோகம், மறதி, எரிச்சல், வாதம், பிடிவாதம், உடன்பாடு, முரண்பாடு, ஒட்டுதல், உறவாடுதல் என எண்ணிலடங்கா தன்மைகளை, தன்னகத்தே  கொண்டு வாரி வழங்குகிற கிரகம், சந்திரன்.

அதனால்தான் ஜோதிட சாஸ்திரத்தில் ராசி என்பதற்கு மிகவும் முக்கியத்துவம் ஏற்பட்டது. ஒருவர் உயர்நிலையில இருந்தாலும், தாழ்நிலையில் இருந்தாலும்  எல்லோரும் உடனே சொல்வது, ‘அவன் பிறந்த ராசி அது, அதனால்தான் அப்படி இருக்கிறான்,’ என்பார்கள். சந்திரனுக்கு ஒவ்வொருவர் ஜாதகப்படி பல  விஷயங்கள் கூடும், குறையும். ஆனால் பொதுவான விஷயம்  சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன். சந்திரனின் பிறை வடிவத்தை சிவன் தனது  தலையில் சூடிக் கொண்டுள்ளார். இதிலிருந்து சந்திரனின் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். மேலும் மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில்  ‘திருச்சடைமேல்வான் அகமாமதி பிள்ளைபாடி’ என்று வாழ்த்துகிறார்.

சந்திரன் இயற்கை தத்துவப்படி நீருக்கு ஆதாரமாக இருப்பவன். ஜோதிட அமைப்பில் இவருக்கு சொந்த வீடு, ஆட்சி வீடு  கடக ராசியாகும். இது ஜலராசி இதனை  கடக ஆழி என்று சொல்வார்கள். கடல், ஆறு, நீர் நிலைகள், குளம், குட்டை, ஊரணி, ஏரி, கண்மாய், வாய்க்கால், அணைக்கட்டு, நீர்வீழ்ச்சி, ஊற்று, நீரோடை,  கிணறு, பூமியின் அடி ஆழத்தில் இருக்கும் நீர்வளம், அழுகும் பொருட்கள், வெளிநாடு வாசம், கடல் பயணங்கள், மீன் வளம், பச்சை பசும்புல், காய்கறி கனிகள்  விற்கும் இடம், நீச்சல் குளம், பயண வழித்தடங்கள், மீன்பிடித் தொழில், படகு, கப்பல், மாலுமிகள், துறைமுகம், கடல் சார்ந்த அறிவியல் நுட்பங்கள், நதி,  நதிக்கரை, கடற்கரை, ஏற்றுமதி, இறக்குமதி, இரவுக்கு அதிபதி, தாயார், தாய்வழி உறவுகள், சுவாசம், நுரையீரல், இடது கண், இயற்கை பருவ மாற்றங்கள்,  பெண்களின் பருவகால மாற்றங்கள், விவசாயம், செடி கொடிகள், அந்தந்த பருவ காலத்திற்கேற்ப செய்யப்படும் தொழில்கள் என எங்கும் வியாபித்து இருப்பவர்  சந்திரன்.

வான சாஸ்திரம்  ஜோதிட சாஸ்திரம்

சூரியன் இருக்கும் ராசியிலிருந்து சந்திரன் ஒவ்வொரு நட்சத்திர பாதமாக கடந்து செல்லும் இயக்கம்தான், நம் உடல், மன செயல்பாடுகளில் நேரடி தாக்கத்தை  ஏற்படுத்துகிறது. அமாவாசை என்பது சூரியன், சந்திரன் இருவரும் ஒரே ராசியில் சேர்ந்து இருக்கும் காலநேரமாகும். அதேபோல் பவுர்ணமி என்பது சூரியன்  சந்திரன் இருவரும் ஒருவருக்கொருவர் சம சப்தமமாக பார்த்துக் கொள்ளும் அமைப்பாகும். அதாவது சூரியன் இருக்கும் ராசியிலிருந்து சரியாக 7வது ராசியில்  சந்திரன் பயணிக்கும் காலம், பவுர்ணமி. இந்த இரண்டு திதிகளிலும் கடல் மற்றும் புவியீர்ப்பு விஷயங்களில் பலவகையான மாற்றங்கள் நிகழ்கின்றன.  அசாதாரணமான சூழ்நிலைகள் ஏற்படுவதும், வானிலையில் திடீர் மாற்றங்கள், கடல் கொந்தளிப்பு, ராட்சஸ அலைகள், கடல் உள்வாங்குவது என எங்காவது நிகழ்கின்றன.

இந்த மாற்றங்கள் மனிதர்களையும் பாதிக்கிறது. மனம், அமைதி இல்லாமல் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஜாதகத்தில் சந்திரன் பலம்  குன்றியவர்கள் இருப்பு கொள்ள முடியாமல் தவிப்பார்கள். மனவளம், மனநிலை குன்றியவர்களின் நிலை இன்னும் மோசமாக இருக்கும். அவர்களால் இயல்பாக  இருக்க முடியாமல் போகும். எதிரும், புதிருமான மனநிலை கொண்டிருப்பார்கள். சோகம், வருத்தம், விரக்தி கொண்டு படுத்த படுக்கையாக இருப்பார்கள்.  இல்லையென்றால் மிதமிஞ்சிய ஆக்ரோஷத்தில் இருப்பார்கள். ஆத்திரமும், கோபமும், வெறியும், இயலாமையும் மிகுந்து இருக்கும். ஆகையால்தான் அமாவாசை,  பவுணர்மி நாட்களை இறைவழிபாட்டில், பக்தி மார்க்கத்தில் நிலை நிறுத்த ஆன்மிகம் நமக்கு வழிகாட்டுகின்றது.

இந்த இரண்டு நாட்களிலும் பூஜைகள், வழிபாடுகள், பஜனை, தியானம், கூட்டுப் பிரார்த்தனை, சொற்பொழிவுகள், பிரசித்தி பெற்ற திருத்தலங்களுக்கு சென்று  ஒருமித்த கருத்துடைய அடியார்கள் கூட்டத்தில் கலந்திருப்பது எல்லாம் நம் சிந்தனையை ஒருநிலைப்படுத்தும் என்ற நோக்கத்தில் காலம் காலமாக நம்  முன்னோர்கள் கடைபிடித்து வந்த வழிமுறையாகும். சந்திரனின் சுழற்சியும், ஆண், பெண் இருபாலரின் உடல், உயிரியல் சார்ந்த சுழற்சியும் ஒன்றுக்கொன்று நூறு  சதவிகிதம் தொடர்புடையவை. பெண்களின் உடல், மனத்தில் ஏற்படும் மாற்றங்கள், மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின்  கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன. அதனால்தான் ஒரு குழந்தை ஜனிக்கும் காலம் நம் வினைப்பயன்படி ஏற்படுகிறது.

இதைத்தான் மாணிக்கவாசகர், திருவாசகத்தில் ‘உருத்தெறியா காலத்தே என் உட்புகுந்து உளம் மன்னி’ என்று குறிப்பிடுகிறார். அந்தக் கரு உருவாகும்போதே  சந்திரனின் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன. அந்த நேரத்திலிருந்தே எந்த நட்சத்திரத்தில் ஒரு ஆன்மா (குழந்தை) ஜனிக்க வேண்டுமோ, அந்த  நட்சத்திரத்தின் தசா, புக்தி, அந்தரம் எல்லாம் தொடங்கிவிடுகின்றன. அதேபோல் லக்னம் மற்ற கிரக அமைப்புகள் எல்லாமும் முடிவாகி செயல்பட  ஆரம்பிக்கின்றன. இந்தக் கணக்கை வைத்துத்தான் குழந்தை பிறந்தவுடன் ‘மாதா கர்ப்ப செல்லு நீக்கி மீதி இந்த தசையில், இந்த புக்தியில், இந்த அந்தரத்தில்  இவ்வளவு வருடம், மாதம், நாள்’ என்று பஞ்சாங்கத்தின் துணையுடன் கணக்கிடுகிறோம்.

சந்திரனின் செயல்கள்

ஒரு ஜாதகத்தில் மிகவும் முக்கியமானது லக்னம். அந்த இடத்திலிருந்துதான் மற்ற ஸ்தானங்களை பற்றி தெரிந்து கொள்கிறோம். அடுத்தது ராசி. சந்திரன்  இருக்கும் வீடுதான் ராசி. அதேநேரத்தில் குரு இருக்கும் இடத்தையோ, சனி இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதிலிருந்து சந்திரனின்  முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளலாம். சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்த நாள் கொண்டாடுகிறோம், திருமணப் பொருத்தம்  பார்க்கிறோம், ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் ராசியிலிருந்துதான் கோசாரப் பலன்கள், அதாவது குரு,  சனி, ராகுகேது  பெயர்ச்சி, ஏழரை சனி, குருபலம் போன்றவற்றை கணிக்கிறோம். சந்திரன் இருக்கும் நட்சத்திரம், ராசி சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள்  செய்கிறோம்.

சந்திராஷ்டமம்

ஒருவர் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்திற்கு சந்திரன் வரும்போது அதை சந்திராஷ்டம தினம் என்று சொல்கிறோம். தற்போது சந்திராஷ்டமம்  என்பதை சபிக்கப்பட்ட விஷயமாக பெரிதுபடுத்தி பேசுகிறார்கள். 7½ சனியை பற்றியும் இதைப்போலவே பேசுகிறார்கள். சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும்போது  திருமணம், சீமந்தம், பால் காய்ச்சுதல் போன்றவற்றை செய்யமாட்டார்கள். மேலும் ஜாதகத்தில் சந்திரனின் அமைப்பு ஆதிக்கம் போன்றவற்றை வைத்துத்தான் சுப  விஷயங்கள் செய்வது பற்றிய முடிவையும் செய்ய வேண்டும். மேலும் சந்திரன் ஜெனன லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தாலும் உச்சம், ஆட்சி,  நீச்சம் போன்ற அமைப்புக்களில்  இருந்தாலும் சந்திராஷ்டம தோஷம் இல்லை என சில பழமையான ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால்  சந்திராஷ்டமத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. கோச்சார அமைப்பில் 7½ சனி, அஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டம ராகுகேது, குருவின்  அஷ்டம, ஜென்ம சஞ்சாரம் போன்றவை எல்லாம் வருடக் கணக்கில் இருப்பவை. ஜாதகத்தில் தசாபுக்தி யோகம். ஜனன ஜாதக பலம் இருப்பவர்களுக்கு இந்த  கோச்சார பலன்கள் அனுபவ ரீதியாக வேலை செய்வது கிடையாது.

யோகங்கள்

சந்திரன் மூலம்தான் பலவகையான யோகங்கள் ஜாதகத்தில் உண்டாகின்றன. சந்திரனுக்கு கேந்திரத்தில் உள்ள கிரகம் மிகவும் பலம் பெறுகிறது. ஒரு நீச கிரகம்  சந்திரனுக்கு கேந்திரத்தில் நிற்கும்போது அந்த நீச அம்சம் நீங்கி, நீசபங்க ராஜயோக அமைப்பு உண்டாகிறது. சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 4, 7, 10ல் மங்களன்  என்று சொல்லப்படும் செவ்வாய் இருப்பது சந்திர மங்கள யோகமாகும். இதன் மூலம் சொத்து, புகழ், செல்வம், செல்வாக்கு, உயர் பதவி, போலீஸ்,  தீயணைப்புத்துறை, ராணுவம் மற்றும் அரசு உயர் பதவிகள் கிடைக்கும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானத் தொழில், செங்கல் சூளை, நெருப்பு சம்பந்தமான  தொழில்கள் தோட்டம், எஸ்டேட், தோப்பு, நிலபுலன்கள் நிரம்ப இருக்கும்.சந்திரன் இருக்கும் ராசிக்கு 1, 4, 7, 10ல் குரு இருப்பது கஜகேசரி யோகமாகும். இந்த  அமைப்பு பல தோஷங்களை நீக்கும் என ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றது. மேலும் சில நூல்களில் சந்திரனுக்கு எழில் சப்தமமாக குரு இருப்பதுதான்  மிகப்பெரிய ராஜயோகம் என்று சொல்லப்பட்டுள்ளது. சந்திரனுடன் குரு சேர்ந்து இருப்பது குரு சந்திர யோகமாகும். இந்த யோகம் உள்ளவர்கள் நல்ல வசதி,  மதிப்பு, மரியாதையுடன் இருப்பார்கள். இருந்தாலும் ஏதாவது மனக்குறை இருந்து கொண்டே இருக்கும்.

படித்த படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தம் இருக்காது. வெளிநாடுகளில் நீண்ட காலம் தங்கக்கூடிய யோகம் உண்டு. சந்திரனுக்கு இரண்டாம் இடமான  தனவாக்குகுடும்ப  ஸ்தானத்தில் சனி இருந்தால் நிறைகுறைகள் இருக்கும். மற்ற கிரக அமைப்புகளை வைத்து பணம் வரும். திடீர் செலவுகள் இருக்கும்.  இவர்களை கரி நாக்கு உடையவர்கள் என்று சொல்வார்கள், எதை எப்படி பேசவேண்டும் என்று தெரியாமல் பேசி சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். இவர்களின்  பேச்சே இவர்களுக்கு பல நல்ல விஷயங்கள் கூடிவராமல் செய்துவிடும். இந்த அமைப்புதான் 7½ சனியின் கடைசி தனஸ்தான சனியாகும். சந்திரனுக்கு  இரண்டில் புதன் இருப்பது மிகச்சிறந்த அமைப்பாகும். இயல், இசை, நாடகம் போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும். சொற்பொழிவாளர்கள், மேடைப் பேச்சு,  கதாகாலட்சேபம், வாக்கு சாதுர்யம் இருக்கும். வாய் மூலம் பேசி பொருள் ஈட்டும் யோகம் உண்டு.

சந்திரன் கேது

சந்திரனுடன் நிழல் கிரகங்களான ராகுகேது சம்பந்தப்படும்போது கிரஹண தோஷம் உண்டாகிறது. கிரக சேர்க்கைகளில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. இது  அவரவர் வாங்கி வந்த வரம். கிரக சேர்க்கைகள் இருக்கும் இடம். ஜாதக பலம், பூர்வ புண்ணிய பாக்கிய பலம் ஆகியவற்றை வைத்துத்தான் யோக,  அவயோகங்கள் அமைகின்றன. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், ராகுகேது, செவ்வாயுடன் சம்பந்தப்படும்போது அவர் மிகச்சிறந்த மருத்துவராக விளங்குவார்.  எம்.பி.பி.எஸ்  சித்தா, ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ சம்பந்தமான அனைத்து விஷயங்களிலும் ஒருவரை முன்னிறுத்துவது இந்த கிரக அமைப்புதான். மேலும்  வேதாந்த விஷயங்கள், ஆன்மிகம், தியானம், பக்தி, யோகம் போன்றவற்றில் தேர்ச்சி உண்டாகும்.

அதேநேரத்தில் பயம், படபடப்பு, கோபம், வெறி, விரக்தி, இயலாமை, அவமான உணர்ச்சி, சுய பச்சாதாபம், செயல் இழப்பு, பிறரை சார்ந்து இருப்பதால் உண்டாகும்  ஆற்றாமை, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களை சந்திரன், ராகுகேது கிரகங்கள் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பலவீனமான தசை காலங்களில்  இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் சூழ்நிலைகள் வந்துவிடும். இந்த அமைப்புகளுடன் சனி, புதன் சம்பந்தப்படும்போது நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு ஏதேதோ பிதற்ற  ஆரம்பித்து விடுவார்கள். கேதுவால் விரக்தி, வெறி ஏற்படும். சுக்கிரன், குரு, ஏழாம் அதிபதியுடன் சம்பந்தப்படும்போது பெண் மோகம் ஏற்பட்டு, தோல்வியிலிருந்து  விடுபட முடியாமல் அவதிப்பட்டு தவறான பழக்கவழக்கங்களுக்கு ஆளாகிவிடுகிறார்கள். முக்கியமாக 2, 11, 20, 29, 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும்  உணர்ச்சிவசப்பட்டு பேசுபவர்களாகவும், விரைவில் மனச்சிதைவு அடைபவர்களாகவும் இருப்பார்கள்.

புனர்பூ தோஷம்

சனியும், சந்திரனும் ஜாதக கட்டத்தில் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் உண்டாகிறது. ஒரே ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்திருப்பது,  சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது, சனி  சந்திரன் பார்வை, பரிவர்த்தனை, கிழமை, தேதிகள் மூலம் சனிசந்திரன் தொடர்பு ஏற்படுவது எல்லாமே  எதிர்பாராதவிதமாக நடக்கும். மன சஞ்சலம், சபலம் மிகுந்திருக்கும். இவர்களை வசியப்படுத்துவது மிகவும் எளிது. சுலபமாக பிறரின் கைப்பாவையாக  ஆகிவிடுவார்கள். மனம் அலைபாய்ந்துகொண்டே இருக்கும். ஆளுக்கு தகுந்தாற்போல், இடத்திற்கு தகுந்தாற்போல் குண இயல்புகளை சீக்கிரத்தில் மாற்றிக்  கொள்வார்கள். முயற்சி செய்யும்போது முடியாது, நடக்காது என்று நினைத்தால் அப்படியே நடந்து விடும். திருமண விஷயத்தில் எல்லாம் கூடிவந்தாலும்  திருமணம் முடியும் வரை ஒரு நிச்சயமற்றதன்மை இருக்கும். சிலருக்கு நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிடும். திருமண ேததிகள் மாறவும் நேரும்.

முக்கூட்டுக் கிரகங்கள்

சந்திரன், புதன், சுக்கிரன்  இந்த மூன்று கிரகங்களுக்கும் ஜாதக கட்டத்தில் ஏதாவது ஒரு வகையில் ெதாடர்பு ஏற்பட்டால், அதாவது ஒன்றாக சேர்ந்து ஒரே  ராசியில் இருந்தால், ஏதாவது பார்வை, சார பரிவர்த்தனை ஏற்பட்டால் ஜாதகர் அதிபுத்திசாலியாக, பல்கலை வித்தகராக இருப்பார். ஒரு விஷயத்தை பார்த்த  உடனேயே அதை செய்துகாட்டி விடுவார்கள். எந்த வித்தையும் இவர்களுக்கு சுலபத்தில் வரும். ரசனை இவர்களுக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம். மிகப்பெரிய  கலா ரசிகர்களாக இருப்பார்கள். இயல், இசை, நாடகம், நாட்டியம், நடனம், கலை, காவியம், கவிதை, படைப்பு, எழுத்து, பேச்சு எல்லாம் இவர்களுக்கு இந்த  கிரகங்கள் தந்த அருட்கொடையாகும். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்வதில் திறமைமிக்கவர்கள். பேச்சு மற்றும் வார்த்தை ஜாலங்களால் பிறரை  மயக்கி வசப்படுத்தி விடுவார்கள். சஞ்சலமும், சபலமும் அதிகம் இருக்கும். காதல், காம சுகத்தில் விருப்பம் உடையவர்கள். தீய பழக்கவழக்கங்கள் இவர்களை  எளிதில் வந்து பற்றிக் கொள்ளும். வாழ்க்கையில் பல உயர்வு, தாழ்வுகளை சந்திப்பார்கள். நெறி தவறிய வாழ்க்கை காரணமாக  அவமானங்களை சந்திக்க  நேரலாம். எந்தத் துறையில் இருந்தாலும் அதில் எப்படியாவது புகழ், பணம் சம்பாதித்து விடுவார்கள். வக்கீல்களாகவும், ஆடிட்டர்களாகவும் பிரகாசிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

சூரியன் சந்திரன்

சூரியன் இருக்கும் ராசிக்கு அடுத்த ஆறு ராசிக்குள் சந்திரன் இருந்தால் வளர்பிறை. சூரியனுக்கு ஏழில் சந்திரன் இருந்தால் பூர்ண பெளர்ணமி, சூரியனுக்கு எட்டாம்  ராசி முதல் பன்னிரண்டாம் ராசிவரை தேய்பிறை. சூரியனும், சந்திரனும் சேர்ந்து ஒரே ராசியில் இருப்பது நிறைந்த அமாவாசை. இந்த அமாவாசை யோகம் உள்ள  ஜாதகர் பலவகைகளில் திறமைமிக்கவராக இருப்பார். பிடிவாதமாக காரியங்கள் சாதிப்பதில் வல்லவர். தன் விருப்பம், ஆசை, குறிக்கோளை எப்பாடுபட்டாவது,  எந்த குறுக்கு வழியிலாவது, மான அவமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் நிறைவேற்றிக் கொள்வார்கள். இவர்களுடைய நிழல் செயல்களைக் கண்டுபிடிப்பது  மிகவும் கடினம். இவர்கள் படைப்புத் துறையில் புகழ்பெறும் யோகம் உடையவர்கள். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், கவிஞர், கதாசிரியர்,  கல்லூரி பேராசிரியர், விரிவுரையாளராக வருவதற்கு இந்த யோகம் மிகவும் கை கொடுக்கும்.

ஜோதிட முரசு மிதுனம் செல்வம்

Related Stories: